Forum

நிலவு 15  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 4 months ago
Posts: 333
27/02/2020 1:38 pm  

 

முத்துசாமி பார்க், செங்கோட்டை…

பார்க்கின் மையத்திலிருக்கும் யானை சிலைகளைக் கொண்ட நீருற்றின் படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்து அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமிகளை ரசித்துக் கொண்டிருந்தாள் நந்தினி. அவளுக்கு அப்போது ஆறு மாதம் நடந்து கொண்டிருக்க மேடிட்டிருந்த வயிற்றை ஒரு கையால் தாங்கியபடி அமர்ந்து நூலகத்துக்குச் சென்றிருந்த கார்த்திக்குக்காகக் காத்திருந்தாள் அவள்.

அவர்கள் செங்கோட்டைக்கு வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. கார்த்திக் எதிர்பார்த்தது போல யாரும் அவன் வேலையை விட்டதைப் பெரிதுபடுத்தவோ, தங்களைத் தேடி வந்துவிட்டார்கள் என்று சிறுமைப்படுத்தவோ செய்யாமல் அவர்களை அன்புடனே அரவணைத்துக் கொண்டனர். திரிபுரசுந்தரிக்குப் பேத்தி கருவுற்றச் செய்தியே காதில் தேன் வந்துப் பாய்ந்தது போலிருக்க நந்தினியின் புகுந்தவீட்டாரை நினைத்து வருந்திய மகளையும் மருமகனையும் “இந்த மாதிரி நேரத்துல நம்ம அவ கூட இருந்தா தான் அவளுக்கு வேணுங்கிறதைப் பார்த்துச் செய்ய முடியும்னு அந்த கடவுளே அவளையும் மருமகப்பிள்ளையையும் அனுப்பி வச்சிருக்காருனு நினைச்சுக்கோங்க. அவங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கிறதை மட்டும் யோசிங்க” என்று வீட்டின் பெரியவராய் அவர்களைத் தேற்றினார்.

கையோடு பேத்தியையும், அவள் கணவனையும் இத்தனை நாட்கள் சும்மா கிடந்த தோட்டத்து வீட்டில் தங்கிக் கொள்ளுமாறுச் சொன்னவர் கார்த்திக்கிடம் “என்னடா இப்பிடி தனியா தங்க வச்சிட்டாங்களேனு நினைக்காதிங்க... அந்த வீடு ஊரோட அரவம் எதுவுமில்லாம அமைதியான இடத்துல இருக்கு.. உங்களுக்குப் படிக்கிறதுக்கு அந்த மாதிரி சூழ்நிலை தான் சரியா வரும்…. இங்கேயே இருந்திங்கனா ஆள்கள் வந்துப் போக இருப்பாங்க… உங்களுக்கு தொந்தரவா இருக்கும்” என்று காரணத்தை விளக்க கார்த்திக்கும் அதைப் புரிந்து கொண்டான்

“நீங்க என்னை இப்பிடி நீங்க வாங்க போங்கனு சொல்லாதிங்க பாட்டி… கார்த்தினே கூப்பிடுங்க… என்னை இன்னும் உங்கப் பேத்தியோட ஹஸ்பெண்டாவே மட்டுமே பார்க்காதிங்க.. ஒரு பேரனா பாருங்க” என்றுச் சொன்னதற்குப் பிறகு அவரும் அவனைத் தனது மற்ற நான்கு பேரன்களைப் போலவே அவனையும் உரிமையாகவே நடத்த ஆரம்பித்தார்.

அவர்களை அன்றே தோட்டத்துவீட்டுச்சாவியைக் கொடுத்து அனுப்பி வைத்தவர் கூடமாட உதவிக்கு மணிகண்டனையும் உதவிக்கு அனுப்பிவைத்தார். அவரும் பொருட்களை எடுத்து வைக்க உதவியவர் மளிகைச்சாமான்களை வாங்கி வைத்துவிட்டுக் கிளம்பினார்.

அவர்களில் யாருமே கார்த்திக்கை மரியாதைக்குறைவாக நடத்தவில்லை. கார்த்திக் நந்தினியிடம் “உங்க வீட்டுல யாருமே என்னை மதிப்புக்குறைவா பேசலையே… நியாயப்படி உங்க அப்பா ‘உன்னை நம்பித் தானே பொண்ணை கட்டிவச்சேன்.. இப்பிடி வேலையைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியேனு’ என்னைக் கேட்டிருக்கணும். இல்லைனா வருத்தமாவது பட்டிருக்கணும்… ஆனா இங்கே எல்லாரும் நார்மலா இருக்காங்களே… அது எப்பிடி நந்தினி? இதைப் பத்தி உனக்கு எதாவது தோணுதா?” என்று கேட்க

நந்தினி சாதாரணமாக “ம்ம்ம்… தோணுது… பட் சொன்னா நீங்க கோச்சுக்கக் கூடாது” என்றுச் சொல்ல கார்த்திக்கும் சரியென்று தலையாட்டினான்.

நந்தினி கணவனின் கையைப் பற்றியவள் புன்னகையுடன் “அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் ஒரு மருமகன் மாமியார் வீட்டுக்கு வந்தா அவன் மகாராஜா தான்… அதுவே மருமகள் மாமியார் வீட்டுக்குப் போனா அவ முழுநேர வேலைக்காரி மட்டும் தான்” என்று கேலி செய்யக் கார்த்திக் அவள் கிண்டலாகக் கூறினாலும் அவள் விஷயத்தில் அது தானே உண்மை என்பதை உணர்ந்தவன் மனைவியை ஆதுரத்துடன் பார்த்தபடி அணைத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் வாழ்க்கை சீரான நீரோடை போல தெளிவாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

தினமும் அன்றாட வேலைகளைப் பார்த்துக் கொண்டே கணவனையும் கவனித்துக் கொண்டாள் நந்தினி. மாடியின் வராண்டா அவனது படிப்புக்காகவே ஒதுக்கப்பட்டது. அங்கேச் சென்று அமர்ந்தான் என்றால் சாப்பிட மட்டுமே கீழே இறங்குவான் கார்த்திக். நந்தினி கூட “ஏன் இவ்ளோ கஷ்டப்படுறிங்க கார்த்திக்? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டுப் படிங்க” என்று அக்கறையுடன் கூறினால் அதற்கு தெளிவான பதில் அவனிடமிருந்து வந்துவிடும்.

“நானும் ரிலாக்ஸ் ஆவேன் நந்தினி. எப்போ தெரியுமா? வேலை இல்லை, கையில காசு இல்லைனு நம்மளை அசிங்கப்படுத்துனவங்க முன்னாடி நல்ல வேலையோட கை நிறைய சம்பளத்தோட போய் நின்னுட்டு அதுக்கு அப்புறம் ரிலாக்ஸ் ஆவேன். அது வரைக்கும் எனக்கு நிம்மதியே கிடையாது” என்று சொல்பவனை நந்தினியும் அதற்கு மேல் வற்புறுத்துவது இல்லை.

அதே சமயம் என்ன தான் படிப்பில் மூழ்கியிருந்தாலும் மனைவியிடத்தும், பிறக்கப் போகிற குழந்தையிடத்தும் அக்கறை காட்டுவதில் சலிப்பதில்லை அவன். நந்தினிக்குச் சமையலுக்கு உதவுவது, அவளை மருத்துவரிடம் மாதாந்திரப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது, மாலையில் அவளுடன் வாக்கிங் செல்வது என்று நல்ல கணவனாக அன்பைப் பொழிந்தான் அவன்.

அன்றும் அப்படி தான் அவளுடன் வாக்கிங் வரும் போது பார்க்கில் அவளை அமரச் சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள நூலகத்தில் புத்தகம் எடுக்கச் சென்றிருந்தான் அவன். நந்தினி அவன் வரும்வரையிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் சுகந்தியிடம் இருந்து வீடியோ கால் வரவே போனை எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

“சுகா எப்பிடி இருக்க?” என்று ஆரம்பித்தவளிடம் சுகந்தி உற்சாகமாகப் பேச் ஆரம்பித்தாள். அவளைப் பற்றி, நிதினின் புதிய பள்ளியைப் பற்றி, மாமியார் கணவனைப் பற்றியென்று அவளின் பேச்சு நீளவே நந்தினிக்கு அவளை அப்படி பார்க்க சந்தோசமாக இருந்தது.

“நந்து! நீ ரொம்ப அழகாயிட்டடி… எல்லாம் என் மருமகள் செய்யும் மாயம்… என்ன சொல்லுறா செல்லக்குட்டி?” என்று பேச்சு இப்போது நந்தினியின் குழந்தையைப் பற்றித் திரும்பியது.

குழந்தையின் வளர்ச்சி, அவளின் உடல்நலத்தை விசாரித்தவள் நந்தினிக்கு பெண் குழந்தை தான் என்று உறுதியாகக் கூற நந்தினி “அது எப்பிடி நீ இவ்ளோ கன்ஃபார்மா சொல்லுற?” என்று கேட்க

சுகந்தி “நான் கடவுள் கிட்ட வேண்டுதல் வச்சிருக்கேன் நந்தினி. உனக்கு பொண்ணு பிறந்தா உன் பொண்ணையே என் மருமகளா ஆக்கிக்கணும்னு என்னோட ரொம்ப நாள் ஆசையை நான் அவர் கிட்டச் சொல்லிருக்கேன். கண்டிப்பா கடவுள் என் வேண்டுதலைக் கேட்டுப்பாரு” என்று அவளுக்கே உரித்தான வெகுளித்தனத்துடன் பேச அவளுடன் பேசியது நந்தினிக்கு இதமாக இருந்தது.

அவள் பேசி முடிக்கவும் கார்த்திக் புத்தகங்களுடன் திரும்பவும் சரியாக இருந்தது. நந்தினி அவனைக் கண்டதும் தரையில் கையூன்றி எழும்ப முயல கார்த்திக் வேகமாக அவள் அருகில் வந்து மனைவி எழும்ப உதவினான்.

“அதான் நான் வர்றேன்ல. வந்ததுக்கு அப்புறம் நானே கையைப் பிடிச்சுத் தூக்கிவிடப் போறேன். நீ ஏன் சிரமப்பட்டு எழுந்திருக்கிற?” என்று அக்கறையுடன் மனைவியைக் கடிந்து கொண்டவன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

நந்தினி “இல்லைனா மட்டும் இவரு அப்பிடியே உள்ளங்கையில வச்சு தாங்குவாரு?” என்று கேலி செய்தபடி அவனுடன் நடக்க ஆரம்பித்தாள். கார்த்திக் மனைவியின் கேலியை ரசித்தபடி அவளுடன் கரம் கோர்த்து நடந்தவன் “இப்போ என்ன நான் வீடு வரைக்கும் உன்னை தூக்கிட்டுப் போகணும், அவ்ளோ தானே” என்று அவளத் தூக்க முயல

நந்தினி பதறிப்போய் “என்ன பண்ணுறிங்க கார்த்திக்? எல்லாரும் பார்க்கிறாங்க” என்று விலக

கார்த்திக் “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்… இருந்தாலும் உனக்கு இவ்ளோ பேராசை ஆகாது நந்தும்மா. மனுசன் ராத்திரி பகல் பார்க்காம எக்சாமுக்கு கண் முழிச்சுப் படிச்சி டயர்டா இருக்கேன்.. இதுல உன்னை வேறத் தூக்கி என் கையைப் பறி கொடுக்கவா?” என்று அவளது காலை வாரிவிட நந்தினி கோபத்துடன் அவன் கையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு விறுவிறுவென்று முன்னே செல்ல ஆரம்பித்தாள்.

கார்த்திக் கையைத் தடவியபடியே “வேகமா நடக்காதே நந்து… நான் வர்றேன்” என்றபடி மனைவியின் பின்னே ஓடினான்.

இருவரும் செல்லமாகச் சண்டையிட்டு முடிக்க நந்தினி “கார்த்திக் அப்பிடியே பாபா ஸ்டோர் போயிட்டு சில ஜாமான் வாங்க வேண்டியிருக்குது. அதெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்குப் போவோம்” என்று கூற கார்த்திக்கும் மனைவியுடன் சேர்ந்து பார்க்கை விட்டு வெளியேற ஆரம்பித்தான்.

**********

மதுரை…

வைதேகி கணவரிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார். வேறு ஒன்றும் இல்லை. இன்னும் சில தினங்களில் அவரது ஒன்று விட்ட அக்கா மகளின் பிள்ளைக்கு காது குத்தப் போகிறார்கள். அதற்கு திருச்சி வரைச் செல்ல வைதேகி மகாலெட்சுமி இருவரிடமும் கையில் சல்லிக்காசு இல்லை. மகாலெட்சுமி கணவனிடம் கேட்டதற்கு அவனோ “நான் எட்டுமணிநேரம் முதுகு ஒடிய சிஸ்டம்ல உக்காந்துச் சம்பாதிக்கிறேன்டி…. இதுல நீ அடிக்கடி ஊர் சுத்த பைசா கேட்டா நான் எங்கே போவேன்?” என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட்டான்.

அதை மாமியாரிடம் கூறி மாமனாரிடம் கேட்குமாறு சொல்ல வைதேகிக்கு மட்டும் தான் தெரியும், மூத்தமகன் சொன்ன அதே பதில் தான் தன் கணவரிடமிருந்தும் வரும் என்று. இருந்தாலும் ஒரு நப்பாசை. வாய் விட்டுக் கேட்டுவிட்டவர் சாய்வுநாற்காலியில் சாய்ந்து செய்தித்தாளில் கண்ணை பதித்திருக்கும் கணவரின் பதிலுக்காகக் காத்திருக்க

ராமச்சந்திரன் யாரோ மூன்றாவது மனுசியிடம் பேசுவதைப் போல “ஏன் இப்போ என் கிட்ட வந்து நிக்கணும்? காசு காசுனு பறந்து என் பிள்ளையோட சம்பாத்தியத்தை கரைச்சது பத்தாதா? இங்கே யாருக்கும் தண்டச்செலவு பண்ண நான் தயாரா இல்லை. இப்போ சொந்தக்காரன் வீட்டு விஷேசத்துக்குப் போகலைனு யாரு அழுதா? சொந்தப்பிள்ளையையும் மருமகளையும் துரத்திவிட்டுட்டு இப்போ யாரோ பெத்தப்பிள்ளையோட காதுக்குத்துக்குப் போறாங்களாம். இங்கே பாருடா விக்னேஷ், என் கிட்ட இருந்து நயாபைசா பெயராதுனு சொல்லிடு.

வழக்கம் போல நாளைக்கு நான் செங்கோட்டைக்குப் போறேன். கடைவாடகைப்பணத்தை கார்த்திக் கிட்ட குடுத்துட்டு அப்பிடியே என் பொண்ணு கையால சாப்பிட்டுட்டு வரப் போறேன். அது என் மகன் சம்பாத்தியத்துல மீட்ட காம்ப்ளக்ஸ். அதோட வருமானம் அவனுக்குப் போகணுமே தவிர உண்ட சோறு செரிக்காம ஊர் சுத்துறவங்களுக்கு வெட்டிச்செலவு பண்ண என்னால குடுக்க முடியாது” என்று தீர்மானமாக மறுத்துவிட்டு எழுந்தார்.

செய்தித்தாளை சாய்வுநாற்காலி மீது வீசியவர் “ச்சே! ஒரு மனுசன் நிம்மதியா பேப்பர் படிக்க முடியுதா இந்த வீட்டுல?” என்று எரிந்துவிழுந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

விக்னேஷ் அன்னையிடமும் மனைவியிடமும் “ஒழுங்கா வேற வேலை இருந்தா போய் பாருங்க.. சும்மா மாசாமாசம் அவன் வீட்டுக்கு இவன் வீட்டுக்குனு டூர் போறதை நிறுத்துங்க… உனக்கும் சேர்த்து தான் சொல்லுறேன்” என்று கூறிவிட்டு தந்தையிடம் ஏதோ பேசுவதற்காகச் சென்றுவிட்டான் அவன்.

வைதேகிக்கும் மகாலெட்சுமிக்கும் இந்த அலட்சியப்பேச்சுக்கள், வெறுப்பு உமிழும் வார்த்தைகள் இந்த மூன்று மாதத்தில் பழகிப்போய்விட்டது. மனைவி பேச்சுத் தட்டாதவராக இருந்தவரை வைதேகியின் செய்கைகள் தான் இப்படி தலைகீழாக மாற்றிவிட்டது.

மருமகள் உண்டாகியிருக்கும் தகவல் அறிந்து திருப்பரங்குன்றம் சென்று பிரசாதத்தோடு திரும்பியவருக்கு வீட்டுக்குள் நுழையும் முன்னரே இளையமகனும், மருமகளும் வெளியேறிய தகவல் தெருவாசிகள் மூலமாகக் காதில் போடப்பட வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே மனிதர் எரிமலையாகத் தான் நுழைந்தார்.

வைதேகியும் மகாலெட்சுமியும் இன்று போல அன்றும் கையைப் பிசைந்தபடி நிற்க முதலில் அவரது வார்த்தைகள் தாக்கியது வைதேகியைத் தான்.

“ச்சீ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷியா? அப்பிடி என்னப் பாவம் பண்ணுனானு மாமியாரும் மருமகளுமா சேர்ந்து என் மகனையும், மருமகளையும் துரத்தி விட்டுட்டிருக்கிங்க? அவன் காசுல உக்காந்துச் சாப்பிட்டுட்டு ஊர் சுத்திட்டு அவனையும் அவன் பொண்டாட்டியையும் இப்பிடி நடத்த உங்களுக்கு அசிங்கமா இல்லை?” என்று வெடித்தவருக்கு இன்னும் மூத்தமருமகள் நந்தினியின் குழந்தையைப் பற்றி பேசிய விவரம் தெரியாது.

ஆனால் அந்த விபரத்தையும் நந்தினியிடம் மோர் வாங்கிச் சென்ற பெண்மணி விக்னேஷின் காதில் போட்டுவிட அவன் மனைவியிடம் “என்ன வார்த்தை பேசிருக்க நீ? அந்த அளவுக்கு காசுவெறி கண்ணை மறைக்குதோ? உன்னை நம்ப முடியாது… நாளைக்கே காசுக்காக என்னைக் கொன்னாலும் கொன்னுடுவ…. மனுசியா இருந்தா நன்றி வேணும்டி…இந்தக் காலத்துல எந்த தம்பி அண்ணன் பையனுக்கு ஃபீஸ் கட்டி படிக்க வைக்கான்? எல்லாத்தையும் மறந்துட்டுப் பிள்ளைத்தாச்சி பொண்ணு கிட்ட பேசுற பேச்சா அது? நீயெல்லாம் மனுசஜென்மமே கிடையாது…” என்று கொதித்துவிட்டுத் தான் அடங்கினான்.

ஆனால் தந்தையும் மகனும் அதற்குப் பிறகு இந்த இருவரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. விக்னேஷ் மாதாமாதம் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிப் போட்டுவிட்டு வரவு செலவையும் அவனே பார்த்துக் கொள்ள ராமச்சந்திரன் அவர்களின் காம்ப்ளக்ஸ் வாடகையை கார்த்திக்கின் கணக்குக்கு அனுப்பிவைத்துவிடுவார்.

கார்த்திக் முதலில் மறுத்தவன் பின்னர் அண்ணனும், அப்பாவும் எடுத்துக் கூற பின்னர் அதை வாங்க ஒத்துக் கொண்டான். இவ்வாறு அந்த வீட்டின் ஜீவகளையே நந்தினி கார்த்திக் தம்பதியினரோடு சேர்ந்து சென்றுவிட ராமச்சந்திரன் ஒவ்வொரு மாதமும் மகனையும் மருமகளையும் செங்கோட்டைக்கு வந்து பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்வார்.

பணத்தையும் சுயநலத்தையும் பெரிதாக நினைத்த மகாலெட்சுமியும், இளையமருமகளை விரோதியாக பாவித்த வைதேகியும் தான் பேச்சுத்துணைக்கு ஆளின்றி தனித்துவிடப் பட்டனர்,..

தொடரும்....


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
02/03/2020 10:49 pm  

நல்ல மாமனார்


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: