Forum

Notifications

அந்தாதி நீ! _ 2  

  RSS

Sivaranjani
(@sivaranjani)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 5
01/12/2019 10:26 am  

முக்கியக் குறிப்பு: இக்கதையில், வெவ்வேறு கதைகள், மாறி மாறி வரும். அவை இணையும் புள்ளியே கதையின் கரு. போன கதை போன்றா? என்று சிலருக்குக் கேள்வி எழும். ஆனால் இது மாறுபட்டு இருக்கும். சஞ்ஜீவை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். இன்று கதையின் வேறு பகுதியைக் காண்போம்.

அத்தியாயம்-2

ஜோதிப்புல்

இந்தப் புல் ஒன்றைப் பிடுங்கி தீயில் பற்றவைக்க, மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் கொல்லிமலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலருக்கு இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல் தான் என்று நம்பப்படுகிறது. 

************************
 
           அஸ்வின், முகுந்த், துஷ்யந்த் மற்றும் துளசி ஆகிய நால்வரும் கொல்லிமலையில், ஆகாய கங்கையில் குளிக்க, படிகளில் இறங்கிக் கொண்டிருந்தனர். இதில் துஷ்யந்த் மற்றும் துளசி, திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆகிய புதுமணத் தம்பதிகள். அஸ்வினும், முகுந்தும் துஷ்யந்தின் நண்பர்கள்.

   பாண்டாவின் பரம விசிறியான துளசி, பாண்டாவைப் போன்றே உருவம் கொண்ட ஒரு தோள் பையில், தண்ணீர் போன்ற சில அத்தியாவசிய பொருட்களை வைத்துக்கொண்டு, இறங்கிக் கொண்டிருந்தாள்.

    தன் மணாளனுடன், என்ன பேசுவது என்று புரியாமல், தனது மனம் கவர்ந்த பொம்மைப் பையுடன் வளவளத்துக் கொண்டு வந்தாள்.

     “ஹேய் செல்லக் குட்டி! எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சிம்லா குளு-மணாலின்னு  ஹனிமூன் போவாங்க. என் நிலைமயப் பாத்தியா? அட அவ்ளோ கூட வேணாம் பா! ஊட்டி, கொடைக்கானல் இப்படியாச்சும்  போயிருக்கலாம். எங்க கூட்டிட்டு வந்திருக்காரு பாரு?

    நானே 70 ஹேர் பின் பெண்ட்ல வந்து, தல சுத்திப் போய் தள்ளாடிக்கிட்டு இருக்குறேன். இதுல வேற, ஆயிரத்து இருநூறு படி இறங்கிப் போய் குளிக்கனுமாம். அதைவிடப் பெரிய கொடும, இவ்வளவு படி திரும்பவும் ஏறனும்.

       இந்த அழகுல, இவர் வேற கஞ்சி போட்ட காக்கிச் சட்டை மாதிரி பயங்கர வெறப்பா வராரு. என்னமோ சிரிச்சுட்டா, இந்தப் பள்ளத்தில விழுந்துடுவோம்ங்கிற மாதிரியே மூஞ்சிய முழு கவனத்தோட உர்ர்ர்னு  வெச்சிகிட்டு வராரு.

    இதெல்லாம் விடப் பெரிய காமெடி என்னன்னா? என்னமோ நாங்க கொஞ்சிக் குலாவி ரொமான்ஸ் பண்ணிட்டு வர மாதிரி, இவரோட பிரெண்ட்ஸ், எங்க பார்வைக்கே படாம முன்னாடி ஓடிட்டாங்க. தனிமை குடுக்குறாங்களாம். ரொம்ப போரடிக்குது பா!” என்று தன் பொம்மையிடம் புலம்பித் தள்ளினாள். 

      இவள் புலம்புவதைக் கேட்ட அவள் கணவனுக்கு, அவள் பேசிய விதம் சிரிப்பினைத் தந்தாலும், அவளது உணர்வையும், தனது நிலையையும் எண்ணி, துயர் அவனைத் தூக்கில் ஏற்றிக் கொண்டிருக்க தாங்கொணா வேதனையை மனதில் சுமந்து, அது முகத்தில் பிரதிபலித்து விடக்கூடாது என்ற கவனத்துடன் திரும்பி, ஏதோ சொல்ல எத்தனித்தான்.

      ஆனால் அவன் மனையாளோ, அவனைப் பேச விடாமல், “நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். நீங்க  என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். ‘அதான் அன்னைக்கே எல்லாம் தெளிவா சொல்லிட்டேனே. அதுக்கு அப்புறமும் ஏன் இப்படிப் பேசற?’ அதானே?” என்று சலிப்பாகக் கூறிவிட்டு, “அதுக்காக பேசக்கூடவா தோணாது. யாராவது ஒரு வழிப்போக்கர்கிட்ட பேசுறது போலவாவது பேசலாம்ல?” என்றாள் அவளையும் மீறி வெளிப்பட்ட ஒரு சிறு வலியுடன். 

     அவளின் சிறு வலி கண்டே, பெரிதாய்ச் சுணங்கியது அவன் மனம். கூடவே, பின்னாளில் தான் இவளுக்குத் தரவிருக்கும் அதிர்ச்சியையும், துயரையும் இவள் எங்கனம் தாங்குவாள் என்ற எண்ணம் எழ, அவளுக்காகப் பிள்ளையைத் தொலைத்த தாயெனப் பரிதவித்தது அவன் இதயம்! தான் எத்தனை பெரிய தவறிழைத்திருக்கிறோம் என்று அவன் முழு முற்றாக உணர்ந்த நொடி அதுதான்!       

   உணர்ந்த கணம், விபத்தில் சிக்கிய கண்ணாடி என நொறுங்கிச் சரிந்தது அவன் உள்ளம்.

     இப்படியாக, சிதைந்த மனதுடன், சிந்தனையூடே அவன் வந்து கொண்டிருக்க,
“ஹலோ! பேசுங்கன்னு கேட்டது ஒரு குத்தமா? அதுக்குப் போயி இப்படித் தீவிரமா யோசிச்சிட்டு வர்றீங்க?” என்று அவள் கையசைத்துக் கேட்கவேதான் அவன் நடப்பு உலகிற்கு வந்தான்.

    அவனுக்கு அவளுடன், இடைவெளியின்றி அடைமழையெனக் கதைகள் பேசக் கொள்ளை ஆசைதான். ஆனால் அவன் மனம்தான், நொடி நேரம் அவள் முகம் நோக்கினும், ஆர்ப்பரித்துக் கொட்டும் ஆகாயகங்கையென, அவள்பால் சரிகிறதே!

         இதனை அவன் அகம், ரசித்து சுகித்துக் கொண்டாட எண்ணினாலும், அவனது அறிவு, ‘இதனைத் தவிர்க்கும் நிலையில் நீ உள்ளாய்' என்று அறிவுறுத்துவதால், பற்றி எரியும் அமேசான் காடு போல், தவிப்புடன் கையறு நிலையில் இருந்தான்.

      தனக்கும் அவளுக்கும் இடையில் யாரேனும் ஒருவருக்குக் காதல் என்ற ஒன்று மலர்ந்துவிட்டாலும், அது நிச்சயம் மணம் தரப்போவதில்லை. அது அவளது வாழ்வையும், தனது வழியையும் ஒருங்கே கருக்கிவிடும் என்று எண்ணியவன், அப்படி ஒன்று நிகழ்ந்து விடக்கூடாது என்று, மிகுந்த கவனத்துடன் இருந்தான்.

    இதனால்தான் அவன் அவளுடன் பேசாமலும், இறுக்க பாவத்துடனும் இருந்தான்.

    ஆனால் உரிமை இருக்கும் இடத்தில் தோன்றும் காதலை, அவ்வாறெல்லாம் கட்டிவைக்க இயலுமா? அது நொடி நேரத்தில் கட்டவிழ்த்துக் கொண்டு காட்டாற்று வெள்ளமெனப் பாயும். ஆனால் அவனது சூழலும், அதற்குச் சற்றும் சளைத்ததல்ல! எது வெல்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

      இவளை இப்போதிருந்தே ஏன் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை சற்றே ஆசுவாசப்படுத்த எண்ணியவன், மனதை இறுக்கிக்கொண்டு, அவளுடன் சற்றே நட்புடன் பழக முடிவு செய்தான்.

     எனவே புன்னகையுடன், “உங்களுக்கும் உங்க பாண்டாவுக்கும் நடுவுல, ஏன் கரடி போல நுழையனும்னுதான்  தான் பேசாம வந்தேன்!”என்றான் சற்றே குறும்பாக. ( ஒருமையில் பேசிப் பழகினால், தன்னையுமறியாமல் அவளிடம் நெருங்கிவிடுவோம் என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக, மனதளவில் அவளிடமிருந்து விலகி இருக்க அவன் பயன்படுத்தும் ஒரு உத்தி, இவ்வாறு பன்மையில் அழைப்பது)

   கொலை வெறியும் புன்னகையும் கலந்த பார்வையுடன், “உங்களுக்கு ரொம்பதாங்க குசும்பு” என்றாள் அவள்.

    இருவரும் சற்றே இலகுவாக்கிச் சிரித்தனர்.

    அப்போது அங்கே, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு படிகளில் வருவதற்கு பதிலாக, அதன் கைப்பிடியில் சறுக்கிக் கொண்டு வருவது போன்று, சிலர், படிகளுக்கு நடுவே இருந்த கம்பியில், சறுக்கிக் கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

     இதனைக்கண்ட இருவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அத்துடன் அவளுக்கு இன்னொரு எண்ணமும் தோன்றியது.

   “எனக்குக் கூட இந்த சினிமால எல்லாம் வர மாதிரி, நீங்க என்னோட கைய பிடிச்சுக்க, இந்த மாதிரி ஒரு கம்பில நடக்கணும்னு ஆசை! பிடிக்கிறீங்களா?” என்றாள் சிரித்துக்கொண்டே!

   அதிர்ந்து நோக்கியவன், “உங்களுக்கு விளையாட்டு ஓவராப் போச்சு!” என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டான்.

  “நான் விளையாடலங்க நிஜமாதான் கேட்குறேன்.” என்றாள் அவள்.

  அவன் சற்றாய் முறைத்துவிட்டு, “நீங்க கொஞ்சம் ஸ்லிப்பாகிக் கீழ விழுந்து, கால்ல கொஞ்சமா சுளுக்குப் பிடிச்சாலும், எல்லாப் புரோகிராமும் ஸ்பாயில் ஆயிடும். அதோட அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிட்டுப் போற மாதிரி உங்களத் தூக்கிட்டு எல்லாம் போக முடியாதுங்க என்னால!” என்று கூறிவிட்டு  நடந்தான்.

   அவளோ “ஆமா! பெரிய சுவிஸர்லாந்து ப்ரோக்ராமு, அத வேற நாங்க ஸ்பாயில் பண்றோம்!” என்று முணறிவிட்டு, “நீங்க என்னோட கனவக் கலச்சதும் இல்லாம, என்னைய உருவக் கேலி வேற பண்ணிட்டீங்க!  நான் கோவமாப் போறேன்” என்று கூறிவிட்டு வேகமாக இறங்கினாள்.

“நான் எங்கங்க உங்கள உருவக் கேலி பண்ணினேன்?” என்று கேட்டவாறே அவனும் தொடர்ந்தான்.

  “கொஞ்சம் சப்பியா(chubby) இருக்கற என்னைப் பாத்து மலைன்னு சொல்லிட்டீங்கல்ல?” என வினவினாள்.

  அவனும் சற்று குறும்பாகச் சிரித்துவிட்டு, “நான் அப்படி நெனச்செல்லாம் சொல்லலைங்க! ஆனா நீங்க சொன்னப்பறம்தான், அட அப்படிப் கூட சொல்லலாமே நல்லாத்தானே இருக்கும்னு தோணுதுங்க!” என்றான்.

    அவள் முடிந்தவரை அவனை முறைத்துவிட்டு, பழிப்பம் காட்டிவிட்டுச் சென்றாள். பின்னர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, எவரும் அருகில் இல்லை என உறுதி செய்து கொண்டு, “கானல் ஆகுமோ காரிகை கனவு?!” என்று பாடி வராத கண்ணீரை வழித்துக் கொண்டு, “தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு?!” என்று அவனைச் சுட்டிக் காட்டிப் பாடினாள். அவள் இதனை விளையாட்டாகத்தான் செய்தாள்.
ஆனால் அவன் என்ன நினைத்தானோ, “சரி ஏறுங்க. பிடிச்சுக்கறேன்.” என்று கூறினான்.

   அவளோ இரவில் சூரியனைக் கண்டது போன்றதொரு அதிர்ச்சி பாவத்தில் அவனை நோக்கிவிட்டு, “நீங்க நல்லாத்தான இருக்கீங்க? உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?” என்று வினவினாள்.

  அவனும் அதற்குச் சிரித்துவிட்டு, “என்னைக் கிண்டல் பண்றதை விட்டுட்டு யாராவது வர்றதுக்குள்ள சீக்கிரமா ஏறுங்க!” என்றான்.

  அவளும் அதற்கு மேல் தாமதிக்காமல் ஏற முற்படும் பொழுது, “இந்த பேக்கை எங்கிட்ட கொடுத்துடுங்க.” என்று கூறி அவளது பையினை வாங்க முற்பட்ட பொழுது, அது தவறி கீழே விழப் பார்த்தது. அதற்கவள், “பார்த்து! என் செல்லக்குட்டி பத்திரம்!” என்றாள்.

   “ஒரு பேக்கை  வச்சுகிட்டு நீங்க பண்ற அலப்பறை இருக்கே! ஓவரோ ஓவர்ங்க!” என்றான் அவன்.

  “பேக் ஈஸ் எ வேர்ட். பட் பாண்டா பேக்  ஈஸ் அன் எமோஷன்!” என்றாள் உணர்ச்சி ததும்ப.

அவனோ, “அப்ப நீங்க உங்க பாண்டா பேக்  கையப் ‍புடிச்சுகிட்டே கம்பி மேல நடங்க! இந்தாங்க!” என்று கூறி அவளது பையினைத் திரும்பக் கொடுத்தான்.

   “ஓகே ஓகே கூல்! நீங்க செல்லகுட்டி ஸ்கொயர். ப்ளீஸ் பிடிங்க!” என்று கூறி  சமாதானக் கொடியைப் பறக்கவிட்டாள்.

   அவனும் சிரித்துக் கொண்டே இறங்கி வந்து, அவளை ஏற்றிவிட்டான். அவளும் சில அடிகள் கம்பியின் மீது நடந்துவிட்டு இறங்கிவிட்டாள். அவ்வாறு ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும், இருவரும் எத்தகைய நெருக்கத்திற்கு உள்ளாக நேரிடும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

அது, கதிரவனின் கதிர்க் கரங்களின் தீண்டலில், விழிக்கும் தாமரை இதழ்கள் போன்று அவர்களுள் காதலைக் கண் மலரச் செய்து இருவரையும் ஒரு மோன நிலைக்குத் தள்ளியது. (ஏனோ வானிலை மாறுதே….பேக்ரவுண்ட் ம்யூசிக் போட்டுக்கோங்க)

   சற்று நேரம் அதில் லயித்திருந்தவர்கள், பின்னர் தன்னுணர்வு பெற்று விலகி நடந்தனர்.  

    மொழியால் வர்ணிக்க இயலாத ஓர் உணர்வு நிலை அவர்களை ஆள, அதில் இருவரும் அம்சமாய் அடங்கி மௌனமாகவே இறங்கினர். 

   1100 படிகள் கடந்த நிலையில், அதற்கு மேல் படிகள் சரியாக இல்லாமல், மேடு பள்ளமாக, கற்பாதையாக இருந்தது. அதில் நடக்க, துளசி தடுமாறியதால், அவளவன் அவளுக்கு உதவ வேண்டி இருந்தது. எனவே, அவளின் பாதங்கள், கற்களில் பயணித்தாலும், மனமோ, மணமிகு மலர்ப் பாதையில் நடந்து, மேகம் ஏகி மிதந்து கொண்டிருந்தது. 

  அருவியை நெருங்க நெருங்க அதன் ஓசை அதிகரித்துக் கொண்டே சென்றது. அருகில் சென்றதும் சாரல் மேனியை ஸ்பரிசித்தது. இதற்கு இணையானதொரு சாரலை அவளது மனமும் ஸ்பரிசித்தது.

    கால் வழுக்கி, அவன் அவளைத் தாங்கிய பொழுதெல்லாம், அவள் மனம் அவளிடமிருந்து நழுவி அவன்பால் சரிந்து கொண்டிருந்தது.

  அவனுமே சற்று தடுமாறித்தான் போனான் எனினும், அவனுள்  ஓடிக் கொண்டிருக்கும்  வேறு எண்ணங்கள், அவனைக் கட்டுக்குள் வைத்தன.

   அவளது பார்வையும், உடல் மொழியும் நிறம் மாறுவதைக் கண்டவனுக்கு, உள்ளுக்குள் உயிர் ஊறினாலும், அதனை அடக்கி வைத்து, ‘தவ நிலைல இருக்குற என்னைய தங்கத் தாமரை மகளேன்னு பாட்டுப் பாட வச்சிருவா போல' என்று மனதில் எண்ணிக் கொண்டு, அவளைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு, இயன்ற வரையில் விரைவில் குளித்துவிட்டு வருமாறு கூறிவிட்டு நகர்ந்தான்.

துஷ்யந்தின் இந்த விலக்கத்திற்கான காரணம் என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.

(தொடரும்)

அன்புடன்,

  • சிவரஞ்ஜனி குமாரவடிவேலு

Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: