லாக் டவுன் – 4

லாக் டவுன் – 4

அத்தியாயம் 04:

ஆதுரமாகத் தொட்டுத் தழுவி ஆறுதல் அளித்த உப்புக்காற்றின் அக்கறையை எண்ணிப் பார்த்ததும் சிரித்துக்கொண்டாள் சைந்தவி.

“பிசுபிசுன்னு ஆக்கிட்ட. ஒன்னும் பாதகமில்லை. உடலிலே தானே இந்தப் பிசுபிசுப்பு இருக்கு? மனசு பிசுபிசுத்துப் போறதுக்கு முன்னாடி உணர்ந்திட்டேனே.”

சொல்லிக்கொண்டாள் கசந்த முறுவலுடன். தனக்குத் தானே சொன்னாளா இல்லை அந்தக் காற்றிடமா?

மனத்திலே கொள்ளை வேதனை அடைத்து வைக்கப்பட்டு இருந்தாலும், அதிலேயே அமிழ்ந்து உருகி உருப்படாமல் போவதை விரும்பவில்லை அவள். சீக்கிரமே இவ்வேதனையில் இருந்து வெளி வர வேண்டும் என்று விரும்பினாள்.

“நாட்கள்… வாரங்கள்… மாதங்கள்?

இல்லை வருடங்களாகுமா வினித்தை மறக்க? அப்படி மறந்துவிடக் கூடியவனா அவன்? என் காதல் பொய்யில்லை. என் நினைவில் இந்தக்காதல் இருக்கும். வினித்தும் இருப்பான்.

மனசு என்ன காத்தா? அப்படியே திசை மாறி மாறி வீச? எல்லாத்தையும் மறப்பது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை. எனக்குள்ளே அவனுக்கு வடிவம் கொடுத்து வச்சிட்டேனே.”

கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டாள் தன்னுடைய துடிப்பை அடக்கும் முயற்சியாய்… அதே நேரம் இந்தப் பாடல் வரிகள் மனத்தில் வந்து போயிற்று.

‘உயிர் கரையிலே உன் கால்தடம்
மனச் சுவரிலே உன் புகைப்படம்…’

வினித்தை மறப்பது மிகவும் கடினம். இந்தக் காதல் தனக்குள்ளே ஆழப் பதிந்து அழியாத்தடம் பதித்து விட்டதை அவளால் மறுக்க முடியாது. இதனை உணர்ந்தே இருந்தாள்.

“வினித்தும் காதலும் எனக்குள்ளே இருக்கட்டும். ஆனால், என்னை இம்சை படுத்திட்டு இருக்க வேணாம். மனசை அப்படியே ஏக்கம் பிடிச்சு புழுத்துப் போக வைக்கும் முட்டாளாக இருக்க மாட்டேன்… தோல்வி என்னைச் சிதைத்துப் போட்டுடக் கூடாது!”

தன்னைத் தானே திடப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.

காதல் தோல்வி கொடிது. எத்தனை மனவுறுதியானவர்களையும் தகர்த்து உருக்குலைய வைக்கும் சக்தி இத்தோல்விக்கு உண்டு. நினைவுப்படுத்திக் கொண்டாள்.

இந்நிலை துர்பாக்கியம்; ஏமாற்றம்; துன்பம் என்றாலும், வாழ்க்கையின் எல்லையல்லவே!

தான் தானே தன்னைத் திருப்ப முடியும்?

அதைவிட்டு, மனத்திற்கு முக்காடு போட்டுக்கொண்டு, கண்களைத் தொலைத்த ஒரு குருடியாக, ஏமாற்றத்தை உடைத்து வெளி வர முயற்சிக்காமல்; துன்பத்திலேயே சிறைப்பட்டுக் கிடப்பது மேன்மையாகுமா?

தன் பிறப்பின் அர்த்தம் வினித் என்கின்ற ஒருவனால் சிதைந்து போவதா?

‘இதுவரை கஷ்டத்தை நான் அனுபவிச்சதில்லையா? எவ்வளவு சந்தோஷமா இருந்தேனோ அந்தளவு கஷ்டமும் பட்டுடேன்.

இந்த உலகத்தில் பல பொல்லாதவர்களுக்கு மத்தியிலே நல்லவனாகத்தான் வினித் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறான். அவனிடம் குற்றமில்லை. அவன் சொன்ன மாதிரி நண்பனாகத் தானே என்கிட்டப் பேசிப் பழகி இருக்கான்.

அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கிப் போயிருந்த நான் தான் வினித்தோட நட்பைத் தாண்டி ரொம்ப தூரம் போயிட்டேன். அவன் மேலே பழி போட்டு வருத்தப்படுவது சரியாகுமா?’

சமாதானம் சொல்லிக்கொண்டது அவளுடைய மனது.

‘இந்த மாதிரி ஒருத்தன் வந்து அழுத்தமா மனசுல உட்கார்ந்துப்பான்னு கொஞ்ச காலத்துக்கு முன்னாடி எனக்கே தோணியிருக்கா? நடப்பது நடக்கும்… நடத்தினது வினித்தா இல்லை நானான்னு யோசிச்சி என்னவாகப் போகுது? இனி என்ன செய்யப் போறேன்னு பார்க்க ஆரம்பிக்கணும்.’

எடுத்திருக்கும் முடிவின்படி, தான் இனி செய்யப் போவது என்ன என்பதை மனத்திலே ஓட்டிப் பார்த்துக் கொண்டாள் அவள்.

பிசுபிசுத்துக் கொண்டிருக்கும் கைகளைத் தடவி விட்டுக் கொண்டாள். மணிக்கட்டில் ஒளிரும் டைடன் குவார்ட்ஸ், நேரம் எட்டு முப்பத்தி ஐந்து என்று காட்டியது.

இருக்கும் சூழ்நிலை உரைத்தது… ‘நேரமாயிருச்சு சைந்து. ஹாஸ்டலுக்குக் கிளம்பு.’ உள்ளே இருந்து ஒரு குரல் அறிவுறுத்தியது.

அப்போது, கடலலைகளின் ஓசை பெரிதாகக் கேட்டது. கடலைத் திரும்பிப் பார்த்தாள் சைந்தவி.

“ ‘முடிவெடுத்திட்ட… போகணும்னு. சொல்லிக்க மாட்டியா’ ன்னு கேட்கிறியாமா?”

கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஈரமணலில் கால் பட்டதும் வறண்டிருந்த பாதங்களை வருடிய நீரின் குளிர்மை மனத்தையும் எட்டியது. அடிகளை எட்டி வைக்க வைக்க உதடுகளின் ஓரம் கொஞ்சமாய் வழிந்திருந்த கசப்பான முறுவலும் அகன்றது.

“வினித், உன்னைப் பார்த்திட்டே, உன்னை விலக்கி வைக்க என்னாலே முடியாதுப்பா! உன்னைவிட்டு தூரப் போயிடறேன். ரொம்ப ரொம்ப தூரமாய்ப் போக ஏற்பாட்டைப் பண்ணிக்கப் போறேன்.”

அவள் சொன்னதும் சட்டென ஓர் அலை அவளுடைய பாதங்களில் அடித்துத் தெறித்தது. நீர்த்திவலைகளோடு பூத்த கண்ணீரையும் துடைத்துக்கொண்டாள்.

கடலன்னை அவளைக் கலக்கமாகப் பார்த்தது. அலைகள் அவளைக் காட்டிக் கொடுப்பதாய்!

அதை உணர்ந்தது போலவே சைந்தவி தெரிந்தாள். பட்டென ஈரமணலில் அமர்ந்துகொண்டாள்.

“நான் பிறந்த இந்தச் சென்னையை விட்டு… சின்ன வயசுல அப்பா; அம்மாவுடன் நான் குடும்பமாகக் கொண்டாடின இந்தக் கடற்கரையை விட்டு ரொம்ப தூரமாய்ப் போகப் போறேன்மா.

அம்மாவை வாரிக் கொடுத்திட்டு; அப்பாவின் பிரிவைத் தாங்க முடியாம என் தவிப்புக்கு ஆறுதல் தேடி உன்னைச் சரண்டைந்த மாதிரி, இப்பவும் என் காதலின் வாடலில் உன்னைத் தஞ்சமாகத் தேடிட்டு வந்தேன்.

இதோ, ‘வினித் இல்லாட்டி உன் உலகம் அஸ்தமிச்சிடுமா’ன்னு நீ கேட்டுக் கேட்டுக் கூப்பாடு போட்டதிலேயே கொஞ்சமாய்த் தெளிவாயிட்டேன். இனி என்னை நான் பார்த்துப்பேன்.

நான் ஒரு முடிவெடுத்திட்டுத் தான் இங்கே இருந்து போறேன். என்னை பிளஸ் பண்ணும்மா. உலகத்தில் எந்தப் பகுதியிலே இருந்தாலும் நீ என் நினைவில் இருப்பே.”

கடலன்னையைப் பார்த்துக்கொண்டே அவளிடம் பேசினாள் சைந்தவி. இவள் பேசி முடித்த கணம் ஓர் அலை ஓடி வர, அதன் பின்னாடியே தொடர்ந்து வந்த துணை அலைத் தோழி இவளைத் தோள் வரை நீராட்டி கொஞ்சிச் சென்றது.

தன்னைத் தழுவி; வாழ்த்தி; போய் வா என்று சொல்லாமல் சொல்லி விடை கொடுத்த கடலை, நிர்மலமான பார்வையுடன் பார்த்தாள். அதே நேரத்திலே அவளுடைய வேதனையைக் கடந்து உலர்ந்திருந்த உதடுகளை எட்டாமல் போக்குக் காட்டியது புன்னகை.

சில நிமிடங்கள் மௌனத் தவமாய்க் கடந்தன. ஒரு பெருமூச்சு புறப்பட்டு வெளியே வர, தலையசைப்புடன் மெல்லிய முறுவலைச் சிந்திவிட்டே சைந்தவி அங்கிருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி விடுவிடுவென நடந்தாள்.

விளக்குகளின் ஒளி உபயத்தால் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும் மணலில் அவளுடைய பாதங்கள் வேக வேகமாகப் புதைந்தும் வெளி வந்தும் கொண்டிருந்தன.

எத்தனை விரைவாக நடந்து சென்றும் பிரயோசனமில்லாமல் போனது. சைந்தவியின் இருப்பிடம் செல்ல வேண்டிய பேருந்து வர நிமிடங்களாகி விட்டன. தன்னுடைய தங்கும் விடுதியை அவள் அடைந்த போது நேரம் இரவு பத்தைத் தாண்டியது.

“இன்னா பாப்பா இம்மாம் லேட்டு? ஆபீசாண்ட வேல மேல மாட்டிக்கிணியா?”

எதிரே கொட்டாவி விட்டபடி வந்த மெஸ் பணியாளர் ராணிமேரி சைந்தவியிடம் விசாரித்தாள்.

இது ஒரு வசதி. சிலர் கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலையும் தாங்களே எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். பொய் சொல்லத் தேவையுமில்லை. உண்மையைக் கூறும் அவசியமுமில்லை.

தன்னிடம் கேள்வி கேட்டவளுக்கு எல்லாப் பக்கமும் தலையாட்டி பொதுவான பதில் கொடுத்தாள் சைந்தவி.

நல்லவேளையாக வாயைத் திறந்து தனக்குப் பிடிக்காத பொய்யைச் சொல்லத் தேவையில்லை. அதிலிருந்து தப்பித்த ஆசுவாசம் சைந்தவிக்குள் அந்த நேரத்திலும் ஏற்படத் தான் செய்தது.

“என்னமோ போ. இம்மாம் நேரஞ்செண்டு வர்றது சேப்டி இல்லைன்னு சொல்லிக்கினாலும் வேலை விடுதா? ராவு பகலுன்னு இல்லாம இந்தக் கம்பூட்டர் கம்பெனிங்க இம்மாம் வேலை வாங்கிக்கிணு…

சரி, நீ சாப்பிட்டியா பாப்பா? பத்து மினிட் முன்னால வந்திருக்கக் கூடாதா… நானு டைனிங் ஹாலை பூட்டிக்கிணு இப்பால வர்றேன் நீ எதுக்கால வர்ற. இன்னிக்கு மெனு டாலும் (dhal) புல்கா ரொட்டியும். கொஞ்சமா மீந்ததை எடுத்து வச்சிருக்கேன். களைப்பாக்கீற… ரூமாண்ட எடுத்தாந்து தர்றேன். சாப்பிடறியா பாப்பா?”

ஓங்குத்தாங்கான தோற்றம் ராணிமேரிக்கு. தோற்றத்திற்குச் சம்பந்தமில்லாத குணம் கொண்டவள்.

ஏதோ மூன்று வருடம் பார்த்து உண்டான பாசம். முகத்தைப் பார்த்தே பசியைப் புரிந்து கொண்ட ராணிமேரியின் பாசமும் பரிவும் சைந்தவியை நெகிழ்த்தியது. பசியின் களைப்பு இருந்த போதும் சாப்பாடு தொண்டைக்குழியில் இறங்கும் என்று தோன்றவில்லை.

“இல்லக்கா வேணாம். தாங்க்ஸ்!”

கவனமாக வரவழைத்த புன்னகையுடன் சொன்னாள்.

சைந்தவி அதிகம் பேசுவதில்லை. ராணிமேரி அதை அறிந்தவளாக மேலே பேச்சை வளர்க்கவில்லை. அவளிடம் விடைபெற்றுக் கொண்டு நடையைக் கட்டினாள்.

மறுநாள் சைந்தவியைத் தலைவலி பிடித்துக் கொண்டது. படுக்கையைவிட்டு இன்னும் எழவில்லை. கீற்றாக ஜன்னல் திரைச்சீலையின் ஓரமாய் ஊடுருவிய சூரிய ஒளி கண்களைக் கூசச் செய்தது.

விண் விண்ணெனத் தெறித்த வலியுடன் அலுவலகம் போக முடியாது. இன்னும் வினித்தை வேறு எதிர்கொள்ள வேண்டும். இன்று முடியுமா? முடியாது என்று உறுதியாக உணர்ந்தாள்.

அதனால் காலையில் முதல் வேலையாக மொபைலை எடுத்து அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்லப் போனாள். அப்போது தான் கவனித்தாள், நேற்றிலிருந்து வினித் பல முறை அழைத்தும் குறுஞ்செய்திகளை அனுப்பியும் இருந்தான்.

அலுவலக அழைப்பை ஏற்படுத்திப் பேசி முடித்தாள். பிறகு வேறு யார் யார் அழைத்திருக்கிறார்கள் எனப் பார்த்தாள். அலுவலகச் சம்பந்தமானவற்றைக் கவனித்துப் பதிலளித்தாள். பிறகே வினித்தின் குறுஞ்செய்திகளை வாசித்தாள்.

உடனே பதில் அனுப்பவில்லை. என்ன சொல்ல வேண்டும் என்று யோசித்தாள். என்ன தான் வினித்தைவிட்டு விலகிப் போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாலும், நிறைய வலிக்கிறது அவளுக்கு. இதனைச் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்ளவோ தோள் சாயவோ யாரும் அருகே இல்லை.

அப்படி ஆறுதல் அளிக்கக் கூடியவன் வினித் தான். ஆனால் வலியே அவனால் என்கிற போது சைந்தவி என்ன செய்வாள்?

இப்படி நினைத்த வேளை அவளுடைய தலைவலி அதிகமாகியது. நெற்றிப்பொட்டைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். உடனே மொபைலை வைத்துவிட்டு மெல்ல எழுந்தாள் அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

முல்லை எதிரே தென்பட்டாள்.

“முல்லை…”

இவளுடைய குரல் கேட்டதும் பூந்தொட்டியில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த முல்லை திரும்பிப் பார்த்தாள்.

“இன்னாக்கா?”

நான்கு தளங்களைக் கொண்டு நெடுவாக்கிலே அமைந்திருக்கும் அந்த லேடீஸ் ஹாஸ்டலின் மக்களுக்குத் தனக்கு இடப்பட்ட வேலைகளுடன் எடுபிடி வேலைகளையும் பார்ப்பவள் முல்லை.

“காஃபி வேணும் முல்லை. தலைவலிக்குது… நீ போய் வாங்கிட்டு வந்து தர்றியா ப்ளீஸ்?”

“ரொம்ப வலிக்குதாக்கா? இதுக்கு இன்னாத்துக்கு ஒரு ப்ளீஸ் சொல்லிக்கிணுக்கீற? நீ பிளாஸ்க் வச்சிருக்கியே. எடுத்தா ஒன்னுக்கு ரெண்டா ஊத்திட்டு வர்றேன்.”

“ஒரு காஃபி போதும் முல்லை.”

முல்லையிடம் பிளாஸ்க்கைத் தந்துவிட்டு சொன்னாள். அவள் போனதும் கதவைத் தாளிட்டுவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள் சைந்தவி.

முல்லை வருவதற்குள் சைந்தவி முகம் கழுவி; பல் துலக்கி; காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தாள்.

பிளாக்ஸ் நிரம்பக் காஃபியை ஊற்றி வந்திருந்தாள் முல்லை.

“சொன்னேனே முல்லை. எதுக்கு இவ்வளவு ஊத்திட்டு வந்தே?”

“தலைவலிக்கு நல்லா இருக்கும்க்கா. வச்சி இன்னொரு தபா குடிச்சிக்கோ.”

“நீயும் கொஞ்சம் ஊத்தி குடிச்சிட்டுப் போ முல்லை.”

இருவரும் ஒன்றாக அமர்ந்து காஃபி குடித்தனர். முல்லை அங்கிருந்து போகும் முன்னர்ச் சொன்னாள்…

“தலைவலிக்கு மாத்திரை வச்சிருக்கியாக்கா… இல்லாங்காட்டி மெடிக்கல்ல வாங்கியாறவா?”

“என்கிட்ட மாத்திரை இருக்கு முல்லை. ரொம்ப தாங்க்ஸ்மா!”

“பரவாயில்லக்கா. நீ மாத்திரை போட்டுக்கிணு படுத்து எந்திரி. அப்பால மேரிக்கா டிபென்னு எடுத்தாறேன்னிச்சு. வரட்டாக்கா?”

“சரிம்மா…”

குரோசின் மாத்திரை ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளாஸ் நிறையத் தண்ணீரை ஊற்றி முழுங்கினாள். பிறகு படுக்கையில் படுத்தாள். தூக்கம் வரவில்லை. தூங்கும் எண்ணமும் அவளுக்கில்லை. தலை வலியைப் பொறுக்க மாட்டாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

சலனமற்று அவளால் இருக்க முடியவில்லை. மூடியிருக்கும் இமைக்குள் வினித் நுழைந்தான். சிறிது நேரம் அவனின் ஞாபகத்திலே மனது அலைப்பாய்ந்தது.

அதே நேரம் அலுவலகத்தை அடைந்திருந்தான் வினித். அன்று சற்று முன்னதாக வந்திருந்தான். சைந்தவி எங்கும் தென்படுகிறாளா என்று பார்த்துவிட்டே தன்னுடைய அலுவலகக் கட்டிடத்திற்குள்ளே சென்றான்.

தன்னுடைய இருக்கையில் அமர்ந்ததும் தான் மொபைலைக் கையில் எடுத்தான்.

அவசரமாக அவனுடைய கண்கள் சைந்தவியுடைய வாட்ஸ் அப் ஸ்டேடஸ்யைப் பார்த்தன.

“என் மெஸ்ஸேஜஸ் பார்த்திட்டா சைவி. ஊப்ஸ்!”

கொஞ்சம் நிம்மதி பிறந்தது வினித்திடம். இதுவரை மனத்திலே கலக்கம் இருந்து கொண்டிருந்தது.

நிம்மதியுடன் தன்னுடைய வேலையைத் தொடங்கினான். இடையிடையே மொபைலைப் பார்த்துக் கொண்டான். நேற்றிரவு யோசித்ததில் அவளுடைய மனநிலை எப்படி இருக்கக்கூடும் என்பதும் புரிந்தது.

மதியம் தாங்கள் வாக்கிங் போகும் நேரத்திற்கு அவளைக் காணலாம் என்று நினைத்துக் கொண்டான். அவளுடைய அழைப்புக்காகக் காத்திருக்காமல் வினித்தே அவளை அழைத்தான்.

“ஹாய் சைவி!”

“சொல்லு வினித்…”

“நீ தான் சொல்லணும் சைவி.”

“என்ன சொல்லணும்?”

“ஏன் என்னை அவாய்ட் பண்றே?”

“உன்னை அவாய்ட் பண்றவ தான் இப்படி ஃபோனை எடுத்துப் பேசுறாளா?”

“நேத்து அவ்வளவு சொல்லியும் பொருட்படுத்தாம போயிட்டே. நாம மாலுக்குப் போகலாம்ன்னு பேசிட்டதும் மறந்து போச்சா?”

“மனசு சரியில்லைன்னு கிளம்பிட்டேன். மால் போறதா பேசினது ஞாபகத்தில் இல்லை.”

“சரி விடு. எத்தனை ஃபோன் கால் பண்ணேன்…”

“கவனிக்கலை…”

“ம்ம்… மேடமை இன்னைக்குப் பார்க்கலாமா? வாக்கிங் வர்றியா?”

“இல்லை வினித். நான் ஆஃபீஸ்ல இல்லை.”

“பார்த்தியா நான் நினைச்ச மாதிரி அவாய்ட் பண்றே?”

“தலைவலி… அதான் வரலை.”

“அது மட்டுமே காரணம்னா என் மிஸ்ட் கால்ஸ், மெஸ்ஸேஜஸ் பார்த்ததும் நீ ஃபோன் பண்ணாட்டி கூட, ஒரு குட்டி மெஸ்ஸேஜ்ல சொல்லியிருப்ப சைவி. ஐ நோ யூ பெட்டர் (I know you better). சரி தானே?”

“…”

சைந்தவியின் அமைதியே அவளைக் காட்டிக் கொடுத்தது. தலைவலிக்காக மட்டும் அவள் விடுப்பு எடுக்கவில்லை. வினித்தை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாமலும் தானே?

சில வினாடிகளுக்குப் பின்னர் அவள் அவனிடம் கேட்டாள்…

“யூ நோ மீ பெட்டர்… ஹௌ டிண்ட் யூ நாட் நோ, ஐ’ம் இன் லவ் வித் யூ?”

(என்னை நல்லா புரிஞ்சவன்… எப்படி நான் உன்னைக் காதலிப்பதை உணரலை?)

‘இவள் கேட்பதும் சரி தானே?’

திகைத்துப் போனான் வினித்.

Leave a Reply

About

Welcome To Nandhavanam Tamil Novels

Tagged with:

Leave a Reply