லாக் டவுன் – 3

லாக் டவுன்
ஆர்த்தி ரவி

அத்தியாயம் 03:

வினித் எதையாவது செய்ய நினைத்தாலே போதும். அந்த விசயம் நடைபெற்று விடும். அதற்கான முயற்சியை எளிதாகத் திட்டமிட்டு; தெளிவாக இயற்றும் இரகம்.

‘He is gifted with a cool personality yaar!’

வினித்தை நன்றாக அறிந்தவர்கள் சொல்வார்கள்… ‘அவன் தன்மையான குணத்தைப் பெற்றவன்’.

வெளியே கூலாக இருந்தாலும் தான் நினைத்த விசயங்களைச் செயலாற்ற மறப்பதில்லை. சைந்தவியும் அவ்வரிசையில் வைக்கப்பட்டாள்.

சைந்தவியை நட்பாக்கிக் கொள்வது வினித்திற்கு ஒரு வேலைத் திட்டம் போலத்தான் தெரிந்தது. முதலில் சைந்தவி எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள் என்பதில் ஆரம்பித்து, எந்த நேரத்தில் எங்குப் போய்ச் சாப்பிடுவாள் என நீண்டு… வினித்துடைய அலசல்கள் மினி ப்ராஜெக்ட் அளவில் ஓடிக் கொண்டிருந்தன.

இருவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்கின்றனர். அவ்விரண்டு அலுவலகங்களும் வெவ்வேறு கட்டிடங்களில் இயங்குகின்றன. கேண்டீனும் ஒன்றுக்கு மேற்பட்டு பல என்கிற எண்ணிக்கையைக் கொண்டிருந்தது அவ்வளாகம்.

இருவருக்கும் பொதுவான புள்ளி என்று எதுவும் கிடையாது!

யோசித்துப் பார்த்தான் வினித். “தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறேனே!” சொல்லிச் சிரித்துக் கொண்டான்.

“எங்கே அவளை முதலில் பார்த்தேனோ, அங்கேயே போய்ப் பார்த்தால் தெரிஞ்சிட்டு போகுது.”

அடுத்து வரும் நாட்கள் வினித்தின் அட்டவணை நிரம்பித் தெரிந்தது. ஓரிரு வாரங்களுக்குப் பின்னர்த் தனக்குச் சற்று வேலைகள் இலகுவாக இருக்கும் போது, சைந்தவியைத் தான் முதலில் சந்தித்த இடத்திலேயே போய்ப் பிடிப்பது உசித்தம் என்று முடிவு செய்து கொண்டான்.

அதுவரை, எங்காவது ஏதேர்ச்சையாய் அவளைக் காண நேரிடுமா என்று எதிர்பார்த்தான். அலுவலகம் வரும் போதும் போகும் போதும் ஆவலாக அவனுடைய பார்வை நாலாபக்கமும் உலாவியது. கேண்டீன் செல்ல அவ்வளவாக ஆவலைக் காட்டாதவன், புதிதாக ஆவலைக் காட்டினான்.

இப்படியே சென்ற ஒரு வாரத்தின் மூன்றாவது நாளில், வினித்தை அவனுடைய நண்பர்கள் கண்டுவிட்டனர்.

“அவனவன் காதலுக்குத் தான் இப்படி அலைவான்.”

குறுகுறுப்பாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் தட்சி. வினித் அவனைத் தோளில் தட்டி, “நட்புக்காக உன் நண்பன் அலைவான்டா!” சொல்லிப் புன்னகைத்தான்.

இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டு சோலே பூரியை லவட்டிக்கொண்டிருந்த முன்னீஸ் சொன்னான்.

“மச்சி, பிரண்ட்ஷிப்க்கும் லவ்வுக்கும் நடுவுல எவ்வளவு கிலோ மீட்டரு?”

சீரியஸாகக் கேட்டுவிட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தவனின் பக்கம் எட்டி ஹை ஃபை கொடுத்தான் தட்சி. இருவருக்கும் வினித்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

தன்னுடைய அலுவலகத்தில் எல்லோரிடம் நட்பாகப் பழகும் குணம் கொண்டவன் வினித். அலுவலக வேலையின் பொருட்டுப் பலருடன் பேசிப் பழகினாலும் நெருக்கமான நட்பு வட்டத்தை அங்கு அவன் அமைத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் ஐந்தாறு வருடங்களாக அதே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறான்.

ஓரளவு அவனுக்கு நெருங்கியவர்கள் என்றால் உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முன்னீஸ் மற்றும் தட்சி மட்டும் தான். அதனாலேயே, புதிதாய் உதித்திருக்கும் வினித்தின் இத்தகைய ஆவல் ஆச்சரியமாய்!

தட்சியும் முன்னீஸ்ஸும் நண்பனைக் கேள்வி கேட்டு ஓட்டிக் கொண்டிருந்தனர். தன்னைக் கேலியாய் ஏறிட்ட இருவரையும் முறைத்தான் வினித்.

“போங்கடாங்! உங்களுக்கெல்லாம் இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியுமா? நீங்களே போகப் போகப் புரிஞ்சிக்குவீங்க. அப்படி எதையும் புரிஞ்சிக்கலைன்னாலும் எனக்கு அதைப் பற்றி கவலையும் இல்லை.”

தட்சி என்கிற தட்சிணாமூர்த்தியும் முன்னீஸ் என்கிற முனீஸ்வரனும் அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டனர்.

“சரியா சொன்னே வினித். எதுவுமே போகப் போகத் தான் புரியும்.”

இரு பொருள்படப் பேசும் நண்பர்களின் கண்ணோட்டம் வினித்திற்கு நன்றாகவே புரிந்தது. அன்று ஒரே நேரத்தில் கேண்டீனுக்கு மதிய உணவு சாப்பிட வந்ததால், ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

எப்போதையும் விட, அடிக்கடிச் சம்பந்தமில்லாத இடத்தில் வினித்தைப் பார்க்க நேரிட்டதால் அவனைப் பிடித்துக் கொண்டனர். வினித் அவர்களிடம் சைந்தவியைப் பற்றிச் சொன்னான்.

சொன்னதும் தான் அவர்களின் கண்ணோட்டம் தெரிந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. ஆண் பெண் நட்பு முன்பை விட இப்போதைய தலைமுறையில் பெரிதும் காணப்படுகிறது. இருந்தும் ஒருவரைத் தேடிப் போய் நட்பாக்கிக் கொள்ள நினைக்கும் எண்ணம் எக்காலத்திலும் சர்ச்சைக்குள்ளாவதும் சகஜம்.

தன்னுடைய நண்பர்களின் கிண்டல் வினித்தைப் பாதிக்கவில்லை. அவனுடைய எண்ணத்தில் அவனுக்குத் தெளிவிருக்கிறது.

மிகச் சில வருடங்களாகத் தனக்குப் பிடித்துப் போன சர்க்கரைப் பொங்கலைச் சப்புக்கொட்டி ருசித்தவாறே சொன்னான் வினித்.

“How are relationships defined… imperfect understanding!”

‘உறவுமுறையின் விளக்கங்களின் தவறான புரிதல்’. நண்பர்களை நோக்கிச் சொல்லிவிட்டுச் சிரித்தான். அவன் சொன்னதில் மற்ற இருவரும் அமைதியாகிவிட்டனர்.

‘சொல்லித் தெரிவதில்லை காதல்… தானாக உணரும் போது புரிந்து கொள்வான்.’

உள்ளுக்குள்ளே ஒரே மாதிரி நினைத்துக் கொண்டனர். தாங்கள் நினைப்பதை வினித்திடம் காட்டிக் கொள்ளவில்லை.

சிறு கிண்ணத்தில் தரப்பட்ட பொங்கல் வினித்திற்குப் போதவில்லை. மீண்டும் சென்று இன்னொரு கிண்ணம் சர்க்கரைப் பொங்கலை வாங்கி வந்தான்.

“சாப்பிடுங்கடா… போய் நம்ம வேலையைப் பார்ப்போம். எல்லாம் போகிறபடி போகட்டும். இன்னும் சைந்தவியைப் போய்ப் பார்த்து, பேசி, அவளுக்கும் நல்ல ஃபீல் வந்து… எவ்வளவோ நடக்கணும்.

நான் நினைச்சா மட்டும் போதுமா? சைந்தவிக்கும் அந்த நட்புணர்வு வரணுமில்லை… நாங்க பிரண்ட்ஸ் ஆகிறதும் ஆகாததும் என் பிரச்சனை. நீங்க எதுக்கு அதை அலசிப் போட்டு மண்டையை உடைச்சிக்கிறேங்க. கூல் கைஸ்!

உன் டெலிவரி டேட் எஸ்டிமேஷனை மெயில் பண்ணிட்டியா முன்னீஸ்? எத்தனை நாள் போட்டிருக்கே?

தட்சி, நீ அந்த ‘டிரில்லோ ஜாப் சீக்குவென்ஸ்’ வெரிஃபை பண்ணியா? நல்லா சரி பார்த்து வச்சிடு. ரொம்ப கிரிட்கல் இந்த டாஸ்க். வீக்கெண்ட் ரன் பண்ணிடு.

ஏதாவது சரியா போகலைன்னா என்னை உடனே போன்ல கூப்பிடு. வீக்கெண்ட் நான் மும்பைல இருப்பேன். வெள்ளி மதியமே இங்கே இருந்து கிளம்பிடுவேன். வெள்ளி இரவு, நீ வேலையை ஆரம்பிக்கும் போது  நான் ரீச்சபிள்ளா தான் இருப்பேன்.

சோ நோ வொரீஸ். ஆன்லைன்ல இல்லைன்னாலும் என்னைக் கூப்பிடு. உடனே லாக் இன் செஞ்சு பார்க்கிறேன். ஓகே?”

அதன் பிறகு சைந்தவியை மறந்துவிட்டு, தங்களின் வேலைகளைப் பற்றி அலசுவதில் மூவரும் மும்முரமாயினர்.

அந்த வார மிச்சமும் வார விடுமுறையும் வினித்திற்கு பிஸியாகச் சென்றது. மும்பைக்குப் பெற்றோரைக் காணப் போனவன் மறு வாரமும் அங்கேயே இருந்துவிட்டு அப்புறம் தான் சென்னைக்குத் திரும்பி வந்தான்.

பத்து நாட்களுக்குப் பின்னர் வினித் அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தான். வசந்த காலத்தின் பசுமைப் படர்வாய் அவனுடைய நினைவில் சைந்தவியும் வந்தாள்.

அவளை நினைத்துக் கொண்டதும் அவனுடைய மனத்தில் இனிமை பரவியது. மனத்தின் இனிமை உற்சாகமாக அவனுடைய வேலையைப் பார்க்க உதவியது.

சைந்தவியை நட்பாக்கிக் கொள்ள வினித் எடுத்த முடிவைச் செயலாற்ற அவனுக்கு விரைவிலேயே நேரம் கிட்டியது. ஒரு மதிய வேளையைத் தேர்ந்தெடுத்து, இருவரும் முதன் முதலில் சந்திக்க நேரிட்ட அதே இடத்திற்குச் சென்றான்.

அன்று சைந்தவியைக் கண்ட அந்தத் திசையைப் பார்த்தவன், எந்தப்பக்கம் அவள் வரக் கூடும் என்று அனுமானித்துக் கொண்டான்.

அலுவலக ஊழியர்களின் வசதிக்காக வளாகத்திற்குள் நடைபாதை ஓரமாகவும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. வெகு சில என்று சொல்லக் கூடிய எண்ணிக்கையில், ஆங்காங்கே நிறைய இடைவெளிவிட்டு ஒற்றையாக; இரண்டு பேர் மட்டும் அமரக்கூடிய வகையிலே என்று இருக்கைகள் அமைந்திருந்தன.

ஒரு படர்ந்த மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான். சைந்தவி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்க, அரை மணி நேரம் கடந்தது. இடையிடையே தன்னுடைய போனை நோண்டியவாறு நேரத்தைக் கடத்தினான்.

அவள் அன்று அலுவலகத்திற்கு வரவில்லை. பிறகு எங்கே இவன் கண்ணில் படப் போகிறாள்? வினித் இதை அறியாதவனாய் ஏமாற்றம் கொண்டான்.

மறுநாளும் வினித் அதே இடத்திற்குப் போய் ஓர் இருக்கையில் காத்திருந்தான். சைந்தவி அந்த நாள் அலுவலகத்திற்கு வந்திருந்தாள். ஆனால், வாக்கிங் செல்லவில்லை. வினித்தின் காத்திருப்பு அப்போதும் தோல்வியைத் தழுவியது.

அந்த நேரத்திலே, அவனுடைய சிறு வயதிலிருந்து அம்மா அடிக்கடிச் சொல்வது அவனின் ஞாபகத்தில் வந்தது.

‘நாம நினைக்கிறது எல்லாம் நினைத்த நேரத்திலே நடந்திராது. முயற்சி எடுத்திட்டே இருந்தால் அதற்கான நேரம் வரும் போது தப்பாமல் அந்த விசயம் நடக்கும்.’

அதனைத் தொடர்ந்து வினித்தின் எண்ணத்தில் ஓடியது…

‘இன்னும் எத்தனை தடவை இப்படி வந்து காத்திருக்கணுமோ! வந்து தானே ஆகணும். சைந்தவியின் நண்பனாகணும்னு முடிவு பண்ணிட்டேன். முன் வச்ச காலைப் பின் வைக்கலாமா? நோ வினித்!’

நினைத்துக்கொண்டதும் சிரிப்பு வந்தது. உதடுகளை ஆக்கிரமித்துக் கொண்ட சிரிப்பை அவசரமாக மென்று தடுத்தான்.

“வெட்டவெளியிலே வெயிலில் நின்னுட்டு தனியா ஒருத்தன் சிரிச்சிட்டு இருக்கிறதை யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க?”

தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

“வேறென்ன… முத்திப் போச்சுன்னு தான் சொல்லுவாங்க. இல்லை புதுசா டிரெண்டியா பைத்தியத்திற்கு ஏதாவது ஒரு கமெண்ட் வந்திருக்கலாம். வாட்டெவர்…”

அவனே பதிலையும் சொல்லிக் கொண்டான்.

மெல்லிய வெப்பத்திலும் வேர்த்து வழிந்த முகத்தைத் தன்னுடைய கைக்குட்டையால் துடைத்தபடியே அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

பாதி வழியைக் கடந்து இருப்பான். தற்செயலாக இடது பக்கமாகத் திரும்பிப் பார்த்த வினித்தின் கண்களில் கூட்டமாக வந்து கொண்டிருந்த சிலர் பட்டனர்.

அவர்களுடன் சைந்தவியும் தெரிந்தாள். அவளைக் கண்டதும் வினித்தின் முகம் மலர்ந்தது. உதடுகளில் இதம் பரப்பும் புன்னகை பளிச்சிட்டது.

அவனுடைய பார்வையை அவளிடமே வைத்துக்கொண்டு முன்னால் நடந்தான். சில வினாடிகளிலேயே சில விசயங்கள் தென்பட்டன. அந்த நேரம் அவன் நினைத்துக் கொண்டான்.

‘நான் நினைச்சதைப் போலச் சைந்தவி வித்தியாசமானவ தான். ஒட்டுதல் இல்லாத குணமா எனக்குத் தெரியுறா. கண்களில் கலகலப்பு மிஸ்ஸிங்.

முதல் முறை பார்த்ததை வச்சி சரியா முடிவுக்கு வர முடியலைன்றது உண்மை. இப்பவுமே என் நினைப்பு நூறு சதவிதம் சரியா இல்லையான்னு தெரியலை. பட், இதுவரை எனக்கு இவளை மாதிரி ஒரு நபர் பழக்கமில்லை.

இப்படியும் இந்தக் காலத்திலே ரிமோட் நேச்சர்ட் குவாலிட்டியுடன் இருக்க முடியுமா? ஆச்சரியப்பட வைக்கிறா என்னை!’

தன்னுடைய அலுவலகப் பாதை வந்ததும் அப்பாதையில் பிரிந்து செல்லாமல் சைந்தவி அண்ட் கோ பக்கம் நடந்தான்.

அதே நேரம் வினித்தைச் சைந்தவியும் பார்த்தாள். புன்னகையுடன் தன்னை நோக்கி வந்தவனைப் பார்த்தவளின் உதடுகள் அவளையும் மீறிப் புன்னகைத்தன.

அன்றிலிருந்து இருவரின் நட்பு ஆரம்பமானது.

வினித் இத்தனை காலமாக நினைத்தது நட்பு. சைந்தவி நினைத்துக் கொண்டது வேறு என இன்று தான் அவனுக்குத் தெரிந்தது.

‘முதல்ல நட்பா இருந்து பிறகு லவ்வா மாறிச்சா… அவளுக்குத் தான் தெரியும். எதுக்கு இப்போ அதை ஆராய்ச்சி பண்ணிட்டு…’

வினித்திற்கு அன்றைய நாளை பிடிக்கவே இல்லை. முக்கியமாகச் சைந்தவி நடந்து கொண்ட விதம்.

மாலுக்கு அவ்வப்போது இருவரும் சேர்ந்து போவது வழக்கமான ஒன்று. முன்பே பேசி வைத்துச் சென்று வருவார்கள். இருவரும் ஒரே அலுவலக வளாகத்தில் வேலை செய்தாலும் வசிப்பது வெவ்வேறு ஏரியாவில்.

அதனாலேயே வெளியே போகும் நாளையும் நேரத்தையும் முன் கூட்டியே அட்டவணையில் குறித்து வைத்துக் கொண்டு அதன்படி செல்வது இருவருக்கும் வசதியானது.

ஷாப்பிங் மால் என்றில்லை, கோவில், கடற்கரை, ரெஸ்டாரண்ட் என்றும் கூட அவுட்டிங் போவது உண்டு.

இருவருக்கும் மற்றவரைப் பிடித்திருப்பதால் குறைந்த காலத்திலேயே நல்லுணர்வு உருவாகிவிட்டது. அந்த நல்லுணர்வை வினித் நட்பு நிலையில் வைத்திருக்க, சைந்தவியோ காதல் என்று நினைத்துக் கொண்டாள்.

இன்று அந்நினைப்பு வெளி வந்தது ஒரு வகையில் நல்லது என்றே நினைத்துக் கொண்டான் வினித். யாருக்கு நல்லது என்பதில் தான் தெளிவில்லை.

இதுவரை சைந்தவி இப்படி நடந்து கொண்டதில்லை. அவளுடைய கோபமும் சரி வருத்தமும் சரி மிகவும் புதிதாகத் தெரிந்தன. அவளுடைய எண்ணம் தெரிந்ததும் தான் அவளுக்கு விளக்கம் தந்த நிகழ்வு வினித்தின் கண் முன்னே விரிந்தது.

சில விசயங்களை அவசரகதியில் விளக்க முடியாது. விளங்கிக் கொள்ளவும் முடியாது. இதனைச் சொல்லியே வினித் அவளை அமைதிப்படுத்தியிருந்தான்.

“சைவி, பேசுவோம் என்ன… நிதானமா பேசலாம் சரியா? நீ ரொம்ப யோசிக்காம காம் ஆகிக்கோ. எதையும் போட்டுக் குழப்பி வருத்தப்பட்டுக்காதே. இத்தோட எல்லாமும் முடிஞ்சி போயிடலை.”

தான் சைந்தவியின் கண்களுக்குள் பார்த்து; இரண்டு உள்ளங்கைகளையும் ஆதரவாக அழுத்திவிட்டுச் சொன்னதெல்லாம் அவளுக்கு எட்டவே இல்லையா?

வினித்திற்கு மனத்தில் மிகுந்த வருத்தம் எழுந்தது. அதைத் தாண்டும் அளவில் கோபமும் கொண்டான்.

சைந்தவியைப் பற்றி எண்ணமிட்டபடி வீட்டை அடைந்தான் வினித். சாவியைக் கொண்டு வாசல் கதவைத் திறந்து, வீட்டிற்குள் நுழைந்த உடனே இன்னொரு தடவை அவளுடைய எண்களை அழுத்தி, மொபைலைக் காதில் வைத்தான்.

மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

“இன்னுமா? நாலு மணியிலிருந்து ஒரு நாற்பத்தி ரெண்டு தடவையாவது கூப்பிட்டுப் பார்த்திருப்பேன்.”

வினித்திற்குக் கோபத்தில் மூச்சுக்காற்று புசுபுசுவென வெளியேறியது. அவனுடைய கையிலிருந்த ஐஃபோன் 11 தன் மதிப்பை இழந்தது போல் படுக்கையில் எங்கோ கிடக்க, அணிந்திருந்த அலுவலக உடையைக் களைந்தான். துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.

வெதுவெதுப்பான நீர் உடலில் பட்டதும் சற்றுத் தளர்ந்தான். சைந்தவியை ஒதுக்கிவிட்டு ஒரு ஹிந்தி பாடலை ஹம் செய்யத் தொடங்கினான்.

Nashe Si Chadh Gayi Oye, Kudi Nashe Si Chadh Gayi
Patang Si Lad Gayi Oye, Kudi Patang Si Lad Gayi
Nashe Si Chadh Gayi Oye, Kudi Nashe Si Chadh Gayi
Patang Si Lad Gayi Oye, Kudi Patang Si Lad Gayi

Aise Khenche Dil Ke Penche, Gale Hi Pad Gayi Oye Hoye…

அவன் குளித்து முடிக்கும் போதே காலிங் பெல்லின் குக்கூ கூவியது. அலெக்ஸ் வந்திருப்பான் என்று நினைத்து, “இவன் ஒருத்தன்… அலெக்ஸ் பராக் பராக்னு அவனே சொல்லிக்கிற மாதிரி பெல் அடிப்பான். உன் சாவியைப் போட்டு உள்ளே வந்து தொலைடா.” என்றான் சலித்த குரலில்.

சில வினாடிகளில் மீண்டும் கூவியது குக்கூ. வேற யாரோ வந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். அலெக்ஸ் இவன் வருவதற்கு முன்பே வந்துவிட்டானா என்று தெரியவில்லை.

உடைகளை உடுத்தும் முன்னர் மீண்டும் குக்கூ குக்கூ… அவசரமாகத் தன்னுடைய ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட் ஒன்றை உருவி அணிந்து கொண்டு வாசலுக்கு விரைந்தான்.

கதவைத் திறந்தால் அங்கே பாண்டியன் காத்திருந்தார். இஸ்திரி செய்த துணிகளைக் கைகளில் ஏந்தியபடி நின்றவரை உள்ளே வரச் சொன்னான்.

“என்ன தம்பி இவ்வளவு நேரம்… குளிச்சிட்டு இருந்தீங்களா?”

“ஆமாங்க… சாரி! ரொம்ப நேரமா நிக்க வச்சிட்டனா?”

“பரவாயில்லை தம்பி… கொஞ்சம் தண்ணி தர்றீங்களா? தாகமாயிருக்கு.”

“ஜூஸ் குடுக்கவா?”

“வேணாம்பா தண்ணி போதும்.”

ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து வந்து அவரிடம் நீட்டினான். வாங்கிக் குடித்தவர் துணிகளை எண்ணிக் காண்பிக்க… வினித் அவரைத் தடுத்துவிட்டுச் சொன்னான்.

“எவ்வளவு பணம் கொடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க…”

அவனிருந்த மைண்ட் செட்டில் துணிகளை எண்ணி வைத்துச் சரி பார்க்கும் பொறுமையில்லை.

அவரும் இவன் சொல்வதைக் கேட்கவில்லை. கணக்குப் பார்த்துவிட்டுத் தான் பணம் வாங்கினார்.

பாண்டியனை அனுப்பிவிட்டு கதவைச் சாத்தினான். இஸ்திரி போட்டு வந்த துணிகளை எடுத்து அதனிடத்தில் அடுக்கி வைத்தான். பிறகு விட்டெறிந்த மொபைலைத் தேடி எடுத்தான். சைந்தவிக்குக் குறுஞ்செய்தி ஒன்றை வாட்ஸ் அப்பில் டைப் செய்தான்.

அதை அவளுக்கு அனுப்பியதும் மடிகணினியை எடுத்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்து கொண்டான். தொலைகாட்சியில் செய்திகளை ஓடவிட்டு, மடிகணினியை உயிர்ப்பித்தான். நிமிடங்கள் விரைந்தன.

சற்று நேரத்தில் மொபைலில் குறுஞ்செய்தி வந்திருப்பதற்கான சமிஞ்சை ஒலித்தது.

“சைவியா?”

எதிர்பார்ப்புடன் எடுத்துப் பார்த்தான். அவளில்லை… அலெக்ஸ்.

அலெக்ஸ் மற்றும் வினித் இருவரும் ஹவுஸ்மேட்ஸ். இன்றைக்கு அலெக்ஸ் தான் வீட்டிற்கு வர இரவு தாமதமாகும் என்று குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.

சைவி இவனுடைய குறுஞ்செய்தியைப் பார்க்கவில்லை. இன்னும் ஆஃப் லைன் என்று காட்டியது அவளுடைய ஸ்டேடஸ்.

யோசனையுடன் அங்கிருந்து எழுந்தவன் சமையலறைக்குள் போனான். விரைவாகச் சமைக்கக் கூடியதாக ஏதோ ஒரு நூடில்ஸ் வகையைப் பெயருக்குச் சமைத்தான்.

கொஞ்சமாக எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான். நல்ல பசி இருந்தும் அவனால் சாப்பிட முடியவில்லை.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு, வினித் தூங்கச் சென்றான். களைப்பை உணர்ந்தாலும் கண்கள் மூட மறுத்தன. மீண்டும் மொபைலைப் பார்த்தான். சைந்தவியின் அரவமில்லை.

நேரம் செல்லச் செல்ல வினித்தின் கடுப்பும் கோபமும் குறைந்திருந்தது. வருத்தம் மட்டும் இப்போது மேலோங்கியது.

அவள் காதலை வெளிப்படுத்தியது ஒரு பக்கமிருக்க, இவனிடம் சொல்லாமல் கிளம்பியதும் மொபைலில் வராததும் வருத்திக் கொண்டிருந்தது.

இப்படியொரு நிகழ்வை எதிர்கொள்வான் என வினித்திற்குத் தோன்றியதில்லை. அப்படி இருவருக்குள் வித்தியாசமாய் எதுவுமே இதுவரை நிகழ்ந்ததும் இல்லை.

இந்த விசயம் மிகவும் சென்சிடிவ். இனி தான் என்ன செய்ய வேண்டும்… எப்படி விசயத்தைக் கையாள்வது என்று வினித் யோசனையில் ஆழ்ந்தான்.

2 thoughts on “லாக் டவுன் – 3

  1. Good going sis.. Nalla iruntha ponna.. Friend aakuren nu solli ipadi azha vechitiye padupaavi vinith nu avan Mela kovama varuthu… Sainthavi ku enna aachu.. Innumaaaa kadarkaraila ukanthutu iruka… Vinith ku Ava mela irukurathu natpaa kathalaa… Door bell adichathum saindhavi thaan vanthutalo nu ninachiten sis.. Interesting… Seekiram adutha epi podunga sis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பனியில் உறைந்த சூரியனே 
ஜூன் 10 வரை மட்டுமே தளத்தில் இருக்கும் [படிக்க]
error: Content is protected !!