Forum

நிலவு 8  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
13/02/2020 12:06 pm  

நந்தினி சென்னைக்கு கிளம்பியதும் சுகந்தியும் அவளது மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். வீட்டுக்குச் சென்றவளின் நினைவு முழுவதும் நந்தினியையே சுற்றி சுற்றி வந்தது. அவளது வாழ்க்கை இனி மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை கார்த்திக்கின் இன்றைய நடவடிக்கைகளே உறுதிபடுத்த அவளை நினைத்து மகிழ்ந்தவளின் மனக்கண்ணில் நந்தினியின் திருமணத்தன்று நடந்த நிகழ்வுகள் திரைப்படமாக ஓட ஆரம்பித்தது.

கார்த்திக்கின் அண்ணியான மகாலெட்சுமி நந்தினியுடனே சுகந்தி இருப்பதால் முகம் சுளித்தபடி அவளிடம் வந்து “ஏன்மா நீ எதுக்கு கல்யாணப்பொண்ணு கூட சுத்திட்டு இருக்க? எங்க சொந்தகாரங்கள்லாம் நீ யாருனு கேக்கறாங்க. கழுத்துல தாலி இல்லாம ஒரு பையனையும் வச்சிட்டு நீ இப்பிடி எங்க வீட்டு பொண்ணு கூட நிக்கலாம்? முதல்ல கொஞ்சம் விலகி நில்லு” என்று கூற அது அசோக்கின் காதில் தெளிவாக விழுந்துவிட்டது.

சிறிது நேரத்துக்கு முன்னர் தான் கார்த்திக் மகாலெட்சுமியிடம் இதற்கு விளக்கம் கூறியிருந்தான். அவளோ மீண்டும் மீண்டும் இதே போல பேசுவது அசோக்குக்கு எரிச்சல் மூட்ட இருவரிடமும் வந்தவன் “அண்ணி! இதுக்கான காரணத்தை கார்த்திக் ஏற்கெனவே சொல்லிட்டானே! ஒருவேளை நீங்க அவன் சொன்னதை மறந்துட்டிங்களோ? இவங்க நந்தினி சிஸ்டரோட ஃப்ரெண்ட். இவங்க அங்கே இருக்கிறதுல கல்யாண மாப்பிள்ளைக்கே பிரச்சனை இல்லை. அப்புறம் இதுல கருத்து சொல்ல நம்ம யாரு?” என்று நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல கூறி மகாலெட்சுமியை அனுப்பி வைத்தான்.

மகாலெட்சுமி சென்றதும் சுகந்தி அவனுக்கு நன்றி கூறவே அதை பணிவோடு மறுத்தவன் “ஒரு சிங்கிள் மதரோட வேதனை எனக்கு நல்லாவே தெரியுங்க. எங்க அப்பா என்னையும் அம்மாவையும் விட்டுட்டு போனப்போ என்னை தனியா வளர்க்க எங்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு கண் முன்னாடி பார்த்து வளர்ந்தவன் நானு. மத்தவங்க சொல்லுறதை காதுல போட்டுக்காதிங்க. உங்களுக்காகவும் உங்க மகனுக்காகவும் மட்டும் வாழுங்க” என்று கூறிவிட்டு சென்றவனின் முகம் இப்போதும் அவள் மனக்கண்ணில் நிழலாடியது.

********

நந்தினியும் கார்த்திக்கும் ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தவர்கள் கார்த்திக்கின் ஃப்ளாட்டை அடையும் போது காலை பதினொரு மணி ஆகிவிட்டது. லிஃப்டில் ஏறியவர்கள் முதல் தளத்தை அடைந்த போது அங்கே ஒரு மூன்று வயது சிறுமி சாப்பிட அடம்பிடித்து அவள் அன்னையை தன் பின்னே ஓடி பிடித்து விளையாட வைத்துக் கொண்டிருந்தாள்.

நந்தினி இவ்வளவு நேரம் சென்னையின் இயந்திரத்தனமான வேகத்துக்குள் அயர்ந்து போயிருந்தவள் அந்த காட்சியை கண்டதும் முகம் மலர்ந்தாள். குட்டி ரோஜா மொட்டாய் அந்த குழந்தை அங்குமிங்குமாய் ஓடியவள் அவள் அன்னை அவளை பிடிக்க முடியாமல் களைத்து போனவரை போல அமரவும் தாவி வந்து அன்னையை அணைத்துக் கொண்டாள். அவரோ “ஜெசிமாவை அம்மா பிடிச்சிட்டேனே” என்று குழந்தைக்கு சமமாய் குதூகலித்தபடி அவள் கன்னத்தில் முத்தமாரி பொழிந்தபடி அவளுக்கு கிண்ணத்திலிருக்கும் சாதத்தை உருட்டி ஊட்டிவிட ஆரம்பித்தார்.

கார்த்திக்கும் நந்தினியும் இந்த காட்சியை ரசித்தவாறே அவர்கள் அருகில் வந்துவிட கார்த்திக் “என்ன ஆயிஷாக்கா காலையிலேயே அம்மாவும் பொண்ணும் ரன்னிங் ரேஸ் வைச்சிருக்கிங்க போல” என்ற கேலி செய்ய நந்தினி அருகில் வந்த பிறகு தான் அந்த பெண்மணி தங்களின் திருமணத்துக்கு வந்திருந்ததை நினைவுபடுத்திக் கொண்டாள்.

அவனால் ஆயிஷாக்கா என்று விளிக்கப்பட்டவர் ஒரு புன்சிரிப்புடன் “கார்த்திக் வந்துட்டியாப்பா? நீ சென்னை திரும்ப நாளாகும்னு இவ அப்பா சொல்லிட்டிருந்தாரே” என்ற ஆதுரத்துடன் கேட்டவர் நந்தினியிடம் “என்னம்மா புதுப்பொண்ணு சென்னை எப்பிடி இருக்கு?” என்று அவளிடம் சகஜமாக பேச நந்தினியும் அவரின் பேச்சில் ஈர்க்கப்பட்டவளாய் அவரிடம் உரையாட ஆரம்பித்தாள்.

கார்த்திக் “ஜெசிக்குட்டி” என்ற அழைத்தது தான் தாமதம் குழந்தை “கார்த்தி மாமா” என்ற கூவலுடன் அன்னையிடமிருந்து ஃஅவன் தோளுக்கு இடம்பெயர்ந்தாள். அவன் ஆயிஷாவிடம் “அக்கா பால் பாக்கெட் மட்டும் குடுங்களேன். திடீர்னு வந்ததால அவசரத்துல வாங்க மறந்துட்டேன்” என்று கூற ஆயிஷா சரியென்றவர் நந்தினியை தன் ஃபிளாட்டுக்கு அழைத்துச் செல்லவும் கார்த்திக்கும் ஜெசிமாவுடன் அவனது ஃபிளாட்டிற்கு சென்றுவிட்டான்.

ஆயிஷா நந்தினியை உள்ளே அழைத்து வரும் போதே கார்த்திக் புராணத்தை ஆரம்பித்துவிட்டார்.

“தம்பி தங்கமான பையன். ஜெசிமாக்கு அவன்னா உயிரு நந்தினி. என் புள்ள ஒரு தடவை நீச்சல்குளத்துல விழுந்துட்டா, அப்போ அவன் தான் அவளை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு ஓடுனது. அப்போ பார்த்து இவ அப்பா வேற ஊர்ல இல்ல. கையில டிரீட்மெண்டுக்கு காசு இல்லாம முழிச்சப்போ அவன் தான் ஹாஸ்பிட்டல் பில்லை கட்டுனான்.

இவங்க அப்பா ஊருக்கு வந்து அந்த பைசாவை குடுத்தப்போ கூட “என் சொந்த அக்கா பொண்ணுக்கு இப்பிடி ஆகிருந்தா நான் காசு வாங்கிருப்பேனா சார்?”னு ஒரே வார்த்தையில வாங்க மாட்டேனுட்டான். அப்போ இருந்து இவங்க அப்பாவும் அவனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இந்த காலத்துல எத்தனை பேரும்மா காசு பணத்தை மதிக்காம மனுசங்களை மதிக்கிறாங்க?” என்ற கேள்வியுடன் முடித்தவர் பால் பாக்கெட்டை அவள் கையில் கொடுக்க நந்தினிக்கு கணவன் எப்படிப்பட்டவனோ என்ற ஐயம் சற்று விலகி அவன் மீது மரியாதை பிறந்தது.

அவரிடம் புன்னகை முகத்துடன் விடை பெற்றவள் அவர்களின் ஃபிளாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க முயல அதற்குள் கார்த்திக் அவசர அவசரமாய் வந்தவன் “பார்த்துங்க நந்தினி. வலதுகால் வச்சு உள்ளே வாங்க” என்று கூற நந்தினி சிரிப்புடன் வலதுகால் வைத்து உள்ளே நுழைந்தாள்.

அவள் வீட்டின் உள் அமைப்பை தன் முட்டைக்கண்களை உருட்டி பார்க்கத் தொடங்கியவள் கார்த்திக்கிடம் “வீட்டை ரொம்ப நீட்டா வச்சிருக்கிங்க” என்று மனதாற கூற அவனுக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கியது போல பெருமை பிடிபடவில்லை.

அவன் கரத்தைப் பற்றியபடி நின்ற ஜெசிமா நந்தினியை பார்த்துக் கொண்டிருக்க நந்தினி அவளிடம் வந்தவள் அவள் உயரத்துக்கு முழங்காலிட்டபடி “செல்லக்குட்டி என்னடா ஏன் அப்பிடி பார்க்கிறிங்க? நான் அத்தைடா” என்றபடி அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளிவிட அந்த சிறுமி பதிலுக்கு நந்தினியின் கன்னத்தை கிள்ளிவிட்டு கார்த்திக்கிடம் “கார்த்தி மாமா! இந்த அத்தை என்னை கிள்ளிட்டா…பதிலுக்கு நீயும் அவளை கிள்ளு” என்று உதட்டைப் பிதுக்கியபடி கூற

கார்த்திக் அவளை சமாளிக்கும் விதமாக “அதான் நீ கிள்ளிட்டியே ஜெசி” என்று கொஞ்ச அவளோ “அதுல்லாம் முடியாது… கிள்ளு கார்த்தி மாமா” என்று காலை உதைக்க கார்த்திக் வேறு வழியின்றி நந்தினியின் கன்னத்தில் பெயருக்கு கிள்ளி வைத்தான்.

அவன் கிள்ளியதும் “ஐ மாமா கிள்ளிட்டான்” என்று அவள் குதூகலிக்க கார்த்திக் நந்தினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஜெசிமாவை தூக்கிக் கொண்டு அவளது வீட்டை நோக்கி செல்லவும் நந்தினிக்கு அவனது முகபாவத்தைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது.

சிரித்தபடியே வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள் அவள். இரண்டு படுக்கையறை, ஒரு ஹால், ஒரு சமையலறையுடன் அழகான சிறிய பால்கனி. அதில் நின்று பார்த்தால் அந்த அப்பார்ட்மெண்டின் நுழைவு வாயில் கார் பார்க்கிங், நீச்சல்குளம் மற்றும் சிறுவர் பூங்கா என்று அனைத்துமே தெளிவாக தெரியும். நந்தினி பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் கார்த்திக் தான் வருகிறான் என்பதை கண்டு கொண்டாள்.

அவன் பால்கனிக்கு வந்து அவளுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்தபடியே பொதுவான சில விஷயங்களைப் பேச நந்தினி அவனுடன் பேசிய அந்த அரைமணிநேரத்தில் அவன் அடித்த ஜோக்குகளுக்கு சிரித்ததே அதிகம். இந்த இனிய மனநிலையோடு இருவரும் சேர்ந்து அவரவர் உடைமைகளை ஒதுங்க வைத்துவிட்டு அன்றைய சமையலையும் சேர்ந்தே செய்து முடித்தனர். நந்தினிக்கு கார்த்திக்கின் எளிமை மிகவும் பிடித்துவிட்டது. நான் ஆண், நான் எதற்கு சமையலில், வீட்டுவேலையில் உதவவேண்டும் என்ற எண்ணம் துளியுமின்றி அவளுக்கு சரியாக அவனும் வேலை பார்த்தது கூட அவளுக்கு புதிது தான்.

அவனை திருமணநாளன்று இரவு கொஞ்சம் அதிகமாக பேசி விட்டதாக நினைத்து வருந்தியவள் அதற்கு அவனிடம் மன்னிப்பும் கேட்டாள். ஆனால் கார்த்திக் மன்னிப்பு கேட்பதற்கு அவசியமே இல்லை என்று மறுப்புடன் பேச ஆரம்பித்தான்.

“நீங்க பேசுனதுல தப்பு எதுவுமே இல்லை நந்தினி. ஒரு உண்மைய சொல்லவா? அன்னைக்கு நைட் நீங்க திட்டுற வரைக்கும் பொண்ணு வீட்டுல நகை, பணம், பைக், கார்னு வாங்குறது எனக்கும் தப்புனு தோணுனது இல்லை. அவங்க பொண்ணுக்கு அவங்க செய்யுறாங்கன்னு தான் நானும் இதை பெருசா கண்டுக்கல. ஆனா இவ்ளோ பணம், இவ்ளோ நகை, மாப்பிள்ளைக்கு அது குடுங்க இது குடுங்கன்னு டிமாண்ட் பண்ணி வாங்குனதை தெரிஞ்சுகிட்டதும் எனக்கு அசிங்கமா போயிடுச்சு.

தன்மானம் உள்ள எந்த ஆம்பளைக்கும் இது அசிங்கமா தாங்க தெரியும். நல்ல வேளை, நீங்க உங்க மனசுல உள்ள ஆதங்கத்தை கோவமா வெளிப்படுத்திட்டிங்க. நானும் அதை புரிஞ்சுகிட்டேன். ஆனா இன்னைக்கு நிறைய ஆம்பளைங்களுக்கு தன்னோட மனைவி மனசுல இந்த வரதட்சணை விஷயத்தை நினைச்சு வருத்தப்படுற விஷயம் தெரியுறதே இல்ல. அவங்க தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுறதும் இல்ல. இப்பிடி மனசுல வருத்தத்தை வச்சுகிட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சா அந்த வாழ்க்கை உருப்படுமாங்க?

இந்த விஷயத்தை புரிஞ்சிக்காம மாமனார் வீட்டுல செயின் போட்டாங்க, கார் வாங்கி குடுத்தாங்கன்னு மார் தட்டுற ஒவ்வொரு ஆம்பளையும் ஒரு கணவனா மட்டும் இல்ல மனுசனாவும் தோத்து போறான். நான் தோத்து போக விரும்பலை நந்தினி. உங்க கூட வாழுற வாழ்க்கையில நான் உங்களை எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம பார்த்து பழகணும்னு நினைச்சேன். அவ்ளோ தான்” என்று அவன் மனதை மறைக்காமல் சொல்லிவிட நந்தினிக்கும் அவன் மீது இருந்த வருத்தம் சுத்தமாக அகன்றது.

அன்று இரவு அவள் உறங்கிய பிறகு அவளது டைரியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தவன் அவளுக்கு பிடித்தவற்றை அவள் பட்டியலிட்டிருக்க அதை மனதில் நினைத்தபடியே உறங்கிப் போனான்.

மறுநாள் நந்தினி சீக்கிரமாக எழுந்து அவனுக்கு அலுவலகம் செல்லும் போது கொடுத்துவிடுவதற்காக சமையலில் மூழ்கிவிட்டாள். கார்த்திக்கும் மனைவியின் சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு மதியத்துக்கும் டிபன் பாக்சில் பெருமையாக எடுத்து வைத்துக் கொண்டான். அலுவலகம் செல்லும் முன் “நந்தினி டேக் கேர். எதுவும் வேணும்னா ஆயிஷாக்கா கிட்ட தயங்காம கேளுங்க. உங்களுக்கு எதுவும் பிரச்சனைனா எனக்கு உடனே கால் பண்ணுங்க” என்று அறிவுரைகளை அள்ளிவிட

நந்தினி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்தவளாய் “கார்த்திக் இதோட ஏழாவது தடவை இதே டயலாக்கை சொல்லுறிங்க! நான் ஒன்னும் குழந்தை இல்லை. என்னை எந்த பூச்சாண்டியும் பிடிச்சிட்டு போயிட மாட்டான். நீங்க ஆபிஸுக்கு கிளம்புங்க முதல்ல” என்று அதட்டவும் தான் அவன் அமைதியாய் கிளம்பினான்.

அப்போதும் கூட “உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லைனா கூட எனக்கு கால் பண்ணலாங்க. இன்னைக்கு நான் ஆபிஸ்ல ஃப்ரீயா தான் இருப்பேன்” என்று சொல்லி கண் சிமிட்டு விட்டு செல்ல நந்தினி சிரிப்பை அடக்கியபடியே “ஆபிஸ்ல போய் வேலையை பாருங்க சாமி” என்று கேலியோடு அவனை அனுப்பிவைத்தாள்.

அவன் சென்றதும் சமையலறையை ஒதுங்க வைத்தவள் பாத்திரங்களை சுத்தம் செய்து அடுக்கிவிட்டு அக்கடாவென்று பால்கனியில் சென்று அமர்ந்துவிட்டாள். அங்கிருந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடியே அன்னைக்கு போன் செய்து பேச ஆரம்பித்தாள்.

 

தொடரும்....

 

நிலவு 9


dsk and EswariSkumar liked
Quote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 2 months ago
Posts: 56
13/02/2020 3:00 pm  

நிறைவான பதிவு, நந்தினி கார்த்திக் பத்தி புரிந்து கொண்டால், போற இடத்தில் அக்கம் பக்கம் நல்லவங்காள இருந்தால் ரெம்ப நல்லது 👌👌👌👍👍👍🌹🌹🌹


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
14/02/2020 6:47 pm  

@jothiru சந்திக்கிற எல்லாரும் நல்லவங்களா இருந்துட்டா வாழ்க்கையில சுவாரசியம் இல்லாம போயிடும்கா..

 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: