Forum

Mullum malarai thondrum - 12  

  RSS

(@raji-krishna)
Writer Moderator
Joined: 8 months ago
Posts: 18
31/12/2019 8:13 am  

முமதோ12

அக்‌ஷரா எப்போதும் இப்படி தன் குடும்பம் பிரிந்து எங்கும் சென்று பல நாட்கள் கழித்தது கிடையாது.. அவளது மற்றைய நண்பர்களைப் போல இவளுக்கு சாதாரண குடும்பமும் கிடையாது..

பாதி தாயாகவே மாறிவிட்டிருந்தாள் தன் தம்பிக்கும் தங்கைக்கும்.. எனவே இந்த தனித்த பயணம் மனதளவில் அவளை வெகுவாக பாதித்தது எனலாம்..

எனினும் அவனின் அன்பும் அரவணைப்பும் திடீரென ஏற்பட்ட எதிர்பார்க்காத ஓர் உறவின் உணர்வை அவளுக்குள் கடத்தவும் தவறவில்லை..

சீ.ஓ வாக அவனது வேலைகள் சரியாக நடந்தாலும்.. மூன்று நாள் பயணத்தில் வேலைகள் ஏதுமற்று சோம்பிக் கிடக்கும் மருத்துவர்களையும் ராணுவத்தினரையும் கூட அவன் தனியே விட்டு விட வில்லை..

அனைவரையும் ஒருங்கிணைத்து சிறுசிறு கேளிக்கைகள் நடக்குமாறு பார்த்துக் கொண்டான்.. அவர்களுக்குள்ளாகவே ஆட்டம் பாட்டமென அவர்களது மனதிற்கு தோன்றியதை செய்து மற்றவர்களை மகிழ்விக்க ஊக்குவித்தான்..

அத்தோடு சில பல உலகத்தரம் வாய்ந்த பல நாட்டுத் திரைப்படங்கள் என அவர்களது பொழுதுகள் சிறப்பாய் கழிய வழி வகுத்தான்..

அத்தோடு அக்‌ஷராவிற்கான அவனது ஸ்பெஷல் கவனிப்பு மற்றவர் அறியாத வண்ணம்.. அவள் மட்டுமே அறியும் வண்ணம் பார்த்துக் கொண்டான்..

தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எந்நேரமும் கண்காணிக்கப்படுபவர்கள்.. அவனது சிறு சிரிப்பும் சிறு முறைப்பும் கூட பெரிதாய் பேசப்படும். அதுவும்.. இது போன்ற குறைந்த நபர்களைக் கொண்ட பயணங்களில்..

எனவே வெளிப்படையாய் ஏதும் காட்டாதிருந்தாலும் அவளுக்காய் தினமும் சிறிது நேரம் ஒதுக்குவது போல பார்த்துக் கொண்டான் அதுவும் இயல்பு போலவே..

அக்‌ஷராவிற்கும் அவனது ஸ்பெஷல் கவனிப்பும் அக்கறையும் புரிந்தாலும் அவளும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே பழகினாள்..

அவனுடன் தினம் அவ்வப்போது கிடைத்த தனிமைத் தருணங்களை ரசிக்கவும் செய்தாள்... அவளுக்கான ஸ்பெஷல் சுக்கு காப்பி.. அவளுடனான சிறு நடைபயிற்சி.. என அவன் அவளுக்காய் ஒதுக்கும் நேரத்திற்காய் காத்திருக்கத் தொடங்கினாள் எனலாம்..

மூன்று நாட்களில் மேலும் தெள்ளத் தெளிவாய் தன் மனதும் அவனது மனதும் கூட புரிந்து விட்டிருந்தது அவளுக்கு..

கப்பல் அன்றைய நாளின் நள்ளிரவில் போர்ட் ப்ளேருக்கு சற்றும் சம்மந்தம் இல்லாததாக தோன்றிய ஓரிடத்தில் சற்று தொலைவிலேயே நின்று இவர்களை சிறு சிறு படகுகளில் இடம் மாற்றினார்கள்..

தரையிறங்கிய பின் தான் தெரிந்தது அது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு தீவு என...

தீவு வரை கப்பலை கொண்டு சென்றால் அது அந்நிய தேசங்களின் செயற்கைகோள் படங்களில் தென்பட்டால் வீண் சச்சரவுகள் நேரும் என்பதால் நடுக்கடலிலேயே கப்பலை நிறுத்தி படகுகளில் கரை சேர்ந்திருந்தார்கள்..

இரவில் அனைவருக்கும் சிறு குடில்கள் அமைத்துத் தரப்பட்டன... அதில் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட, தன் நண்பர்கள் அனைவரும் உறக்கம் சொக்கும் விழிகளுடன் நித்திரையில் ஆழ்ந்துவிட தூக்கம் தொலைத்த தேவதைப் பெண் குடிலை விட்டு வெளியே வந்தாள்..!!

தூரத்தில் கடற்கரையில் அவன் தனித்து அமர்ந்திருப்பதை கண்டாள்.. அவ்வளவு இருட்டிலும் நிலவின் வெளிச்சம் மட்டுமே தொட்டுக் கொண்டிருந்த தீவின் இருளிலும் .. அவனது முதுகையும், அமர்ந்திருக்கும் தோற்றத்தையும் வைத்தே அது அவன் தான் என அனுமானிக்க முடிந்தது அக்‌ஷராவினால்...

அவனை கண்டதும்.. சூழல் மறந்து அவனை நோக்கி நடை போட்டாள்... குடில்கள் இருக்கும் பகுதிகள் வரை கட்டுப்பாடின்றி நடக்க... குடில்களை தாண்டி அவளது நடை கடற்கரையை நோக்கி செல்லவும், இரண்டு இராணுவ வீரர்கள் அவளை வழி மறித்து மிகவும் கடினமான குரலில் அவளிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்..

என்ன தான் மூன்று நாட்களாய் இராணுவ வீரர்களுடன் கழித்திருந்தாலும், அவர்கள் இவர்களுடன் கேளிக்கைகளில் கூட பங்கெடுத்திருந்தாலும், அவர்களின் கடமை என வரும் போது.. எக்கின் உறுதியுடனே.., அவளிடம் விசாரணையை ஆரம்பிக்கவும்.., உண்மையில் அக்‌ஷரா அரண்டு தான் போனாள்..!!

அப்போது தான் தாம் வந்த வேலையும்.., அது அரசாங்கத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதும், இந்த நேரம் தனித்து உலாவுவது.. எப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் என்பதும் அவளது மூளையில் சுளீரென உரைத்தது..

மேலும், இவ்வளவு நேரம் கண்காணிப்பு இருப்பதாகவே தெரியவில்லை.. வீரர்கள் ரோந்துப் பணியில் இருப்பதும் கண்களில் படவேயில்லை.. எனினும் எல்லை தாண்டிய நொடி கண்ணெதிரே தோன்றி விசாரிக்கிறார்கள் எனில்.., அவர்களது திறமையை எண்ணி வியப்பாகவும் அல்லவா இருக்கிறது..!!

நா உலர்ந்து என்ன பதில் சொல்வதென தெரியாமல் அவள் தடுமாறிய நிமிட நேரத்தில் மனம் என்னென்னவோ எண்ணி கலங்க... இந்த கலக்கங்களுக்கெல்லாம் அவசியம் இல்லை என்பது போல.., பாலை நிலத்தில் அடைமழை பெய்தது போல ... ஒலித்தது அவனது குரல்..

"அவங்களை நான் தான் வரச் சொன்னேன்.. ரொம்ப ரகசியமான மீட்டிங் இருக்கு.. கொஞ்சம் அவங்களை விட்டுடுங்க..." என்று அந்த வீரர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சீ.ஓ.

உடனே அவர்களும் இவளை விலகி நடக்கத் தொடங்கினர்... இவன் எப்படி சரியாய் வந்தான் என்பதாய் அவள் பார்க்க.. அவன் கையில் இருந்த ராணுவத்தின் தகவல் தொடர்பு சாதனம் அவளுக்கு உண்மையை விளங்க வைத்தது..

அவள் குடிலை விட்டு நடக்கத் தொடங்கவுமே அவனுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்..!! யாரோ என எண்ணி சற்று மெதுவாகவே அவன் வரவும் அதற்குள் இவள் எல்லை தாண்டவும்.., நேரடியாய் அவளிடம் விசாரணையில் இறங்கியுள்ளனர்..!!

இவன் மட்டும் இப்படி சொல்லவில்லை எனில் தன் கதி என்னவாகியிருக்குமோ என்ற எண்ணமே அவள் உடலை நடுங்கச் செய்தது..!!

அவளை ஓரக் கண்ணால் பார்த்தவனுக்கும் அவள் நடுக்கம் புரிந்தது.. எனினும் எதையும் காட்டாது அவளுக்கு கண்களால் ஆறுதல் அளித்தபடி மெதுவாகவே நடை போட்டான்..

கடற்கரையை அடைந்து சிறிது தூரம் நடக்கத் தொடங்கி.. அங்கு தென்பட்ட சிற்சில பாறைகளுக்கு அருகே சென்றவன், தன்னிடமிருந்த டார்ச் லைட்டால் அங்கே ஏதேனும் பூச்சிகள் உள்ளதா என ஆராய்ந்து அதன் பின்னே அவளை ஒரு பாறையின் மறைவில் அமர வைத்தான்..

பின், தன்னிடமிருந்த இண்டர்காம் மூலம் ராணுவ அதிகாரியை அழைத்தவன் அவருக்கு ஏதோ சில சமிக்ஞைகள் அளித்து விட்டு அவளருகே வந்து அமர்ந்தான்..

இன்னும் அதிர்ச்சி விலகாமல் அவள் பூவுடல் நடுங்குவதை கண்டவன்.. "அக்‌ஷூ.. பேபி.. என்ன டா ..?? ஒன்னுல்ல.. ஒன்னுல்ல... ரிலாக்ஸ்.." அவளது நடுங்கும் மென் கரங்களை பற்றி அவன் பேசத் தொடங்கிய அடுத்த நிமிடம் அக்‌ஷரா அவனை ஆக்ரோசமாய் கட்டிக் கொண்டு கதறினாள்...

அவள் அதிர்ச்சியில் இவ்வாறு நடந்து கொள்வதை ஊகித்தவன்.. அவளது அழுகை அடங்கும் வரை, ஆறுதலாய் அணைத்தபடி இருந்தான்..

இயல்பிலேயே மெல்லிய மனம் படைத்தவள் அக்‌ஷூ.. இதில் இந்த புதியதான தனிமை.., அதில் மனதில் வளரும் இந்த காதல்.. என தவித்தபடி இருந்தவளால் இன்று நடந்த சிறு விசாரணையைக் கூட தாங்கவியலாது போய்விட்டது..

ஒரு நொடியில் உலகையே வலம் வரும் வல்லமை படைத்த மனித மனம்.., அதற்குள் அவளது சிந்தனையில் வேண்டாத பல கற்பனைகளை உண்டாக்கியிருக்க.. அவை எதுவும் உண்மையில்லை என உணர்த்துவது போல சரியான நேரத்தில் அவன் வந்ததும், அவளை அழைத்து வந்ததும் இன்னும் கனவாகவே தோன்றுகிறது பெண்ணவளுக்கு..!!

அழுகை சிறிது சிறிதாய் குறைய நிதானத்திற்கு வந்தவள்.. அப்போது தான் அவனது தோள் சாய்ந்து தான் கதறுவதை உணர்ந்து வேகமாய் விலகினாள்..!! மறுக்காமல் அவள் விலக அனுமதித்தவன்.. " என் பட்டு எவ்வளவு பெரிய தைரியசாலின்னு இப்போல்ல புரியுது.. புலியை முறத்தால் விரட்டிய வீரத்தமிழச்சி வழி வந்த தமிழ் பொண்ணு இப்டியா சின்ன விசயத்துக்கெல்லாம் பீல் பண்ணுவா?" என சீண்டினான்.

அவன் சீண்டலில் முகம் சிறிது தெளிவு பெற.., மெல்லிய புன்னகை ஒன்று உருவானது நங்கை அவள் நயனத்தில்!!

"நிஜமாவே பயந்துட்டேன்ங்க.. எனக்கு எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல" - அக்‌ஷரா

"சரி, நீ ஏன் இந்த நேரத்துல இப்படி வெளில வந்த?" - சீ.ஓ

இந்த கேள்வியில் அவள் முகம் செக்கச் செவேரென சிவந்துவிட்டது இந்த இருட்டில் அவனது கண்களுக்குப் புலப்படாது தானே?

ஒருவேளை தெரியுமோ? அய்யோ என்ன சொல்வது என்ன செய்வது என புரியாமல் மேலும் சிவந்து குழம்பி தவித்துப் போனாள் அவள்..

அவளது முகத்தை கூர்ந்து பார்த்தபடி இருந்தாலும் அந்த முகச்சிவப்பு நள்ளிரவில் தெரிகிறதா என்ன?

"அக்‌ஷூ.. ஏன் இந்த நேரம் இப்படி தனியா வந்தன்னு கேட்டேன்.." மேலும் அழுத்தமாய் ஆனாலும் அதில் ஓரிழை அக்கறையாகவும் ஒலித்தது அவனது குரல்..

"அது வந்து.. வந்து..."

"ம்ம்ம்... சொல்லு வந்து.."

"நீங்க.."

"நான்.... எனக்கு என்ன சொல்லு"..

" நீங்க அங்க உக்காந்திருந்தீங்க.. அதான்.."

இதை அவள் சொல்லி முடித்த நொடி அவனுக்குள் ஆயிரம் பூக்களின் சாரல்கள்... லட்சம் விண்மீன்களின் கண் சிமிட்டல்கள்.

நெஞ்சத்தில் சட்டென மலர்ந்து மணம் வீசுகிறது காதல் பூக்களின் மொட்டுக்கள்...

"அக்‌ஷூ.." அவனது இந்த அழைப்பில் அவளுக்கான மொத்த காதலும் தேங்கி நிற்கிறது..!! இவ்வளவு உணர்ச்சிவசப்படும் நேரத்திலும் தனிமையின் வாசத்திலும் கூட அத்துமீற முயலவில்லை ஆண் மகன் நெஞ்சம்..

உண்மையான ஆண்மைக்கு அழகும் அது தானே..!! தன்னவள் என அறுதியிட்டு உறுதியாய் தோன்றினாலும்.. ஊரறிய உலகறிய.. அவளை மனையாட்டியாக்கி மங்கையவள் மனம் கொய்த பின், மணமும் கொண்டு அதன் பின் அல்லவா அவள் அங்கம் தொட வேண்டும்? அதுவல்லவா ஆண் அவனுக்கு அழகு!! அந்த சுயக் கட்டுப்பாடு அல்லவா தமிழ் மண்ணின் உயிர் மூச்சு..!!

காதலை கண்கள் வழி கடத்தி அவள் உயிருக்குள் ஊடுருவினால் போதாதா? உடல் தீண்டவும் வேண்டுமோ? மனம் நிறைப்பதன்றோ உண்மை காதல்.. மானம் பறிப்பதா காதல்??

அவனது அந்த ஒற்றை அழைப்பில் சர்வமும் சதிராடுகிறது பெண்ணவளுக்கு... தன்னவனின் காதலை அந்த அழைப்பிலேயே உணர்கிறாள் மங்கையவள்..

"அக்‌ஷூ..." மீண்டுமாய் அதே அழைப்பு..

"ம்ம்.. சொல்லுங்க.."

"அக்‌ஷூ உன் கிட்ட நிறைய பேசனும்.. என்ன பத்தி நிறைய சொல்லனும்.." - அவன்

"முதல்ல உங்க பேர சொல்லுங்க.. சீ.ஓ என்று தான் எல்லாரும் சொல்றாங்க..." என்றாளே பார்க்கலாம்..

உண்மையில் அவனுக்கு திகைப்பும் பின் சிரிப்புமாய் தான் இருந்தது..

யோசித்துப் பார்த்தால், இந்த குழுவில் யாருக்குமே தனது பெயர் தெரியாது என்பதும் புரிந்தது..

அவனும் அவனைப் பற்றி எதுவும் அவர்களுக்கு உரைக்கவில்லையே.. அவனைப் பற்றிய தகவல்கள் இரகசியமாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவன் அல்லவா..??

சிறிது யோசித்தவன் அவளிடம் கூறினான்... "என் பேர் விக்ரம்.. எங்க வீட்ல, நண்பர்கள் எல்லாரும் கண்ணான்னு கூப்டுவாங்க.. நீ நாம தனியா இருக்கும் போது உனக்கு எப்டி தோணுதோ அப்டி கூப்பிடு.. ஆனா எல்லார் முன்னாடியும் சீ.ஓ தான் சரியா?" என்றான்.

சம்மதமாய் தலையாட்டினாள் நங்கையவள்..


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 2 months ago
Posts: 81
16/01/2020 8:03 pm  

அவனுடைய பெயர் உண்மையான பெயரா


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: