Notifications

[Sticky] பெண்மையின் வன்மை  

  RSS

Narmadha Subramaniyam
(@narmadha-subramaniyam)
Writer Moderator
Joined: 6 months ago
Posts: 3
14 Dec 2019 8:17 pm  

அவனை மணம் செய்யவே

விருப்பமில்லை எனக்கு...

திருமணம் செய்யவே
விருப்பமில்லை எனக்கு
மனதையன்றி
அழகை பிரதானப்படுத்தும்
இவ்வுலகில்....

திருமணச் சந்தையில்
விலைப்போகாதிருந்த என்னை
அடிமாடாய் விலைப்பேசி முடித்தனர்
ஒருவனுக்கு....

அந்தக் காட்டுமிராண்டிப் பயலுக்கு...

அவர்களின் பாரத்தை இறக்கி
என்னை பாரமாய்
ஏற்றினர் அவனிடம்...

ஆனால் பாரமானதோ
என் மனது தான்....

எனக்காயல்லாது
எனக்கு விலையாயளித்த
வரதட்சனைக்காய் மணம் செய்ய
ஒப்புக்கொண்டவனாகையால்
பிடிக்கவில்லை அவனை எனக்கு...

அவனை பிடிக்கவில்லை
என்றேன் நான்...

எனை அடித்து துன்புறுத்தி
மணக்கச்செய்தனர் அவனை...

உனை பிடிக்கவில்லை
என்றேன் நான் அவனிடமே...

கேட்டானில்லை....

எனக்கு அவனை பிடிக்கச்செய்யவும்
முயலவில்லை அவன்....

அவனுடனான அந்த இரவு
என் வாழ்வில்
நிகழ்ந்திருக்கக் கூடாத நிகழ்வு...

பெண்ணாய் பிறந்ததேப் பாவமென
எண்ணிய இரவு...

என்னைக் காப்பாற்ற எவருமில்லையா
எனக் கதறிய இரவு..

என் தாய் தந்தையருக்கு
சரமாரியாய் நான் சாபத்தை
அள்ளித் தெளித்த இரவு....

என் உடலுடன் சேர்ந்து
மனமும் இறுகிப் போன இரவு...

எனதருகில் வராதே என்றேன் நான்
கேட்டானில்லை..

என்னை தொடாதே என்றேன் நான்
கேட்டானில்லை....

காதலாய் தீண்டுவானென
கற்பனை செய்யவில்லை
மனிதனாய் நடந்துக் கொள்வானென
எண்ணியிருந்தேன் நான்...

பூவாய் நான் பொத்தி
பாதுகாத்த பெண்மையை
வெறிநாயாய் குதறியெடுக்கையிலே
செத்துப்பிழைத்தேன் நான்...

யார் கூறினார்கள்
பிரசவம் உயிர்வலியென்று
இம்மாதிரி ஆணுடனான
ஒவ்வொரு இரவும் உயிர்வலிதான்...

ஏன் உயிரோடிருக்கிறேனென
எண்ண வைக்கும் உயிர்வலியது...

உயிர்வலியை அவன் காண்பிக்க
பூவாய் மலர வேண்டிய புனித
தாம்பத்தியத்தை வெறுத்தேன் நான்...

விருப்பமில்லா பெண்ணை
எவன் தொட்டாலும்
கற்பழித்தவனே...

ஆம் என் கணவன்
என்னை கற்பழித்தவன்..

பெற்றோரிடம் மன்றாடினேன்
அவனுக்கேதுவாய்
நடந்துக்கொளென்றார்கள்...

காவல் நிலையம் சென்றேன்...

கணவன் கற்பழித்தானாம்
இதற்கு சட்டமேயில்லையென
கூடிச்சிரித்தார்கள் காவலர்கள்....

என்னை காத்துக் கொள்ள
நானே இறங்கினேன் களத்திற்குள்..

எடுத்தேன் ஒரு முடிவை!!!

அழிக்க முடிவெடுத்தேன்
எந்த ஆண்மை வைத்து
வெறியாட்டம் ஆடினானோ
அவ்வாண்மையை
அழிக்க முடிவெடுத்தேன்...

திட்டம் தீட்டினேன்...

கத்தியின்றி இரத்தமின்றி
நிகழ்த்திக் காட்டினேனதை...

அவனருந்தும் பாலில்
மாத்திரைகள் கலந்து,
ஆண்மையற்றவனாய்
மலடனாய்
மாற்றினேனவனை...

எவ்வாண்மையால் எனை
வெறியாட்டம் ஆடினானோ
அவ்வாண்மையாலே
தண்டித்தேனவனை...

விவாகரத்து வேண்டி நின்றேன்
அவன் ஆண்மையற்றவனென...

சந்தி சிரிக்கச்செய்தேன் அவனை...

அவனிடமிருந்து விடுதலை எனக்கு....

காலம் முழுவதும் அவமானத்தில்
புழுவாய் துடித்திறக்கும்
ரணவலி அவனுக்கு....

நீயே ஆயுதமாவாய் பெண்ணே
உனை வன்புணர நினைக்கும்
கயவர்களின் கைப்பிடியில்
நீயே ஆயுதமாவாய் பெண்ணே...

-- நர்மதா சுப்ரமணியம்

குறிப்பு: இக்கவிதை பெண்களை துன்புறுத்தும் கொடியவர்களுக்காக மட்டுமே எழுதியது.  


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: