Forum

நிலவு 14  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 4 months ago
Posts: 333
25/02/2020 12:40 pm  

காலையிலேயே சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் நந்தினி. விடிந்ததும் அவள் கையால் காபி குடிக்காவிட்டால் ராமச்சந்திரனுக்கு அன்றைய பொழுதே இருண்டுப் போன மாதிரி. முதலில் அவருக்குப் பிடித்த மாதிரி டிகாசன் அதிகமாக, சர்க்கரை பெயரளவுக்குப் போட்டு காபியை கலந்தவள் அவர் குடிக்கிற மாதிரியான இதமான சூட்டுடன் காபியை மாமனாருக்குக் கொண்டு சென்றாள்.

ராமச்சந்திரன் மருமகள் காபியோடு வருவதைக் கண்டவர் “உன் காபிக்காக தான் காத்திட்டிருக்கேன்மா..” என்று ஆவலுடன் சொன்னபடி காபி டம்ளரை வாங்கிக் கொள்ள

நந்தினி “இவ்ளோ ஸ்ட்ராங்கா காபி குடிச்சா பித்தம் ஓவர் ஆயிடும்ப்பா… இன்னைக்கு டிகாசன் கொஞ்சம் ஸ்ட்ராங் கம்மியா தான் இருக்கும்” என்று சொல்லவும் மருமகளின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தவராய் காபியை மிடறு மிடறாக ரசித்து அருந்தினார்.

குடித்து முடித்துவிட்டு நந்தினியிடம் தம்ளரை நீட்டியவர் “நீ வந்ததுக்கு அப்புறம் தான்டா அப்பா நல்லக் காபி குடிக்கிறேன். உங்க அத்தையும் போடுவாளே கழனித்தண்ணியாட்டம்” என்று மனைவியைக் கிண்டல் செய்தவர் மறக்காமல் “கார்த்திக் சாப்பிட்டிட்டுத் தானே போனான்?” என்று மகன் சாப்பிட்டானா என்று கேட்க நந்தினி ஆமென்று தலையாட்டிவிட்டு மதிய உணவைத் தயார் செய்யச் செல்ல பக்கத்துவீட்டுப் பெண்மணி ஒரு தம்ளருடன் வந்து நின்றார்.

“நந்தினி உறை மோர் இருந்தா கொஞ்சம் குடும்மா. நேத்து மோர்க்குழம்பு வச்சதுல உறைக்கு எடுத்து வைக்க மறந்துட்டேன்” என்று சொன்னபடி நின்றவரிடம் தம்ளரை வாங்கியவள் சமையலறைக்குச் சென்று தயிரை ஊற்றிக் கொண்டு வந்தாள்.

“இந்தாங்க சித்தி” என்று புன்னகையுடன் கொடுக்க பக்கத்து வீட்டுப்பெண்மணி கண்களை உள்ளே சுழற்றியவர் “ஆமா உன் அத்தை இன்னும் ஊருக்கு திரும்பலையா? போய் பத்து நாளுக்கு மேலாச்சே” என்று அவள் வாயைக் கிண்ட முயல

நந்தினி ஊர்வம்புக்கு இடம் கொடுக்காதவளாய் “இன்னும் ரெண்டு நாள்ல திரும்புவாங்க சித்தி… லெட்சுமிக்காவோட அம்மா வீட்டுல ஏதோ விஷேசம்னு சொன்னாங்க… அதான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வருவாங்கனு விக்னேஷ் மாமா சொன்னாரு” என்று சொல்ல

அந்தப் பெண்மணி முகவாயைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு “க்கும்… உன் மாமியாருக்கு என்ன? அவளும் மூத்த மருமகளும் ஊர் சுத்துனாலும் வீட்டுல எல்லாத்தையும் இழுத்துப் போட்டுச் செய்ய நீ இருக்க… நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். வந்த நாள்ல இருந்து நீ சும்மா இருந்து நான் பார்த்ததே இல்ல… உன் நல்ல மனசுக்கு சீக்கிரம் கார்த்திக்குக்கு நல்ல வேலை கிடைச்சு அவன் உன்னை மகாராணி மாதிரி பார்த்துப்பான் பாரு… அப்போ இதே வைதேகி உன் பின்னாடி தானா வருவா” என்று உரைத்துவிட்டுக் கிளம்பினார்.

நந்தினி எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றுவிட்டாள். அவளும் கார்த்திக்கும் மதுரை வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. வீட்டுக்கு வந்த நாளில் இருந்து வைதேகி நந்தினியிடமோ நந்தினி வைதேகியிடமோ பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மகாலெட்சுமியும் செலவு வைக்க வந்துவிட்டாளே என்று மட்டும் மனதிற்குள் புகைந்தவள் கணவனின் கட்டளை வாயை அடைத்திருப்பதால் ஒன்றும் செய்ய இயலாதவளாய் கடமைக்கு வா என்று அழைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

இவர்களுக்கும் மாறாக ராமச்சந்திரனும், விக்னேஷும் மலர்ந்த முகத்துடன் வரவேற்க நந்தினியும் கார்த்திக்கும் மற்றவர்களைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குட்டிப்பையன் விவேக்கும் சித்தப்பா சித்தியுடன் ஒட்டிக்கொள்ள கணவனும் மனைவியும் தாங்கள் எடுத்த முடிவு தவறல்ல என்று நினைத்து நிம்மதியடைந்தனர்.

ஆனால் கார்த்திக்கைப் பொறுத்தவரை எப்படியோ நந்தினி கூடிய விரைவில் தானும் தன் கணவனும் இங்கே வந்திருக்கவே கூடாதோ என்று எண்ணும்படி வைதேகி மற்றும் மகாலெட்சுமியின் செய்கைகள் அமையவே அவளால் இதைக் கணவனிடம் தெரிவிக்கவும் இயலவில்லை.

விக்னேஷ் கார்த்திக்கை சிம்மக்கல் அருகில் உள்ள ஒரு இன்ஸ்டிட்டியூட்டில் சேருமாறு சொல்லி அதற்கு கட்டணமும் செலுத்திவிட கார்த்திக் தேர்வுக்கு தன்னைத் தயார்ப்படுத்த ஆரம்பித்திருந்தான். இந்நிலையில் அவனிடம் தேவையற்ற சில்லறைப்பிரச்சனைகளை எடுத்துச் செல்ல நந்தினி விரும்பவில்லை.

ஆனால் கணவனின் அண்ணன் உழைப்பில் சும்மா அமர்ந்துச் சாப்பிடவும் அவளது தன்மானம் இடம் தரவில்லை. எனவே காலையில் வாசல் தெளிப்பதில் ஆரம்பித்து, இரவு அனைவரும் சாப்பிட்டப் பாத்திரங்களைக் கழுவி அடுக்குவது வரை அவள் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டுச் செய்ய மகாலெட்சுமிக்கும் வைதேகிக்கும் அவளைக் குத்திக் காட்டும் வாய்ப்பு இல்லாமல் போனது.

நந்தினியின் பொறுமையும், இன்முகமும் அண்டைவீட்டாரின் அன்பையும் அவளுக்குப் பெற்றுத் தரவே இப்போதெல்லாம் யாரும் வைதேகியின் திருநெல்வேலி மருமகளைப் பற்றிக் குறை பேசுவதில்லை.

ராமச்சந்திரன் அவளைத் தன் மகளைப் போலவே பார்த்துக் கொண்டார். அவளுக்குப் பிடித்தவற்றை மகனிடம் கேட்டு வாங்கித் தருவதிலிருந்து அவ்வபோது மனைவியோ மூத்த மருமகளோ ஏதாவது சுடுசொல் கூறினால் அதை அவர்களுக்கே திருப்பியளிப்பது வரை ஒரு நல்ல தந்தையாகவே நடந்து கொண்டார்.

கார்த்திக் என்ன தான் படிப்பில் மூழ்கினாலும் மனைவியிடம் அவளுக்கு எதுவும் சவுகரியக்குறைவு இருக்கிறதா என்று அடிக்கடி கேட்டுக் கொள்வான். நந்தினி வழக்கம் போலவே அதை மறுத்துவிடுவாள்.

மகாலெட்சுமி ஒரு வேலையும் செய்யாமல் மாமியாருடன் சேர்ந்து புறணி பேசுவது, ஊர் சுற்றுவது போன்ற கடமைகளைச் சிறப்பாகச் செய்ய தனக்கு இடையூறாக இருந்த மகனையும் நந்தினியின் தலையில் கட்டிவிடுவாள். ஆனால் நந்தினி விவேக்கை என்றுமே தொந்தரவாகக் கருதாமல் அவனைத் தன் மகன் போலவே பார்த்துக் கொள்வாள்.

அவனுக்குப் பிடித்த திண்பண்டங்களைச் செய்து தருவதில் இருந்து அவனுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பது, இரவு கதை சொல்லி தூங்க வைப்பது என்று அவனுடனே இருக்கும் சித்தியை அவனுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இவ்வாறு இருக்கையில் தான் வைதேகி தனது தூரத்து உறவினரின் வீட்டு திருமணத்துக்குச் செல்வதாகக் கூறி மூத்தமருமகளை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட வீட்டில் நந்தினியுடன் சேர்த்து ராமச்சந்திரன், கார்த்திக், விக்னேஷ் மற்றும் விவேக் அனைவருக்கும் வீடே அப்போது தான் அமைதியாய் இருப்பது போன்ற உணர்வு.

அவரவர் வேலையைப் பார்த்தபடி இருக்க அந்த மூன்று வாரங்கள் நந்தினிக்கு நிம்மதியாகக் கழிந்தது. அதை எல்லாம் யோசித்தபடி மதிய உணவைச் செய்து முடித்தவள் விக்னேஷுக்கு சாப்பாடை எடுத்துவைத்து விட அவனும் “நீ வந்ததுக்கு அப்புறம் தான்மா நல்லச் சாப்பாடு சாப்பிடுறோம்...” என்றுப் பாராட்டியபடியே சாப்பிட்டு முடித்தான்.

அவனும் கிளம்பிவிடவே நந்தினிக்கு ஏனோ அந்த வாரம் முழுவதும் களைப்பாகவே இருந்தது. மதியம் வீட்டுக்கு வந்த கார்த்திக் கூட “என்னாச்சு நந்தினி? உங்க முகமே சரியில்லையே… உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று நெற்றியில் கைவைத்துப் பார்க்க

நந்தினி “இல்லை கார்த்திக்… நான் நல்லா தான் இருக்கேன்.. கொஞ்சம் டயர்டா இருக்கு… வேற ஒன்னுமில்லை” என்றாள் அமைதியாக.

“நீங்க எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுட்டுச் செய்யுறது தான் இதுக்குலாம் காரணம். அண்ணியும் அம்மாவும் போட்டது போட்டபடினு அவங்க இஷ்டத்துக்குப் போயிட்டாங்க.. இங்கே நீங்க கிடந்து கஷ்டப்படுறிங்க… இன்னைக்கு நைட்டுக்கு நீங்க சாப்பாடு எதுவும் பண்ண வேண்டாம். நல்லா படுத்து ரெஸ்ட் எடுங்க. தோசைமாவு இருக்குல்ல, நானும் அண்ணாவும் தோசை ஊத்திக்குவோம்… அப்பாக்கும் நாங்களே பார்த்துக்கிறோம்.. நீங்க கிச்சன் பக்கமே வரக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறிவிட்டான்.

சொன்னபடி அன்றைய இரவின் சமையலை அவனும் விக்னேஷும் பார்த்துக் கொள்ள விவேக்கும் சித்தப்பாவின் கையால் சமத்தாகச் சாப்பிட்டுவிட்டு தாத்தாவிடம் கதை கேட்கச் சென்றுவிட்டான். நந்தினி ஒரு தட்டில் தோசை சட்டினியுடன் வரவே அவள் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை ஒதுங்க வைக்கலாம் என்று சமையலறைக்குள் எட்டிப் பார்க்கவும் கார்த்திக் “நாங்க பார்த்துக்கிறோம், நீங்க போய் தூங்குங்க” என்று சொல்லிவிட நந்தினியும் தங்களின் அறைக்கு வந்தவள் அசந்து உறங்கிவிட்டாள்.

மறுநாள் காலை அவள் எழும் போது வீட்டின் வாசல் தெளிக்கப்பட்டிருந்தது. சமையலறையிலிருந்து காபியின் மணம் வர ராமச்சந்திரன் விவேக்கைப் பள்ளிக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்.

அவள் நடுஹாலில் நின்று கொண்டிருக்க கார்த்திக் “எழுந்திட்டிங்களா நந்தினி?” என்றபடி வர அவன் கையில் வைத்திருக்கும் காபியின் மணம் உள்ளுக்குள் சென்று ஏதோ செய்ய நந்தினிக்கு காலையிலேயே குமட்டிக் கொண்டு வரவும் வேகமாக குளியலறையை நோக்கி ஓடினாள் அவள்.

கார்த்திக் பதறிப் போய் அங்கே செல்ல நந்தினி சிங்கில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சுங்க?” என்றபடி அவன் பதறிப் போய் அவளிடம் செல்லவும் நந்தினிக்கு வயிறே காலியான உணர்வு. தலை கிறுகிறுக்க கார்த்திக்கின் டிசர்ட்டை பற்றிக் கொண்டபடி சமாளித்து நின்றவள் “தலை சுத்துது கார்த்திக்” என்று மட்டும் சொல்ல அவன் மனைவியை தோளோடு அணைத்தபடி ஹாலுக்கு அழைத்துவந்து மின்விசிறியை போட்டான்.

ராமச்சந்திரன் மருமகளுக்கு என்னவாயிற்றோ என்று பதறியடித்துக் கொண்டு வர விக்னேஷ் சோகமாக “நேத்து நைட் நம்ம செஞ்சு வச்ச சாப்பாட்டால தான் நந்தினிக்கு இப்பிடி ஆயிடுச்சுடா” என்று கார்த்திக்கிடம் புலம்ப ஆரம்பித்தான்.

கார்த்திக்கும் அதை ஆமோதித்தவன் “ஆமா அண்ணா! இப்போவும் நான் கொண்டு வந்த காபியோட ஸ்மெல்லால தான் அவங்களுக்கு வாமிட் வந்துடுச்சு.. நம்ம சமையல் அவ்ளோ கேவலமாவா இருக்கு?” என்று பதிலுக்கு வருந்த ராமச்சந்திரன் இரு மகன்களின் அறிவை எண்ணி தன் தலையிலடித்துக் கொண்டார்.

“டேய் எனக்குனு பிறந்த மண்டூகங்களே! என் பொண்ணுக்கு உடம்பு முடியலைடா… அவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போகாம உங்க நளபாகத்தோட குத்தம் குறையைச் சொல்ல இதுவா நேரம்?” என்று கடிந்து கொள்ள கார்த்திக்கும் தந்தை கூறுவது தான் சரியென்று நந்தினியை எழுப்பிவிட்டபடி மருத்துவமனை செல்ல உடை மாற்றச் சொல்லிவிட்டுத் தானும் தயாரானான்.

இருவரும் மருத்துவமனைக்குச் சென்று விடவே ராமச்சந்திரன் பேரனைப் பள்ளி வாகனத்தில் அனுப்பிவிட்டு வந்தவர் கடவுளிடம் “எல்லாம் நல்ல சேதியா தான் இருக்கணும் முருகா… அப்பிடி மட்டும் இருந்தா நான் நாளைக்கே திருப்பரங்குன்றம் வர்றேன்” என்று பெறாத மகளுக்காக வேண்டிக் கொள்ள கடவுளுமே அவரது வேண்டுதலை செவிமடுத்து விட்டார் தான்.

மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய கார்த்திக்கும் நந்தினியும் வரும்போது நல்லச் செய்தியுடன் வந்தனர். ராமச்சந்திரன் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தவர் மகனும் மருமகளும் இன்முகத்துடன் வரவே அவர்கள் வாயால் அச்செய்தியைக் கேட்க ஆவலாக இருக்க நந்தினியும் அவனும் ஒரே குரலில் “அப்பா நீங்க தாத்தா ஆகப் போறிங்க” என்று கூறவே அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பூஜையறையிலிருந்து விபூதியை எடுத்து வந்தவர் மருமகளின் நெற்றியில் பூசியவர் “நல்லா இருக்கணும்மா…. பேரனோ பேத்தியோ சீக்கிரமா பெத்து என் கையில குடுத்துடுடா” என்று வாஞ்சையுடன் கூறிவிட்டு இருவரையும் மனதாற ஆசிர்வதித்தார்.

கார்த்திக்கின் போன் சிணுங்க யாரென்று பார்த்தவன் விக்னேஷ் அழைப்பதைக் கண்டதும் அழைப்பை ஏற்றான். நந்தினிக்கு உடம்புக்கு என்னவென்று விக்னேஷ் விசாரிக்க அண்ணனிடம் தங்களின் குழந்தை பற்றியச் செய்தியைப் பகிர்ந்து கொண்டான் கார்த்திக்.

அன்று முழுவதும் அவளை ஒரு வேலை கூட செய்ய விடாமல் அருகில் இருந்து பார்த்துக் கொண்டவன் மாலையில் விக்னேஷ் வரவும் அவனுடன் சேர்ந்து இனிப்பு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றுவிட்டான். அண்ணனும் தம்பியும் இனிப்புடன் திரும்பும் போது இத்தனை நாட்கள் வீட்டில் நிலவிய அமைதி தொலைந்திருக்க வைதேகியும் மகாலெட்சுமியும் பேசுவது வாசல் கேட் பக்கம் வரும் போதே இருவரின் செவிப்பறையையும் கிழித்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும் இருவரும் தாயிடம் அவர்களின் உறவினர்களின் நலனை விசாரித்துவிட்டு இனிப்பை நீட்ட வைதேகி எதற்கு என்று புரியாமல் அதை வாயில் போட்டுக் கொண்டார். மகாலெட்சுமியும் அப்படியே செய்ய ராமச்சந்திரன் அவர்களுக்கு இன்னும் விஷயம் தெரியாது என்று இரு மகன்களிடமும் சைகை காட்டவும் தானே சொல்லிக் கொள்வதாக அவருக்கு பதிலளித்தான் கார்த்திக்.

அன்னையிடம் “மா! நீங்க பாட்டி ஆகப் போறிங்க” என்று அவன் சொல்லவும் வைதேகியின் முகத்தில் சந்தோசம் தெரிய அப்போது நந்தினி வரவே முகம் மீண்டும் சாதாரண நிலைக்கே சென்றது. மகனிடம் அமைதியாகப் பேசியவர் மருமகளை கவனமாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு பொதுப்படையாகக் கூறிவிட்டு அவரது அறைக்கே சென்றுவிட மகாலெட்சுமியின் முகமோ அந்தச் செய்தியைக் கேட்டதும் சுண்டிப் போய்விட்டது.

மனதிற்குள் “இந்த ரெண்டுக்கும் சோறு போடுறதே பெருசு… இதுல இதுங்க பெத்துப் போட்டதையும் சேர்த்துப் பார்த்துக்கவா என் புருசன் சம்பாதிக்கிறாரு?” என்று பொறுமியவள் தனிமையில் கணவனிடமும் அதே வார்த்தைகளைச் சொல்ல விக்னேஷ் அவளை ஒரு அற்பப்புழுவைப் போல் பார்த்துவிட்டுச் சென்றதோடு சரி, அதற்குப் பின் அவளிடம் பேச அவனுக்கு பிடிக்கவே இல்லை.

அவளால் வாயைத்  திறந்து எதுவும் சொல்ல முடியாத நிலை. இரவுணவு தயாரிக்கும் வேலையும், பாத்திரம் கழுவும் வேலையும் அவள் தலையில் விழ “இந்த மகாராணிக்கு நான் சமைச்சு வேற கொட்டணுமாக்கும்? எல்லாம் என் நேரம்” என்று முணுமுணுத்துவிட்டு ஏனோதானோவென்று வெந்ததும் வேகாததுமாகச் செய்துவைத்தாள்.

மறுநாள் விடியலில் நந்தினிக்கு எழ முடியாமல் போய்விட வாசல் தெளிப்பது, காலையுணவு, விவேக்கை பள்ளிக்கு தயார் செய்வது எல்லா வேலையையும் மருமகளும் மாமியாரும் மூச்சு வாங்கியபடி செய்த போது தான் இத்தனை நாட்கள் தனியாளாக நந்தினி எவ்வளவு சிரமத்துடன் இந்த வேலைகளைச் செய்திருப்பாள் என்பது அவர்களின் மரமண்டையில் உறைத்தது.

இருந்தாலும் மனதில் கரித்துக் கொட்டியபடி வேலையைச் செய்தவர்களிடம் ராமச்சந்திரன் “எனக்கு மதியானம் சாப்பாடு வேண்டாம் வைதேகி.. நான் திருப்பரங்குன்றம் போறேன்” என்று கூறிவிட்டார். அவர் ஏன் செல்கிறார் என்ற காரணத்தை ஓரளவுக்கு இருவரும் ஊகித்துக் கொள்ள ஒன்றும் சொல்லாமல் தலையாட்டி வைத்தனர்.

மகாலெட்சுமி விக்னேஷும், கார்த்திக்கும் புறப்பட்டுச் சென்றுவிட வாய் விட்டே புலம்ப ஆரம்பித்தாள்.

“அத்தை ஏதோ என் புருசன் இப்போ தான் புத்தி வந்து ஒழுங்கா வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்காரு.. இப்போ சேர்த்தா தான் நாங்களும் நாலு காசு சேர்த்தபடி. ஆனா இப்பிடி கார்த்திக் தம்பியும், இவளும் இங்கே வந்து உக்காந்துகிட்டா எப்பிடி?” என்று கூற வைதேகி எதுவும் கூறாமல் அமைதி காத்தபடி வேலையை மட்டும் கவனித்தார்.

ஆனால் எறும்பு ஊற ஊறக் கல்லும் தேயும் என்பது  போல மகாலெட்சுமி மெதுவாக நந்தினியின் குழந்தை விஷயத்தை எடுத்துவிட ஆரம்பிக்க அவரும் நிறம் மாற ஆரம்பித்தார்.

“அத்தை! இப்போ இவளுக்கு தலைப்பிரசவத்தை அவங்க அம்மா வீட்டுல தான் பார்க்கணும்னு சொன்னா கார்த்திக் தம்பி அதுக்கு ஒத்துக்க மாட்டாரு.. என் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்க்கக் கூடவா நான் வழியத்தவனா போயிட்டேனு டயலாக் பேசுவாரு… செலவை விடுங்கத்த… இந்த மகாராணி இப்போவே சுருண்டு சுருண்டுப் படுத்துக்கிறா.. இவளுக்கும் சேர்த்து இன்னும் ஏழு மாசத்துக்கு நீங்களும் நானும் தான் ஊழியம் பார்க்கணும். இன்னைக்கு காலையில அவ வாமிட் பண்ணுனதை பார்த்தே எனக்கு சோறு, தண்ணி உள்ளே போக மாட்டேங்குது.. என்னால இதை சமாளிக்க முடியும்னு தோணலை அத்தை” என்று அவள் பேசிய விஷமொழிகள் அனைத்தும் தண்ணீர் குடிக்க வந்த நந்தினியின் காதில் தெளிவாக விழுந்துவிட்டது.

மகாலெட்சுமியும் பேசிவிட்டு எதேச்சையாகத் திரும்பியவள் அங்கே நந்தினி நிற்பதைப் பார்த்ததும் ஒரு கணம் குற்றவுணர்ச்சியில் அமைதியானாலும் பின்னர் ‘இவ கேட்டா எனக்கு என்ன?’ என்ற அலட்சியத்துடன் நிற்க

நந்தினி “எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்குக்கா! இல்லைனா என் வேலையை நானே பார்த்துப்பேன். இனிமே நீங்க கஷ்டப்பட வேண்டாம். எனக்கு நானே சமைச்சிக்கிறேன். அப்புறம் வாமிட் எடுக்கிறேனு சொன்னிங்களே, இது பிரெக்னென்சி டைமில எல்லாருக்கும் வர்றது தான். விவேக்கை உண்டானப்போ உங்களுக்கும் இதுலாம் இருந்திருக்கும்” என்றுச் சொல்லிவிட்டுக் கிளம்ப முயல

மகாலெட்சுமி “என் பிள்ளைக்காக நான் கஷ்டப்படுறதுல நியாயம் இருக்கு.. உன் பிள்ளைக்காக நான் ஏன் கஷ்டப்படணும்? இல்ல தெரியாம தான் கேக்குறேன், உன் புருசனுக்கு வேலை இல்லை... உன்னாலயும் வெளியே எங்கேயும் போய் வேலை பார்க்க முடியலைங்கிறப்போ உங்களுக்கு இப்போ குழந்தை மட்டும் ரொம்ப அவசியமோ?  

எவனோ செலவு பண்ணுறானு சொல்லிட்டு வயித்தை தள்ளிட்டு வந்துட வேண்டியது… இங்கே உங்களை வச்சிருக்கிறதே பெருசு.. இதுல இன்னொரு டிக்கெட்டும் வந்தா அதுக்கும் சேர்த்து என் புருசன் தானே காசு அழணும்! எனக்குத் தெரிஞ்சு இது பிறக்காம இருக்கிறதே நல்லது” என்று அவள் வரம்பு மீறிப் பேசிவிட வைதேகி இவையனைத்தையும் பார்த்துக் கொண்டு யாரையோ பேசுகிறாள் என்பது போன்ற தோரணையுடன் காபியை அருந்திக் கொண்டிருந்தார்.

நந்தினிக்கு இந்த விஷ வார்த்தைகள் முள்ளாய்த் தைக்க அவள் பேச வாயெடுக்கும் முன்னரே உள்ளே யாரோ வரும் அரவம் கேட்டது.

மூன்று பெண்களும் திரும்பிப் பார்க்க அங்கே முகம் சிவக்க கோபத்துடன் நின்றவன் கார்த்திக்.

அவனைக் கண்டதும் வைதேகி காபி தம்ளரை வைத்தவர் “கார்த்தி கிளாஸ் சீக்கிரமா முடிஞ்சுட்டாடா?” என்று எதுவும் நடக்காதது போலக் கேட்க மகாலெட்சுமியோ இவன் தான் பேசியதைக் கேட்டிருப்பானோ என்ற பயத்துடன் அமைதியாகி விட்டாள்.

கார்த்திக் வேறு எதுவும் பேசாமல் வைதேகியிடம் “நீங்க தான் என்னைப் பெத்திங்களாம்மா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க

அவர் “என்ன கார்த்தி…. இ…இப்பிடிலாம்…” என்று தடுமாற

அவன் “நீங்க தான் என்னைப் பெத்திங்கன்னா ஏன் உங்களுக்கு இன்னும் உலகத்தைக் கூடப் பார்க்காத என் பிள்ளை மேல இவ்ளோ வன்மம்? அண்ணி வாய்க்கு வந்தபடி பேசுறாங்களே, ஒரு பெரியமனுசியா அவங்களை அப்பிடிலாம் பேசாதேனு சொல்லாம சாதாரணமா காபி குடிச்சிட்டு இருக்கிங்களே… அப்போ என் மேலயும், என் பொண்டாட்டி பிள்ளை மேலயும் உங்களுக்கு துளி கூட அக்கறை இல்லைனு தானே அர்த்தம்?” என்று உறும வைதேகியும் மகாலெட்சுமியும் அவன் கோபத்தைக் கண்டு அரண்டுவிட்டனர்.

அவன் மகாலெட்சுமியின் புறம் திரும்பியவன் “நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டிங்கப் போல… நீங்க விவேக்கை உண்டானப்போ விக்னேஷுக்கு வேலை இல்லை. அப்போ உங்களுக்கு டெலிவரி செலவு எல்லாத்தையும் பார்த்தது நான் தான்… என்னோட காசுல தான் உங்க பிள்ளை பிறந்து வளர்ந்து இன்னைக்கு நடமாடிகிட்டு இருக்கான்…

முழுசா ஆறு வருசம் புருசனையும் பொண்டாட்டியையும் உக்கார வச்சு சாப்பாடு போட்டிருக்கேன் நான். அந்தக் காசை சேர்த்து வச்சிருந்தா நான் எனக்குனு ஒரு மளிகைக்கடையாச்சும் வச்சு மானத்தோட என் பொண்டாட்டியைக் காப்பாத்திருப்பேன்… இப்பிடி என் காசுல வாழ்ந்தவங்க கிட்ட அவளை ஏச்சு பேச்சு வாங்க விட்டிருக்க மாட்டேன்… என் அண்ணன், என் அண்ணி, என் குடும்பம்னு நினைச்சேன்.

ஆனா நீங்க ரொம்பத் தெளிவா தான் யோசிச்சிருக்கிங்க… நீங்க சொன்னது தான் சரி. உங்க புருசன் காசுல நான் ஏன் என் பொண்டாட்டி பிள்ளையோட வாழணும்?” என்று இறுக்கமானக் குரலில் கேட்டுவிட்டு அவர்களின் அறைக்குள் சென்றவன் சிறிது நேரம் கழித்துத் திரும்பும் போது கையில் சூட்கேசுடன் திரும்பினான்.

நேராக நந்தினியிடம் வந்தவன் “வாங்க கிளம்பலாம்” என்று கூற் அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தபடி தயங்க கார்த்திக் “இதுக்கு மேல இங்கே இருந்து இவங்க கையால சாப்பிடுறதுக்கு நாலு தெருவுல பிச்சை எடுத்துடலாம்.,. இப்போ நீ வரப் போறியா இல்லையா?” என்று அழுத்தமானக் குரலில் கோபத்துடன் கேட்க நந்தினி எழுந்துவிட்டாள்.

மனைவியின் கையைப் பற்றிக் கொண்டவன் “இனிமே எங்களுக்கும் இந்த வீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை… என்னோட குடும்பம்னா அது நான், என்னோட பொண்டாட்டி, என் பிள்ளை மட்டும் தான். இனிமே அண்ணன் தம்பி, அம்மா பிள்ளைனு சொல்லிட்டு யாரும் என் கிட்ட பேச வந்துடாதிங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் உங்க எல்லாரையும் நான் தலை முழுகிட்டேன்” என்று தெளிவானக்குரலில் சொல்லிவிட்டு வெளியேற வைதேகியும் மகாலெட்சுமியும் வெளியேறுபவர்களைத் தடுத்து நிறுத்தும் வழியறியாது அதிர்ச்சியில் நின்றனர்.

கார்த்திக் மனைவியுடன் தெருவில் நடக்கத் தொடங்க முழுத்தெருவும் அதை வேடிக்கை பார்த்தது. நந்தினி கார்த்திக்கிடம் “நம்ம எங்கே போறோம் கார்த்திக்?” என்று கேட்க

அவன் “தெரியலை…” என்று மொட்டையாகக் கூறியவன் அடுத்து நந்தினி போகச் சொன்ன இடத்தைக் கேட்டு அதிர்ந்து நின்றான்.

அவனது அதிர்ச்சியைப் பார்த்தவள் “இப்போ நம்ம சென்னைக்கு போனலும் உங்களுக்கு வேலை கிடைக்கும். ஆனா மறுபடியும் பிடிக்காத வேலைனு மனக்குறையோட தான் நீங்க அதைச் செய்யணும். அதுக்கு நம்ம ஏன் ந்கே போகக் கூடாது? ஒருவேளை மாமனார் வீட்டுல தங்குறதை கவுரவக்குறைச்சலா நினைக்கிறிங்களா? கவலைப்படாதிங்க எனக்கு கூடப்பிறந்தவங்கன்னு யாரும் இல்லை. அதனால உங்களை அங்கே யாரும் குத்திக் காட்ட மாட்டாங்க” என்றாள் தன் மனதின் வலியை மறைத்துக் கொண்டவளாய்.

கார்த்திக் “இல்லை நந்தினி. நீ சொன்னபடி நம்ம அங்கேயே போவோம். இனிமே என் பொண்டாட்டிக்கு எங்கே மரியாதை இருக்கோ அங்கே தான் நானும் இருப்பேன்” என்று கூறிவிட்டுப் புன்னகைத்தவன் முதல் வேலையாகத் தாங்கள் வரப் போகும் விஷயத்தை மாமனாரிடம் தெரிவிக்க அவருக்குப் போனில் அழைக்க ஆரம்பித்தான்.

 

தொடரும்...


Quote
 Thiruppathi Thiru
(@Thiruppathi Thiru)
Guest
Joined: 2 months ago
Posts: 4
25/02/2020 5:09 pm  

Super karthik 👌👌👌💐💐💐👍👍👍


ReplyQuote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
02/03/2020 10:44 pm  

கார்த்திக் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: