என்னுள் யாவும் நீயாக! – 12

அத்தியாயம் – 12

“பூரி வைக்கட்டுமா மாப்பிள்ளை?” என்று கல்பனா பிரசன்னாவை உபசரித்துக் கொண்டிருந்தார்.

“இல்லை அத்தை, எனக்கு இட்லி போதும்…” என்றவன் இட்லியை மட்டும் வைத்து உண்ண ஆரம்பித்தான்.

அவனின் அருகில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்த வசுந்தரா அவ்வளவு நேரம் இருந்த பயம் போகப் பிறர் அறியாமல் நிம்மதி மூச்சு விட்டுக்கொண்டாள்.

பெற்றவர்களிடம் கணவன் எப்படி நடந்து கொள்வானோ என்ற பயம் அவன் சாதாரணமாக அவர்களிடம் பேசிய பிறகு தான் நீங்கியது.

அருகில் அமர்ந்திருந்தவனும் அவளின் மனநிலையை உணரவே செய்தான்.

ஆனாலும் அவளிடம் காட்டிய இறுக்கத்தை அவளின் வீட்டாரிடம் காட்டவில்லை அவன்.

பிரசன்னாவின் வீட்டில் இருந்து அனைவரும் வந்திருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டே காலை உணவை முடித்தான்.

உணவை முடித்து விட்டு அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

எத்திராஜ், கமலேஷிடம் சாதாரணமாகவே உரையாடினான் பிரசன்னா.

அதில் வசுந்தராவின் நிம்மதி கூடித்தான் போனது.

தீபாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் கணவன் மீதே இருந்தது.

எல்லோரின் முன்பும் ஒருவேளை தன் வீட்டாரிடம் கோபத்தைக் காட்டுவானோ என்ற எண்ணம் அவனின் இலகுத்தன்மையில் தவிடுபொடியானது.

மணமக்கள் மாப்பிள்ளையின் வீட்டிற்குக் கிளம்பும் நேரம் வர, மனைவியின் அறையில் இருந்த தன் துணிகளை எடுக்கச் சென்றான். தானும் அவனின் பின் சென்றாள் வசுந்தரா.

காலையில் காஃபியை எடுத்துச் சென்ற போது அவளின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தவன் பின் அவளைப் பார்த்துவிட்டு அமைதியாக எழுந்து குளியலறைக்குச் சென்றுவிட்டு வந்து அவள் கொடுத்த காஃபியை வாங்கிப் பருகினான்.

பின்னர்ச் சென்று குளித்துவிட்டு தயாராகி வந்தான்.

இயல்பாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தாலும் அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேச மறுத்தான்.

அப்போது தொடர்ந்த அவனின் மௌனம் இதோ இப்போது சாப்பிட்டுவிட்டு வந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது.

கணவனின் பின் வந்த வசுந்தரா “தேங்க்ஸ்…” என்றாள் மெதுவாக.

“எதுக்கு?” என்று பிரசன்னா புருவம் உயர்த்திக் கேட்க,

“என் மேல உள்ள கோபத்தை என் வீட்டு ஆளுங்க கிட்ட காட்டாமல் இருந்ததுக்கு…” என்றவளை கோபத்துடன் பார்த்தான்.

“உன் வீட்டு ஆளுங்க… ஹம்கூம்…?” என்று வார்த்தைகளை இழுத்துக் கேட்டவன், “சரிதான்! நான் உன் வீட்டு ஆளுங்க கிட்ட நல்லா நடந்துகிட்டதுக்குக் காரணம் நீ என் வீட்டு ஆளுங்க கிட்ட நல்லா பழகணும்னு தான். சோ, அதில் என் சுயநலமும் அடங்கியிருக்கு. என் நினைப்பை வீணாக்காம நீயும் என் வீட்டு ஆளுங்க கிட்ட நல்லா பேசினதுக்குத் தேங்க்ஸ்…” என்று அவளைப் போலவே சொன்னான்.

அவன் என், உன் என்ற வார்த்தைகளை அழுத்தமாகச் சொன்ன விதத்திலேயே அவனின் கோபம் தெரிய, மீண்டும் கணவனைக் கோபப்படுத்தி விட்டோம் என்ற உணர்வில் தவிப்புடன் அவனைப் பார்த்தாள்.

அதனைக் கண்டவன் “எங்க வீட்டுக்கு கிளம்ப நேரமாகிருச்சு. கிளம்பு…” என்று பேச்சை மாற்றியவன் தன் பொருட்களைப் பையில் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

‘எங்க வீடா? இனி அது தானே என் வீடும்!’ என்ற எண்ணம் வசுந்தராவிற்குத் தோன்ற, அப்போது தான் என் வீடு என்று பிரித்துப் பேசியதற்குக் கோபப்பட்டவனின் மனநிலை புரிந்தது.

‘நேத்து இருந்து நீ ரொம்பச் சொதப்புற வசு’ என்று தன்னைத்தானே மானசீகமாகத் தலையில் கொட்டிக்கொண்டாள்.

‘நேத்து இருந்து மட்டுமா? அவனைப் பார்த்ததில் இருந்தே நீ அப்படித்தான் ஏதாவது சொதப்புற’ என்று அவளின் மனசாட்சி அவளை இடிந்துரைத்தது.

மீண்டும் மீண்டும் ஏதாவது பேசி அவனைக் கோபப்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று தோன்ற தன் பொருட்கள் அடங்கிய பெட்டியை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

ஏற்கனவே அவளின் பொருட்களைப் புகுந்த வீட்டிற்குச் செல்ல தயாராகச் சேகரித்து வைத்திருந்ததால் வேறு வேலை எதுவும் அவளுக்கு இருக்கவில்லை.

தன் ஒரு நாள் அழுக்கு உடுப்பை எடுத்து வைத்துவிட்டுப் பிரசன்னா கீழே இறங்கி செல்ல முயல, அவளின் இரண்டு பெரிய பெட்டிகளில் ஒன்றை சிரமப்பட்டு எடுத்துக் கொண்டு கணவனின் பின் செல்ல முயன்றாள்.

அவளின் சிரமத்தை ஓரக்கண்ணால் கண்டவன், “இந்தா, இதை நீ கொண்டு போ…” என்று தன் சிறிய பையை மனைவியின் கையில் கொடுத்தவன், அவளின் பெரிய பெட்டியை தான் வாங்கிக் கொண்டான்.

“இல்லை பரவாயில்லை. அது கணமா இருக்கும். நானே கொண்டு வர்றேன்…” ஏனோ அவனைப் பெட்டியைச் சுமக்க வைக்க மனம் இல்லாமல் மறுப்பு தெரிவித்தாள்.

அவளை நிமிர்ந்து அழுத்தமாகப் பார்த்தவன் “சொன்னதை மட்டும் செய்!” என்றான்.

அதற்கு மேல் மறுவார்த்தை பேசாமல் அவள் கீழே இறங்க, மனைவியின் பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் பிரசன்னா.

அவன் மகளின் பெட்டியைத் தூக்கி வருவதைப் பார்த்துக் கல்பனா பதற்றமாக அருகே வந்து “கொடுங்க மாப்பிள்ளை நான் கொண்டு வர்றேன்…” என்று வாங்க முயன்றார்.

மருமகனின் பெற்றோர் மகளின் பெட்டியை அவன் தூக்கி கொண்டு வருவதைப் பார்த்தால் என்ன சொல்வார்களோ என்ற பதட்டம் அவரிடம் தெரிந்தது.

கிருஷ்ணனும், ராதாவும் மகன் பெட்டி தூக்கியதைக் கண்டாலும் அவர்கள் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டனர்.

“நீங்க இருங்க அண்ணி. இனி அவன் வொய்ப் வேலையை அவன் தான் பகிர்ந்துக்கணும். அவன் வேலையை அவன் செய்றான். நீங்க ஏன் பதறுறீங்க?” என்று ராதா சாதாரணமாகக் கேட்க, கல்பனா அவரை வியப்புடன் பார்த்தார்.

கல்யாணம் முடிந்த மறுநாளே மகன் மருமகளின் பெட்டியை சுமந்தால் கோபப்படும் அன்னைகளுக்கு மத்தியில் ராதா இனி மனைவி வேலையைக் கணவன் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னது வசுந்தரா வீட்டாரை நெகிழ வைத்தது.

அவளின் இன்னொரு பெட்டியையும் தானே மேலே சென்று எடுத்து வந்தான் பிரசன்னா.

அவ்வளவு பெரிய மருத்துவன் எந்த விகல்பமும் இல்லாமல் மகளின் பெட்டியைத் தூக்கியதைக் கண்டு மருமகனை பெருமை பொங்க பார்த்தார் எத்திராஜ்.

பெற்றவர்களின் நெகிழ்வை பார்த்துக் கணவனைக் கனிவாகப் பார்த்தாள் வசுந்தரா.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு அனைவரும் கிளம்பினர். மதிய விருந்து பிரசன்னாவின் வீட்டில் என்பதால் மகளைப் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு விருந்தையும் முடித்துக் கொண்டு வர எத்திராஜ், கல்பனா, காஞ்சனா, கமலேஷ் இன்னும் சில உறவினர்கள் என்று அனைவரும் கிளம்பினார்கள்.

புது மணமக்களுக்கு மட்டும் தனியாகக் கார் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, காரை ஓட்டும் வேலையை யாதவ் எடுத்துக் கொண்டான்.

“ஹாய் அண்ணி… எங்க வீட்டில் நீங்களும் ஒரு ஆளா இனி இருக்கப் போறீங்க. வெல்கம் அண்ணி. எங்க வீட்டுக்கு வர போற ஃபீல் எப்படி இருக்கு?” என்று காரை ஓட்டிக் கொண்டே கலகலப்பாகப் பேச்சை ஆரம்பித்தான் யாதவ்.

“ஏன்டா… ஒரு புது இடத்துக்குப் போனா என்ன ஃபீல் இருக்குமோ அப்படித்தான் இருக்கும். இது ஒரு கேள்வினு கேட்டுட்டு இருக்க…” என்று பிரசன்னா நக்கலா கேட்க,

“அண்ணாரே… கேள்வி கேட்பது தான் என் தொழில். நான் அப்படித்தான் கேட்பேன். நான் அண்ணிக்கிட்டே தானே கேட்குறேன். நீ ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி மூக்கை நுழைக்கிற?” என்று கண்ணாடி வழியாக அண்ணனிடம் கேட்டான்.

“அர்த்தமில்லாம கேள்வி கேட்டா மூக்கை என்ன? தலையையும் நுழைப்பேன்டா தடியா…” என்று தம்பிக்குச் சரியாக ஜாலியாகப் பேசிக் கொண்டு வந்த கணவனை வியந்து பார்த்தாள் வசுந்தரா.

இவனுக்கு இப்படிக் கூட ஜாலியாகப் பேச தெரியுமா? என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அந்த நேரத்தில் இரவிலும், காலையிலும் அவன் காட்டிய கோபமுகம் அவளின் நினைவில் வந்து போனது.

மனைவியின் பார்வையை உணர்ந்தது போல் அவளின் புறம் திரும்பிய பிரசன்னா அவளின் வியந்த பார்வையைக் கண்டு புருவம் உயர்த்தி “என்ன?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் தன்னிச்சையாக ‘ஒன்றுமில்லை’ என்று வேகமாகத் தலையை அசைத்தாள் வசுந்தரா.

“அவன் கிடக்கிறான். நீங்க சொல்லுங்க அண்ணி…” என்று கேட்ட யாதவின் கேள்வி தம்பதிகளின் மௌன நாடகத்தைக் கலைத்தது.

“உங்களைப் போலக் கலகலப்பான ஆள் உள்ள வீட்டில் நான் சந்தோஷமாவே இருப்பேன்னு தோணுது தம்பி…” என்று பதில் கொழுந்தனுக்குச் சொன்னாலும் அவளின் பார்வை என்னமோ கணவனைத் தான் வட்டமிட்டது.

‘உன் கோபத்தை விட நீ கலகலப்பாக இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று கணவனிடம் சொல்வது போல் அவளின் செய்கை இருந்தது.

அவளின் பார்வையின் அர்த்தம் உணர்ந்தது போல் அவளைப் பார்த்து அலட்சியமாகத் தோளை குலுக்கி கொண்டான் பிரசன்னா.

“அண்ணா கேட்டுக்கோ…” என்று பெருமையாகச் சட்டையின் கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டுக் கொண்டான் யாதவ்.

‘போடா டேய்… உன் அண்ணி சொன்ன பதில் உனக்கு இல்லடா…’ என்று உள்ளுக்குள் தம்பியைப் பார்த்துக் கிண்டலாக நினைத்துக் கொண்டான் பிரசன்னா.

“அப்புறம் தம்பி இன்னொரு விஷயம்…” என்று கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே வசுந்தரா மீண்டும் ஆரம்பிக்க,

“என்னங்க அண்ணி, சொல்லுங்க…” என்றான் யாதவ்.

“இனி எங்க வீடுன்னு சொல்லாதீங்க. நம்ம வீடுன்னு சொல்லுங்க…” என்றாள்.

“ஆஹா! சூப்பர் அண்ணி. எங்க வீடுன்னு பிரிச்சுச் சொன்னது தப்பு தான். இனி நம்ம வீடுன்னே சொல்றேன்…” என்று சந்தோஷத்தோடு சொன்னான் யாதவ்.

ஆனால் பிரசன்னாவோ மனைவியின் கண்களை ஊடுருவி பார்த்தான்.

வசுந்தராவும் அவனின் பார்வையை எதிர்கொண்டாள்.

அவளின் பார்வையில் ஒற்றைப் புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கியவன், “அட! நிஜமாவா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஆச்சரியமாகக் கேட்டான்.

“நிஜம் தான்! இதில் பொய்ச் சொல்ல என்ன இருக்கு?” என்று அசராமல் திருப்பிக் கேட்டாள்.

“சரிதான்…” என்று தலையசைத்துக் கொண்டவன் மனைவியை யோசனையாகப் பார்த்தான்.

அண்ணனும், அண்ணியும் மெதுவாகப் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்து விட்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அதன் பிறகு அமைதியாகக் காரை செலுத்தினான் யாதவ்.

சிறிது நேரத்தில் வீடு வர, “அண்ணா, அம்மா ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வர்ற வரை உங்களைக் காரிலேயே இருக்கச் சொன்னாங்க. அவசரப்பட்டு இறங்கிடாதே…” என்று சொல்லி விட்டு யாதவ் இறங்கி நின்று கொண்டான்.

அப்போது தான் இன்னொரு காரில் வந்து இறங்கிய ராதா ஆரத்தியை எடுக்க உள்ளே செல்ல, மற்ற உறவினர்கள் வாசலில் நின்றிருந்தார்கள்.

வெளியே பார்த்து விட்டு மீண்டும் மனைவியின் புறம் திரும்பிய பிரசன்னா, “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்றான்.

“சொல்லுங்க…”

“உன் முன்னால் காதல் விஷயத்தை என்கிட்ட சொன்னதோடு நிறுத்திக்கோ…” என்றான் கண்டிப்புடன்.

‘சரி…’ என்று மட்டும் தலையை அசைத்துக் கொண்டாள்.

அடுத்தச் சில நிமிடங்களில் மணமக்களை அழைத்து ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

மணமக்களுக்கான சடங்குகள் அனைத்தும் முடிந்து மதிய விருந்தும் தடபுடலாக நடந்து முடிந்தது.

மாலையளவில் வசுந்தராவின் குடும்பத்தினர் கிளம்பக் கலங்கிய கண்களுடன் அவர்களை வழி அனுப்பி வைத்தாள்.

“பிரசன்னா அவளைத் தனியே விடாம பேசிட்டு இரு…” என்று பிறந்த வீட்டை நினைத்து வருந்தி கொண்டிருந்த மருமகளுக்கு ஆதரவாக ராதா சொல்ல,

“நான் பார்த்துக்கிறேன்மா…” என்றவன், “வா…” என்று அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அறைக்குள் அழைத்துச் சென்று கதவை அடைத்தவன், “உட்கார்…” என்று அங்கிருந்த இருக்கையைக் காட்டினான்.

முதல் முறையாகக் கணவனின் அறைக்குள் அப்போது தான் நுழைந்த வசுந்தராவின் பார்வை அந்த அறையைச் சுற்றி வலம் வந்தது.

அறை நடுவில் பெரிய கட்டில் இருக்க, சுவர் ஓரமாக ஒரு பெரிய மேஜை இருந்தது. அதில் மடிக்கணினி, சில புத்தகங்கள் இருந்தன.

துணிமணிகள் வைக்க இரண்டு அலமாரிகள் இருந்தன.

அங்கிருந்த ஷெல்பில் சில அலங்காரப் பொருட்களும், அவன் படித்த போதும், வேலை பார்த்த போதும் வாங்கிய பரிசுகள், பாராட்டு விழா புகைப்படங்கள் என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கட்டிலுக்கு இந்தப் பக்கம் இருவர் அமர கூடிய சோஃபா இருக்க, அதில்தான் இப்போது அவள் அமர்ந்திருந்தாள்.

அவள் அறையைப் பார்வையிட்டதைக் கண்டு அமைதியாக இருந்தவன், அவள் பார்வை வலம் வந்து முடிந்ததும் அவனின் பார்வை மனைவியின் மீது தீர்க்கமாகப் பதிந்தது.

அவனின் அந்தப் பார்வை மாற்றத்தை வசுந்தரா புரியாமல் பார்க்க,

“என்கிட்ட ஏன் உன் காதல் விஷயத்தைச் சொன்னாய் வசுந்தரா?” என்று அழுத்தமாகக் கேட்டான் பிரசன்னா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *