Forum

Mullum malarai thondrum 10  

  RSS

(@raji-krishna)
Writer Moderator
Joined: 8 months ago
Posts: 18
23/12/2019 9:54 pm  

நடுநிசி தாண்டிய வேலையாகி விட்டது... இவனது அலுவல்களை எல்லாம் முடித்து, வேலைகளை சரிபார்த்து... ஓய்வாய் மேல்தளத்தில் வந்து நின்றவன் மேல் ஆக்ரோசமாய் மோதியது சூடான காற்று...

சுற்றிலும் இருட்டை மட்டுமே வாரிக் கொண்டிருந்த ப்ரதேசத்தில் ஏகாந்தமாய் நிற்க.., அப்போது அவனிதயத்திலோ சூறாவளிகள் சுழன்று கொண்டிருந்தன...

தன் வேலையைப் பற்றி தான் சிந்திக்கிறான் என அறிவிப்பது போல இறுகிய தாடையும் அழுத்தமான நடையுமாய் குறுக்கும் நெடுக்குமாய்  அலைபாய்ந்து கொண்டிருந்தான்...

ஏகாந்த தனிமையில் இளம் தென்றல் பாட்டிசைக்க.., மதியவள் தெளிவாய் வான் வீதியில் உலா வர..., காதல் கீதம் இசைக்காமல் கடமை கீதம் பாடியது கட்டிளம் காளை அவன் நெஞ்சம்..

அசராத அவன் குணமே இப்படி ஒரு உயர் நிலையை, சிறந்த கல்வியை, சிறப்பை அவனுக்கு கொடுத்துள்ளது.. கொண்ட கொள்கையில் பிடிப்புடன் செயல்படுபவன்..., அவனிடம் ஒப்படைக்கும் வேலைகள் சோடை போகாதென அரசாங்கத்தையே நம்ப வைத்திருப்பவன்..

அத்தகையவனின் இதயத்தையும் குத்தீட்டியாய் குத்திக் கிழிக்கும் நிகழ்வு அவனது வாழ்வில் உண்டு...

அதற்கு காரணமானவள்.., அதிரூபசுந்தரி...!! அவனை விட ஓரிரு வயது வித்யாசம் இருக்கலாம்... ஆனால் அவள் இவன் வாழ்வை ஆட்டி வைத்திருந்தாள்...!!

அப்போது இவளை எதிர்க்க அவனிடம் எந்த பலமும் இல்லை... ஆனால், இப்போதோ.. எண்ணும் போதே கை முஷ்டிகள் இறுக தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்...!!

இந்த ஊர்.., இந்த அரசியல்..., அதில் பெண்ணவள் பங்கு என எல்லாம் அலசி ஆராய்ந்தவன் அவளை அழிக்கும் வழிகளையும் சேர்த்தே ஆராய்ந்தான்...!!

............

மிகத்தீவிரமாய் படிப்பில் மூழ்கி இருந்தான் அவன்.... இப்பொழுதெல்லாம் அப்படித்தான்.. நேரம் காலம் எதுவுமின்றி கொண்ட இலக்கை அடைய தீவிரப் பயிற்சி தேவைப்பட்டது அவனுக்கு...

உற்றம் சுற்றம் நல்லது கெட்டது எதுவும் ஆராயும் நிலையில் இல்லை... நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கு இலக்குகளும் கனவுகளும் இமயமாய் வளர்ந்திருக்க... அவற்றை எட்டிப்பிடிக்கும் வழி கல்வி மட்டுமே என தீவிரமாய் நம்பினான்...

உலகத்தரம் வாய்ந்த ஐ.ஐ.டி யில் உலக அரசியல் படிக்க வேண்டுமென்பது அவன் எண்ணம்... அது அவனது அடுத்த கட்ட இலக்குக்கு அவனை எளிதாய் இட்டுச் செல்லும் என நம்பினான்.. அதற்கான நுழைவுத் தேர்வுக்காகவே இவ்வளவு பாடுபட்டு உழைக்கிறான்..

கன்னியரை சுற்றும் வயதில் லட்சியத்தை சுற்றுவது வெகு சிலர் தான்.... அதிலும் விடா முயற்சியுடன் வெற்றி பெருவது அரிது தான்... கன்னியர் பக்கம் கண்ணனவன் கண்கள் பாயவில்லையா..? இல்லை கண்ணில் படும் பெண்கள் அவன் கருத்தைக் கவரவில்லையா என அவனுக்கே வெளிச்சம்!!

தீவிரமாய் படித்துக் கொண்டிருந்தவனின் கண்களை மெதுவாய் மூடியது ஒரு கரம்... சட்டென மூண்ட எரிச்சலில் அக்கையை தட்டிவிடப் போனவன் அந்த மென்கரங்களின் ஸ்பரிசத்தில் எரிச்சல் மறைந்து புன்னகை பூக்க "கீது...." என கூவினான்..

உடனே அவன் கண்களை விடுவித்தவள்.. "எப்படிண்ணா கண்டு பிடிச்ச? சே போ" என்றாள் ஏமாற்றமாய்..

அவளைப் பார்த்து வாஞ்சையாய் நகைத்தவன் உடனே தன் மொந்தை மொந்தையான புத்தகங்களை மூடி வைத்துவிட்டு எழுந்தான்..

அழகான அச்சிறிய கிராமத்தில் அவளோடு சுற்றி ஆடி ஓடி குழந்தையாகவே மாறிப்போனான்...

கீதா.., அவனின் பெரியப்பா மகள்... பல்லாண்டுகள் தவமிருந்து பெற்ற ஒற்றை செல்வ மகள்... இவனது தந்தைக்கும் இவன் ஒற்றை ஆண் பிள்ளையாய் போய்விட, சகோதரர்களுக்கிடையே அன்பும் வாஞ்சையும் வானளவு இருந்தது..

அவனது பெரியப்பா அந்த பெரிய நகரத்தில் ட்ரான்போர்ட் தொழில் செய்து கொண்டிருந்தார்... ஊரிலிருந்த பூர்வீக நிலங்களில் இவனது தந்தை விவசாயம் செய்து கொண்டிருந்தார்..

கிராமத்து அண்ணனும் நகரத்து தங்கையும் நகமும் சதையும் போல பாசத்தால் ஒன்றிணைந்திருந்தார்கள்..

தனது தங்கையுடன் கிராமம் முழுக்க சுற்றியவன் மாலை வீடு திரும்பி தன் பெரியன்னை மடியில் தலை சாய்த்தான்..

"கண்ணா, படிப்பு படிப்புன்னு உடம்ப பாக்காம விட்டுடாதே.. பாரு இழைச்சி, கருத்து எப்டியோ போய்ட்டடா" என்றார் பெரியன்னை

"அதெல்லாம் இல்ல பெரிமா... நான் நல்லாருக்கேன்" என்றான்..

அதே நேரம் தன் சித்தியின் கழுத்தில் தொங்கியபடி அங்கு வந்த கீது.., "அடேய், உன் மொகரைய கண்ணாடில முன்ன பின்ன பாத்தியா இல்லயா? இப்டி இருந்தா எவ உன்ன கட்டுவா?" என தன்னுடைய மிகப் பெரிய கவலையை வெளியிட்டாள்..

"உனக்கு ஒரு கேனயன பாப்பேன்ல... அவனுக்கு ஒரு கேன தங்கச்சியோ கேன அக்காவோ இல்லாமலா போய்ருவா... விடு பாத்துக்கலாம்.." என சிரித்தான் அவன்..

அவனது நக்கலில் கோபம் கொண்டு அவனை போட்டு அவள் மொத்த ... அந்த செல்ல அடிகளை வாங்கிக் கொண்டு வலிப்ப்பது போல பாசாங்கிட்டான் அவன்..

அவ்வழகான பாசக்கூட்டின் மேல் யார் கண் பட்டதோ தெரியவில்லை... விதி அவர்களது வாழ்வில் சுந்தரி வடிவில் தான் புகுந்ததோ?

- தொடரும்

 


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 2 months ago
Posts: 81
16/01/2020 7:55 pm  

அருமையான பதிவு


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: