Forum

Notifications

சிட்டு  

  RSS

Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 294
24/05/2019 12:07 am  

சிட்டு 

அச்சின்ன சிட்டின் கண்களில் ஆவல் அலையலையாகப் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. 

'அதைத் தொட்டு தான் பார்த்து விட மாட்டோமா?' என்ற ஏக்கம் தோன்ற தன் பிஞ்சு கரத்தை ஆவலுடன் அதை நோக்கி நீட்டினாள். 

"ஏய்! தொடாத! உன் கையில இருக்குற அழுக்கு இதுல ஒட்டிக்கும்..." என்ற அரட்டல் குரலில் மிரட்சியாய் கண்களை விரித்த படி பின் வாங்கினாள் அச்சின்ன சிட்டு. 

அழகாக உடை அணிந்து, கழுத்து வரை வெட்டப்பட்ட முடியுடன், காலில் பளிச்சென்று காலணிகள் அணிந்து, இரண்டு கைகளாலும் கைக்கொள்ளா அளவிலான கைபேசியை வைத்துக் கொண்டு அதில் விரலை தேய்த்து விளையாடி கொண்டிருந்த அந்தக் குழந்தைக்குக் கசங்களான உடையும், வாரப்படாத தலையுமாக எதிரே நின்றிருந்த குழந்தையைப் பார்த்து முகத்தைச் சுளிக்கத் தான் தோன்றியது.

இரு குழந்தைகளுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் இருக்கும். ஆனாலும் பொருளாதாரப் பாகுபாடு இரு குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைத் தனித்துக் காட்டிக் கொண்டிருந்தது.

இரு குழந்தைகளும் இருந்த இடம் ஒரு பூங்கா. 

கைபேசி வைத்திருந்த குழந்தையின் தாயார் அவள் அமர்ந்திருந்த பூங்கா இருக்கையில் இருந்து சிறிது தள்ளி நின்று அவரின் தோழியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

தங்கள் பேச்சுக்கு குழந்தை இடையூறாக இல்லாமல் இருக்க மகளின் கையில் கைபேசியைக் கொடுத்துவிட்டு அரட்டையில் ஈடுபட்டிருந்தார்.

பூங்காவிற்கு வந்தும் அக்குழந்தை உடல் விளையாட்டில் ஈடுபடாமல் கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தது. 

அக்கைபேசியை ஆர்வமாகச் சிறிது தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சிட்டுவிற்குத் தன்னைக் கைபேசியைத் தொட விடாததில் முகம் சுருங்கி விட, வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினாள்.  

சிட்டுவின் தாயார் பூங்காவிற்கு வெளியே சோளம் சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். 

இரவு பூங்கா மூடிய பிறகு தான் அன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதால் பூங்காவில் ஒரு ஓரத்தில் குழந்தைகள் விளையாடவென்றே கொட்டி வைத்திருந்த மண்ணில் சென்று அமர்ந்த சிட்டுவிற்கு அடுத்தச் சில மணி துளிகள் கைபேசியைப் பற்றிய எண்ணமே மனதில் உலா போய்க் கொண்டிருந்தது.

மண்ணில் அமர்ந்ததும் அதில் விளையாடும் ஆர்வம் தலை தூக்க, மண்ணைக் குவித்து வீடு கட்டி விளையாட ஆரம்பித்தவளுக்குக்  கைகேசியின் நினைவு காணாமல் போனது. 

மண்ணோடு மண்ணாக உருண்டு, பிரண்டு அடுத்து சிறிது நேரம் விளையாடியதில் குழந்தையின் முகம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க, முத்துப் பற்கள் மிளிர சின்னச் சிரிப்புடன் இருந்த குழந்தையின் முகம் அழுக்கானவளையும் அழகியாக்கி இருந்தது. 

அதே நேரம் கைபேசியில் விளையாண்ட விளையாட்டில் தோற்று விட்டதற்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த குழந்தையைச் சமாளிக்க அவளின் தாயார் திணறிக் கொண்டிருந்தார். 

அக்குழந்தையின் அழகு முகம் அழுகையில் அலங்கோலமாகி கொண்டிருக்க, சிட்டுவின் முகம் பூர்ண நிலவாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.

மண்ணில் மனம் போன போக்கில் விளையாடி விட்டு அன்னையை நோக்கி நடந்து சென்ற சிட்டுவின் சிங்கார நடையையும், அவளின் உதட்டிலும், கண்களிலும் தங்கி விட்ட சிரிப்பையும் காண கண்கள் கோடி தான் வேண்டும்!


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: