நிலவு 9  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 311
14 Feb 2020 6:36 pm  

திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்ததால் அவனுக்கு பணிச்சுமை அதிகரித்திருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்து நந்தினியின் முகத்தை கண்டால் அவன் சோர்வு எல்லாம் பறந்தோடி விடும். அவளும் அவனிடம் சகஜமாக பேசிப் பழக ஆரம்பித்திருக்கவே அவனுக்கு அவள் குறித்து இருந்த பெருங்கவலை அகன்றது.

இவ்வாறிருக்க நந்தினிக்கு புதிய இடம் என்பதால் தண்ணீர், அந்த சூழ்நிலை எல்லாம் ஒத்துக்கொள்ளாமல் உடல்நலக்குறைவு ஏற்பட அவள் சாதாரண காய்ச்சல் தானே என்று மாத்திரையை போட்டுவிட்டு சரியாகிவிடும் என்று நினைத்திருக்க மறுநாள் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு காய்ச்சல் அவளை பாடாய் படுத்த ஆரம்பித்துவிட்டது.

கார்த்திக் எப்போதும் தனக்கு முன்னர் எழுந்துவிடுபவள் அன்று ஏன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று சந்தேகத்துடன் நெற்றியில் கைவைத்து பார்க்க அவளுக்கு காய்ச்சல் அனலாக கொதித்தது. அவளை அப்படியே வீட்டில் விட்டு சென்றால் அலுவலகத்திலும் நிம்மதியாக வேலை செய்ய இயலாது என்று யோசித்தவன் உடனே அலுவலகத்துக்கு போன் செய்தான்.

“டேய் அசோக் இங்கே நந்தினிக்கு உடம்பு முடியலைடா. அவங்களை அப்பிடியே விட்டுட்டு வர முடியாது. இன்னைக்கு ஒரு நாள் ஒர்க் ஃப்ரம் ஹோம்டா” என்று விவரம் தெரிவித்துவிட்டு நந்தினியை எழுப்பினான்.

அவள் தலையை பிடித்தபடி எழவும் அவளுக்கு கரம் கொடுத்து எழுப்பியவன் “ரொம்ப முடியலையா?” என்று ஆதுரத்துடன் கேட்க அவள் “தலை மட்டும் ரொம்ப வலிக்குது. வாய் எல்லாம் கசப்பா இருக்கு கார்த்திக்” என்று கூறியபடி குளியலறையை நோக்கி நடைப்போட்டாள்.

பல் துலக்கிவிட்டு திரும்பி வந்தவள் “டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறிங்களா கார்த்திக்? என்னை கிளினிக்ல விட்டுட்டு நீங்க ஆபிஸ் போயிடுங்க” என்றவளிடம் உடைமாற்றுமாறு சொல்லிவிட்டு அவனும் தயாரானான்.

நந்தினி உடை மாற்றிவிட்டு வர இருவரும் வீட்டை பூட்டிவிட்டு லிஃப்டில் கீழ்த்தளத்துக்கு வந்தனர். கார்த்திக் பார்க்கிங் ஏரியாவில் நிற்கும் பைக்கை எடுத்துவர இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். சாதாரண காய்ச்சல் தான் என்று பரிசோதித்த மருத்துவர் கூறிய பிறகு தான் கார்த்திக் நிம்மதியானான்.

மருந்து மாத்திரையுடன் பைக்கை நோக்கி நகரும் போதே “கார்த்திக் நான் ஆட்டோல போயிக்கிறேன். நீங்க ஆபிஸ் கிளம்புங்க” என்று கூற

அவன் “இன்னைக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் நந்தினி. நாளைக்கு ஆபிஸ் போயிக்கலாம். உங்களுக்கு முடியாம இருக்கிறப்போ தனியா விட்டுட்டு போனா அங்க போனதுக்கு அப்புறம் உங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு மனசு கிடந்து அடிச்சுக்கும். அதுக்கு நான் வீட்டிலேயே இருந்துப்பேன்” என்று கூறிவிட்டு அவளை பைக்கில் அமரச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி செலுத்தினான்.

இருவரும் வீட்டை அடைந்ததும் அவளுக்கு கஞ்சி வைத்துக் கொடுத்து மாத்திரையை போடச் சொன்னவன் அவள் மாத்திரை போட்டதும் உறங்குமாறு கூறிவிட்டு அவர்களின் அறையிலேயே லேப்டாப்பும் கையுமாக வேலையை தொடர்ந்தான். இடையிடையே அவளுக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறதா என்று நெற்றியைத் தொட்டு பார்த்துக் கொண்டான்.

நந்தினியும் மாத்திரை போட்டதும் தூக்கத்தில் மூழ்கியவள் கண் விழிக்கையில் மணி மதியம் இரண்டை தாண்டியிருந்தது. அவன் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்தபடி எழுந்தவள் அவனை பார்த்து புன்னகைத்தவாறே சமையலறையை நோக்கி சென்றாள். காலையில் அவன் செய்திருந்த கஞ்சியே மீதமிருக்க அதையே சாப்பிட்டு முடித்தவள் மாத்திரையை போட்டுவிட்டு அவர்களின் அறைக்கு திரும்பினாள்.

“கார்த்திக் நீங்க சாப்பிடலையா?” என்ற கேள்வியுடன் வந்த மனைவியை பார்த்து சிரித்தவன் இவ்வளவு நேரம் லேப்டாப்பின் திரையை பார்த்துக் கொண்டிருந்ததால் கண்களில் எழுந்த எரிச்சலை போக்குவதற்காக கண்ணை கசக்கிக் கொண்டான்.

நந்தினி “கண்ணை கசக்காதிங்க கார்த்திக். அது நல்ல பழக்கம் இல்ல” என்று எடுத்துக் கூறியவாறு படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள

கார்த்திக் “தெரியுங்க! ஆனா என்ன பண்ணுறது? கண்ணு உறுத்தலோட எரிச்சலா இருக்கு. சிஸ்டம் பார்த்துட்டே இருக்கிறதால அடிக்கடி ஐ இரிட்டேசன் வருது” என்று சொன்னபடியே குளியலறையை நோக்கி சென்றவன் கண்ணில் குளிர்நீரை அடித்து கண் எரிச்சலை போக்க முயன்றான். நீரின் குளிமை கண்ணெரிச்சலை சற்று மட்டுப்படுத்த முகத்தை டவலில் துடைத்தபடி வந்தவனை கனிவுடன் பார்த்தவாறே பேச ஆரம்பித்தாள் நந்தினி.

“ஐ.டியில ஒர்க் பண்ணுறதும் கஷ்டம்ல கார்த்திக்” என்றவளுக்கு அவனிடமிருந்து கிடைத்த முதல் பதில் நீண்ட பெருமூச்சு மட்டுமே.

“எந்த வேலையை எடுத்துகிட்டாலும் சில கஷ்டம் இருக்க தான் செய்யுங்க. இந்த ஃபீல்ட் இப்பிடி தான் இருக்கும். இதை அட்ஜெஸ்ட் பண்ணி பழகி போச்சு. சில நேரம் ஸ்ட்ரெஸ் தாங்காம வேலையை விட்டுடலாமானு தோணும். ஆனா அதுக்கு அப்புறம் குடும்ப நியாபகம் வந்துடும். அந்த எண்ணம் அப்பிடியே அமுங்கி போயிடும்” என்று நிதர்சனத்தை உரைத்தவாறே அவளுக்கு செய்த உணவையே ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் அவன்.

“கஷ்டமா இருந்தா நீங்க வேற வேலைக்கு டிரை பண்ணலாமே”

“நான் காம்படிட்டிவ் எக்சாம் எழுதிட்டு தான் இருக்கேன் நந்தினி. பட் எதுவும் கிளிக் ஆகலை. எல்லாமே ஒன் ஆர் டூ மார்க்ல போயிடுது” என்றான் சாப்பிட்டுக் கொண்டே.

நந்தினி புருவம் சுருக்கியபடி “காம்படிட்டிவ் எக்சாமுக்கு டிரை பண்ணுனா முழு மூச்சா அதில இறங்கணும். நீங்க ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலுனு வேலைக்கும் போயிட்டு எக்சாமும் எழுதணும்னா அது ரொம்ப கஷ்டம்” என்றாள் சட்டென்று.

இவ்வாறு கணவனும் மனைவியும் அவனது வேலை குறித்து பேசிக் கொள்ள கார்த்திக்கும் தனக்கு அதிலிருக்கும் சிரமங்களை மனைவியிடம் மறைக்காமல் பகிர்ந்து கொண்டான். நந்தினி அப்போது அவன் குடும்பம் இருந்த சூழலில் அவனால் வேலையை விட முடியாத நிலை என்று தெரியவரவே நிஜமாகவே கணவனின் நிலையை எண்ணி அவளால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.

அவனது அன்னையின் கழுத்திலும் காதிலும் அன்று மின்னியது அவனது உழைப்பே என்று எண்ணி பெருமைப்பட்டாலும் அதற்கு அவன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான் என்பதை அலுவலகத்துக்கு போன் பேசியபோது அவன் உபயோகித்த டாஸ்க், டெட்லைன், ப்ராஜெக்ட் போன்ற வார்த்தைகளே அவனது பணிச்சுமையை அவளுக்கு சொல்லாமல் சொன்னது.

அன்றைக்கு மாலையே அவளுக்கு காய்ச்சல் குறைய ஆரம்பித்துவிட்டது. மறுநாள் சுத்தமாக சரியாகிவிடவே வாயின் கசப்பு மட்டும் நீங்குவேனா என்று அடம்பிடித்தது. கார்த்திக் மறுநாளும் உடன் இருக்கவா என்று கேட்க முன்பு எப்படியோ ஆனால் அவனது பணிச்சுமையை தற்போது புரிந்து கொண்டதால் நந்தினி தன்னால் சமாளித்துக் கொள்ள முடியும் என்று ஆயிரம் முறை உறுதியாக கூற அதன் பின்னரே கவலையின்றி அலுவலகம் கிளம்பினான் கார்த்திக்.

அன்றைக்கும் வேலை என்னவோ அதிகம் தான். முடித்துவிட்டு ஆயாசத்துடன் கிளம்பியவனை பிடித்துக் கொண்டனர் அவனது ப்ராஜெக்ட் குழுவில் இருக்கும் டீம் மேட்ஸ். அதில் அசோக்கும் அடக்கம்.

அவர்களின் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். கார்த்திக் புதிதாக திருமணவானவன் என்பதால் தங்களுக்கு டிரீட் வைக்க வேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொள்ள கார்த்திக்கும் மகிழ்ச்சியுடன் வரும் ஞாயிறு தன்னுடைய டிரீட் என்று ஒத்துக் கொண்டான். அசோக் மறக்காமல் நந்தினியின் உடல்நிலை பற்றி விசாரிக்க அவளுக்கு இப்போது பரவாயில்லை என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான் கார்த்திக்.

எப்போதும் போல அன்றும் அவன் வீடு திரும்பும் போது வீட்டில் உள்ள சிறிய பூஜையறையில் விளக்கு ஏற்றப்பட்டு பத்திவாசத்துடன் வீடே தெய்வீக களையோடு இருந்தது. நந்தினிக்கு கொஞ்சம் பக்தி அதிகம் என்பதாலும் தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றுவது அவர்கள் வீட்டில் வழக்கம் என்பதாலும் கையோடு ஒரு பித்தளைவிளக்கை கொண்டு வந்திருந்தாள் அவள்.

அன்றும் வழக்கம் போல விளக்கேற்றி விட்டு கண்ணை மூடி ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தவள் அப்போது தான் வீட்டிற்குள் அடியெடுத்துவைத்த அவள் கணவனின் பார்வையில் விழுந்தாள். கார்த்திக் வீட்டிற்குள் சாக்சுடன் நுழைந்தவன் கையிலிருக்கும் ஷூக்களை கதவோரமாய் இருக்கும் ஸ்டாண்டில் வைத்துவிட்டு திரும்பியவன் கண்களை மூடியவண்ணம் தளிர்க்கங்களை குவித்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்த மனைவியின் அழகில் மெய்மறந்து நின்றான்.

காய்ச்சல் முழுதும் குணமாகி விட்ட நிலையில் தெளிவான முகம், இரு புருவங்களிடையே மெல்லிய அரக்குநிற பொட்டு அதற்கு காவலாக அதன் மேலே திருநீறு கீற்று, அந்த அறையின் விளக்கொளியில் வெட்டி மின்னிய குட்டி மூக்குத்தி, தளர பின்னிய தலைமுடியை இடப்பக்க தோளில் விட்டிருக்க ஒரே ஒரு முடிக்கற்றை மட்டும் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.

அவன் மெய்மறந்து நின்ற கணத்திலே அவள் திடீரென்று கண் விழிக்க கார்த்திக் சட்டென்று பார்வையை சோஃபா, கதவு, பூஜையறை என்று எங்கெங்கோ திசை திருப்பியபடி வருவித்துக் கொண்ட சாதாரண குரலில் “என்னங்க உங்க பக்தி பரவசம் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ஆரம்பிச்சிடுச்சு போல” என்று கேட்டவாறு சோஃபாவில் அமர்ந்தான்.

நந்தினி அவன் இதற்கு முன் இருந்த நிலையை கவனிக்கவில்லை என்பதால் சகஜமாக “எல்லாம் உங்களுக்காக தான் கடவுள் கிட்ட அப்ளிகேஷன் போட்டுட்டிருக்கேன் கார்த்திக்” என்று கேலியாக மொழிந்தபடி அவனுக்கு ஒரு தம்ளரில் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தபடி அவன் அருகில் அமர்ந்தாள்.

கார்த்திக் தண்ணீரை குடித்துவிட்டு தம்ளரை திருப்பியளித்தபடி “எனக்காக என்ன அப்ளிகேசன் போட்டிருக்கிங்க? புரியலையே” என்று பொருள்விளங்காதவனாய் கேட்க

நந்தினி “சீக்கிரமா உங்க அண்ணனுக்கு வேலை கிடைச்சிடணும். உங்களுக்கும் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி ஸ்ட்ரெஸ் இல்லாம பண்ணுற மாதிரி ஒரு நல்ல வேலை கிடைக்கணும், அப்புறம் நீங்க அடுத்து எந்த எக்சாம் எழுதானுனாலும் அதுல பாஸ் ஆகணும், அப்புறம்…” என்று அவள் அடுக்கிக் கொண்டே போக

கார்த்திக் “போதும் போதுங்க நந்தினி; லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டிருக்கு. கடவுள் கன்பியூசன் ஆகி என் வேலையில எதாவது புட்பால் விளையாடிட போறாரு” என்று அவளிடம் கைகூப்பி வேண்டிக் கொள்ள

நந்தினி பொய்யாய் கோபம் கொண்டவளாய் “அஹான்! என் வேண்டுதலை கிண்டலா பண்ணுறிங்க? என்னை கிண்டல் பண்ணுனதுக்கு ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இந்த வேலையே வேண்டாம் சாமினு நீங்க தூக்கிப் போட்டுட்டு வரலை, என் பேரை நான் மாத்திக்கிறேன்” என்று கூறிவிட்டு தம்ளருடன் சமையலறையை நோக்கிச் சென்றாள்.

கார்த்திக் சிரித்துக் கொண்டவன் திடீரென்று நினைவு வந்தவனாக மனைவியை தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தபடி “உங்களுக்கு ஃபீவர் கியூர் ஆயிடுச்சா நந்தினி? இந்த வீக்கென்ட்ல என் டீம் மேட்ஸ் நம்ம மேரேஜுக்காக டிரீட் கேட்டிருக்காங்க. ஹோட்டல் போனா உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே?” என்று அவளிடம் வினவ

நந்தினி ஆச்சரியத்துடன் “அதுக்கு எதுக்கு கார்த்திக் ஹோட்டலுக்கு போகணும்? அவங்க எல்லாரையும் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லுங்க. நானே என் கையால உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு சமைச்சு போடறேன்” என்று சொன்னபடி இரவுணவுக்கு காய்கறியை நறுக்கத் தொடங்கினாள்.

கார்த்திக் இழுவையுடன் “அதில்லைங்க உங்களுக்கு இப்போ தான் காய்ச்சல் வந்திருக்கு..அதுக்குள்ள என் கஷ்டப்பட்டு அத்தனை பேருக்கு சமைக்கணும்…..” என்று தயங்க

அவள் காய்கறி நறுக்கி கொண்டிருந்த கத்தியோடு “உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு சமைக்கிறது எனக்கு கஷ்டம்னு நான் சொன்னேனா?” என்று முறைக்க

கார்த்திக் பொய்யாய் பயந்தவனாய் “அந்த கத்தியை கீழே போட்டுட்டு எது வேணாலும் கேளுங்க” என்று கூற

அவள் சட்டென்று கத்தியை கீழே வைத்துவிட்டு “ஹோட்டல், ரெஸ்ட்ராண்ட்னு போனா பணம் தான் வீணா செலவாகும் கார்த்திக். அங்கேலாம் ஹைஜீனிக்கா இருக்குமாங்கிறது டவுட் தான். நீங்க வீட்டுக்கே கூட்டிட்டு வாங்க. உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு ஒரு மினிவிருந்தே குடுக்க நானாச்சு” என்று கூற அவனும் சரியென்று ஒத்துக் கொண்டான்.

அதன் பின் அவனும் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வர இருவருமாக சேர்ந்து கலகலப்பாக உரையாடியபடி இரவுணவை தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அறியவில்லை நந்தினி கிண்டலாய் அவன் வேலையை தூக்கிப் போட்டுவிட்டு வருவான் என்று சொன்னது ஒரு நாள் நிஜமாகும், அதனால் அவர்கள் வாழ்வில் சில அவமானங்களை சந்திக்க நேரிடும் என்பது.

 

தொடரும்....


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: