Forum

பூங்காற்று 46  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 4 months ago
Posts: 333
12/02/2020 8:01 am  

நீரஜாட்சி செயினை வீசி எறிந்தவள் சட்டென்று எழுந்து போகையில் மொபைலில் அழைப்பு வந்தது. ரகுநந்தன் தான் அழைக்கிறானோ என்ற நப்பாசையுடன் அவசரமாக திரையை பார்க்க அழைத்தவரோ தாத்தாவின் நண்பரான கும்பகோணம் கிருஷ்ணமூர்த்தி. அவர் எப்போதுமே சகோதரிகள் இருவருக்கும் போன் செய்து நலம் விசாரிப்பது வழக்கம். எனவே உடனே அழைப்பை ஏற்றவள் "சொல்லுங்க தாத்தா! எப்பிடி இருக்கிங்க?" என்று அவரிடம் பேச ஆரம்பித்தாள்.

அவர் "அம்மாடி நீரஜா! தஞ்சாவூர்ல உங்களோட ஆத்துல சில மராமத்து வேலை பண்ணனும்னு உன் மாமாக்கு ஒரு வாரம் முன்னாடி சொல்லிருந்தேன்டிமா., அவன் அதை மறந்துட்டானா? ஆத்தை இப்பிடியே போட்டுட்டேள்னு வை, அப்புறம் சிதிலமாயிடும்" என்று அவள் பிறந்த வீட்டை பற்றி கூற

நீரஜாட்சி "என்ன சொல்லுறிங்க தாத்தா? மாமா தான் அடிக்கடி போய் அந்த வீட்டை பார்த்துக்கிறாங்களே" என்று வினவ

அவர் "இந்த ஆறு மாச காலமா அவன் அங்கே வரலைடிமா. ஹர்சனோட விவாகத்துல ஆரம்பிச்ச பிரச்சனையால வேங்கடநாதனுக்கு மனவுளைச்சல், கோதண்டராமனுக்கும் முடியாம போயிடுத்து. இதுல பட்டுவும் என்னாட்டம் வயசாளி. அதனால யாரோட கவனமும் ஆத்தை நோக்கி திரும்பல.

ஒரு வாரம் முன்னாடி நேக்கு தஞ்சாவூர்ல ஒரு ஜோலி இருந்துச்சேனு அந்த பக்கமா போறச்ச மதுராவோட ஆத்தை ஒரு பார்வை பார்த்துடுவோமேனு போனேன்..வீடு உள்பக்கம் மரக்கட்டைகள்ல கரையான் ஏற ஆரம்பிச்சிடுத்து. அதான் உன் மாமாக்கு போன் பண்ணி சொன்னேன்..அவனும் மராமாத்து வேலையை ஆரம்பிச்சிடுங்கோனு என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டான். ஆனா யாராவது ஒருத்தர் மேற்பார்வையில வேலை நடந்தா தான் ஜல்தியா முடியும்டிமா" என்று நிலமையை விளக்கினார்.

அவர் பேசும் போதே நீரஜாட்சிக்கு அந்த வீட்டின் நினைவு வர அவள் இப்போது இருக்கும் மனநிலைக்கு ஒரு இடமாறுதல் தேவைப்படுவதாக தோன்ற அவரிடம் அனைவரும் ஷேத்ராடனம் சென்றிருப்பதால் தானே வந்து பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு போனை வைத்தாள்.

அடுத்து கரோலினுக்கு அழைத்தவள் நிலமையைக் கூற அவள் தான் சமாளித்துக் கொள்வதாகக் கூறவும் போனை டிரஸ்ஸிங் டேபிள் மீது வைத்தவள் அதற்கு பின் போனை பற்றி மறந்தே போய்விட்டாள்.

வார்ட்ரோபிலிருந்து தனது உடைகளை ஒரு சூட்கேசில் திணித்தவள் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு மாமாவுக்கு போன் செய்து தான் தஞ்சாவூர் செல்லப் போவதாக கூறியவள் ரகுநந்தன் ஆஸ்திரேலியா கிளம்பி சென்றதை மறக்காமல் கூறிவிட்டாள்.

அவர் மருமகளை பத்திரமாகச் செல்லுமாறு அறிவுறுத்தியவர் இந்த நந்தன் ஏன் மருமகளை தனியாக விட்டுவிட்டு ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்ற யோசனையுடன் அவனுக்கு தொடர்பு கொள்ள அவன் விமான பயணத்தில் இருந்ததால் அவனை தொடர்பு கொள்ள இயலவில்லை.

பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவர் விட்டுவிட நீரஜாட்சி சூட்கேசுடன் கிளம்பியவள் அறையை விட்டு வெளியேறும் முன் அவர்களின் திருமணக்கோலத்துடனான போட்டோவை விரக்தியுடன் பார்த்தவள் தலையை உலுக்கிவிட்டு வெளியேறினாள். ஆனால் கிளம்பிய அவசரத்தில் போனை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டதை அவள் அறிந்த போது அவள் சென்னையை விட்டு வெகுதூரத்தில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள்.

**********

அதே நேரம் லண்டன் சென்றடைந்த கிருஷ்ணஜாட்சியும் ஹர்சவர்தனும் அவன் தோழனின் வீட்டை அடைந்து ஓரளவுக்கு அந்த காலநிலை அவர்களுக்கு பழக ஆரம்பித்திருக்க அப்போது அங்கே அதிகாலை என்பதால் கிருஷ்ணஜாட்சி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹர்சவர்தன் இவ்வளவு நேரம் தன் அணைப்பில் இருந்த மனைவி காணாமல் போய்விட்ட அதிர்ச்சியில் திடுக்கிட்டு எழுந்தவன் அவள் பால்கனி பக்கம் நிற்பதைக் கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"ஒரு நிமிசம் உன் மூளை எவ்ளோ விபரீதமா யோசிக்குது ஹர்சா" என்று தன்னை தானே கேலி செய்தவாறு அவளை நோக்கி சென்றவன் பின்னோடு அவளை அணைத்துக் கொள்ள கிருஷ்ணஜாட்சி அதிர்ந்தவள் பின்னர் "எப்போ முழிச்சிங்க ஹர்சா? தூக்கம் வரலையா?" என்று கேட்டபடியே வேடிக்கை பார்க்க

அவன் "இப்போ தான் முழிச்சேன். இவ்ளோ நேரம் பூனைக்குட்டி மாதிரி என் கைக்குள்ள இருந்த என்னோட அழகி எங்கே போயிட்டானு பதறிப் போய் ஓடி வந்தா மேடம் பால்கனியில நின்னு மார்னிங் வியூவை ரசிச்சுட்டிருக்கிங்க" என்று கூறிவிட்டு அவளுடன் சேர்ந்து அவனும் ரசிக்கத் தொடங்கினான்.

கிருஷ்ணஜாட்சி புருவங்கள் முடிச்சிட "ஹர்சா நீருவுக்கும் அம்மாஞ்சிக்கும் எதுவும் பிரச்சனையா? ரெண்டு பேர் நடவடிக்கையும் ஏதோ தப்பா தோணுது" என்று யோசனையுடன் கூற

ஹர்சவர்தன் "ம்ம்..நான் இதை ரொம்ப நாளா கவனிச்சிண்டிருக்கேன். சின்ன வயசுல இருந்த மாதிரி அவன் ஆத்துக்குள்ளே நுழைஞ்சா நீரு தோட்டத்துப்பக்கம் போயிடறா. அவன் சாப்பிட வந்தாலும் அவனை கண் கொண்டு பார்க்காம பாட்டி தாத்தா கூட செல்லம் கொஞ்சிண்டிருக்கா. இப்போ என்ன பஞ்சாயத்தை இழுத்து வச்சிண்டிருக்கானு புரியலை. பட் எனக்கு என் தம்பியை பத்தி தெரியும். அவன் கொஞ்சம் கோவக்காரன் தான். ஆனா நீருனா அவனுக்கு உயிர். அவனே நினைச்சாலும் அவளை பிரிஞ்சு அவனால இருக்க முடியாது. ரெண்டும் சண்டை போட்டுண்டே இருந்தாலும் ஒன்னா தான் இருக்கும். அதனால நீ மனசைப் போட்டு குழப்பிக்காதே" என்று மனைவிக்கு சமாதானம் செய்தான் அவன்.

கணவன் கூறிய சமாதானத்தில் அவளும் அப்போதைக்கு அமைதியானாள்.

**********

நீரஜாட்சி தஞ்சாவூரை அடைந்த போது நேரம் இரவு ஏழு மணியை தாண்டியிருந்தது. பேருந்து நிலையத்தில் ஆட்டோ பிடித்தவள் வீட்டு முகவரியை கூறிவிட சரியாக அடுத்த அரை மணிநேரத்தில் அவர்களின் வீட்டின் முன் இறங்கினாள் அவள்.

ஆட்டோ நிற்கும் சத்தத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி வந்து எட்டி பார்க்க அங்கே கையில் சூட்கேசுடன் கழுத்தில் இன்னும் புதிது மாறாத மஞ்சள் கயிற்றுடன் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருக்கவும் அவருக்கு இவளை எங்கேயோ பார்த்த நினைவு.

நீரஜாட்சி அவர் புறம் திரும்பியவள் ஒரு புன்னகையுடன் "வனஜாக்கா என்னை அடையாளம் தெரியலையா? நான் நீரு" என்றபடி அவரிடம் செல்ல அந்த பெண்மணி அப்போது தான் அவளை அடையாளம் கண்டு கொண்டார்.

மகிழ்ச்சியுடன் "நீருவா இது? இத்துணூண்டு இருந்துட்டு கிரிக்கெட் பேட்டும் கையுமா சுத்துனவ, இவ்ளோ பெரிய பொண்ணாயிட்டியா? சரி சரி வெளியேவே நின்னு பேச வேண்டாம். உள்ளே வா" என்று அவளை கரம் பற்றி வீட்டினுள் அழைத்துச் செல்ல நீரஜாட்சி அவருடன் சென்றாள்.

அவர் அவளுக்கு தண்ணீரை கொடுத்தபடி "கிருஷ்ணா எப்பிடி இருக்கா? நீங்க ரெண்டு பேரும் உங்க மாமா குடும்பத்தோட போனதுக்கு அப்புறம் என் குட்டிப்பையனுக்கு விளையாட ஆள்துணையே இல்லாம போயிடுச்சு நீரு" என்று படபடவென்று பொறிந்து தள்ளியவர் அவளுக்கும் கிருஷ்ணஜாட்சிக்கும் திருமணமாகி விட்டதை அறிந்து சந்தோசப்பட்டார்.

"விக்கி எங்க போயிருக்கான்கா?" என்று நீரஜாட்சி அவரது மகனைப் பற்றி கேட்க

"அவன் இப்போ டென்த் போயிட்டான் நீரு. அதான் டியூசன் போயிருக்கான். வர்ற நேரம் தான். உன்னை பார்த்தா குஷி ஆயிடுவான்" என்று கலகலப்பாக உரையாடியபடி அவளை சாப்பிட அழைத்துச் சென்றார்

"கிருஷ்ணமூர்த்தி மாமா போன வாரம் வந்தாரு. அப்போவே நினைச்சேன் உங்க வீட்டுல இருந்து யாராவது வருவாங்கன்னு. ஆனா நீயே வருவேனு நினைக்கல நீரு. ஆமா உன் ஹஸ்பெண்ட் என்ன பண்ணுறாரு?"

"அவர் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனியை பார்த்துக்கிறார் அக்கா. இப்போ எதோ இம்பார்ட்டெண்ட் விஷயம்னு சொல்லி ஆஸ்திரேலியா போயிருக்கார்" என்று சுருக்கமாக தான் தனியாக வந்ததுக்கான காரணத்தையும் கூறிவிட்டு சாப்பிட தொடங்கினாள்.

அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியாதிருக்க ஒன்பது மணியானதும் வனஜாவின் மகனும் டியூசன் முடிந்து வந்துவிட்டான்,.

நீரஜாட்சி திடீரென்று ஹாலுக்குள் நெடுநெடுவென்று ஒல்லிக்குச்சி உடம்புடன் நுழைந்த பையனை கண்டதும் திகைத்தவள் பின்னர் அடையாளம் கண்டு கொண்டவளாய் "விக்கியா இது? எவ்ளோ பெரிய பையனா வளர்ந்துட்டான்?" என்று ஆச்சரியத்துடன் கூற

அந்த விக்கி அவளது முகத்தை கூர்ந்து நோக்கியவன் பின்னர் சந்தோசக்கூவலுடன் "நீருக்கா" என்றபடி அவள் கரங்களைப் பற்றிக் கொள்ள நீரஜாட்சி அவன் தன்னை விட உயரமாக வளர்ந்துவிட்டான் என்று ஆச்சரியத்துடன் பார்த்தபடி நின்றாள்.

"அக்கா நீ போனதுக்கு அப்புறம் நம்ம தெருவுல எனக்கு கிரிக்கெட் விளையாடவே பிடிக்கல தெரியுமா? ஒரு பையனும் உன்னை மாதிரி பேட்டிங் பண்ண தெரியல" என்று அவர்களின் இளம்பிராயக் கதைகளைப் பேசத் தொடங்க நீரஜாட்சிக்கு அவனிடம் பேசியதில் மனபாரம் குறைந்தது போல் இருந்தது.

வெகு நேரமாகிவிட அம்மா, மகன் இருவரிடமும் சொல்லிக் கொண்டு அவள் பிறந்த வீட்டை நோக்கி சூட்கேசுடன் அவள் நடைபோட ஆரம்பித்தாள். அந்த வீட்டை சூழ்ந்திருந்த இருளை தெருவிளக்கின் ஒளி விரட்ட முயற்சித்துக் கொண்டிருக்க தூசி படிந்த ஓவியமாய் தெரிந்தது அவர்களின் வீடு.

பழைய கால ஓடு வேயப்பட்ட வானவெளி முற்றத்துடன் கூடிய வீடு. அதை சுற்றி போடப்பட்டிருந்த காம்பவுண்டும் கேட்டும் மட்டுமே புதிய பாணியில் இருக்கும். ஒரு பெருமூச்சுடன் கேட்டை திறந்து பெரிய முற்றத்தைக் கடந்து உள்ளே சென்றவள் வராண்டாவை தொடர்ந்த அறையில் செருப்பை கழற்றிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

வானவெளி வழியே வந்த நிலவின் ஒளியில் சுவிட்ச் போர்டை தேடிக் கண்டுபிடித்து விளக்கை போட குழல் விளக்கின் பால் ஒளியில் வீட்டின் மரத்தூண்கள் மின்னின. அவள் கண்கள் ஆவலாய்த் தேடியது ஊஞ்சலைத் தான். அதைக் கண்டதும் பழைய நினைவுகளில் இதழில் சிரிப்பு மலர்ந்தது.

வானவெளியின் வலது இடது புறங்களில் அறைகள் இருக்க பின்வாயிலுக்கு செல்லும் வழியில் ஒரு ஓரமாக சமையலறையும் அதை ஒட்டி சாப்பிடும் இடமும் இருந்தது.

ஒவ்வொரு இடமாக சுற்றி சுற்றி பார்த்தவள் தனது சூட்கேசை ஒரு அறையில் வைத்துவிட்டு அங்கே கிடந்த துடைப்பத்தை எடுத்து வானவெளியை ஒட்டிய வராண்டாவை பெருக்கிவிட்டு அங்கேயே படுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள்.

அவள் பெற்றோரின் அறைக்குச் சென்றவள் அங்கே தேடிப் பார்த்ததில் இரண்டு போர்வைகள் மட்டும் கிடைக்க ஒன்றை தரையில் விரித்துவிட்டு வீட்டை உட்புறம் தாழிட்டு வந்தாள்.

மின்விளக்கை அணைக்க மீண்டும் வீடு வெண்ணிலவின் ஒளியில் குளிக்கத் தொடங்க கண்ணை மூடியவளுக்கு எட்டு மணிநேர பயண அலுப்பின் காரணமாக தூக்கம் தானாகவே வந்துவிட்டது.

***************

ரகுநந்தன் சிட்னி ஏர்போர்ட்டில் இறங்கிய போது நேரம் மதியமாகிவிட செக்கிங் முடித்துவிட்டு வெளியே வந்தவனின் கண்கள் வருணை தேடி அலைந்தன. அப்போது அவன் கண்களில் பட்டது அந்த காட்சி. ஒரு இளம் ஜோடி அதில் அந்த ஆண் விமானத்துக்காக காத்திருக்க அறிவிப்பு வந்ததும் அந்த பெண்ணின் கண்ணில் கண்ட தவிப்பை இதற்கு முன்னர் தான் பார்த்த நினைவு அவனுக்கு வரவே அவனுக்கு நீரஜாட்சியின் நியாபகம் வந்தது.

செவியில் "நீ எப்போ வருவ நந்து?" என்று அவள் கேட்டது இப்போது அருகில் நின்று கேட்பது போலவே தோன்ற அங்கே அந்த இளம்பெண்ணும் தனக்குரியவனிடம் அதையே கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த இளைஞன் அவளுக்கு சீக்கிரம் வந்துவிடுவேன் என்று சமாதானம் கூறும் போதே விமானத்துக்கான அறிவிப்பு மீண்டும் ஒலிக்க அவள் அவனுக்கு கையசைத்து விடை கொடுத்து அனுப்பும் காட்சியில் ரகுநந்தனுக்கு உள்ளம் உருகிவிட்டது.

கிளம்பும் போது தன்னிடம் எதுவும் பேசாமல் நின்றவளின் முகம் மனக்கண்ணில் தோன்ற போனில் அவளது எண்ணுக்கு அழைத்தான் ரகுநந்தன். ரிங் போய் கொண்டேயிருக்க அவள் போனை எடுக்காமல் இருப்பதைக் கண்டவனின் மனம் மீண்டும் வேதாளமாய் முருங்கைமரம் ஏறிக் கொண்டது.

"அதானே! போனை எடுத்து பேசிட்டாள்னா அவ தலையில வச்சிருக்கிற கிரீடம் இறங்கிப் போயிடுமே" என்ற எரிச்சல் கலந்த முணுமுணுப்புடன் போனை பாக்கெட்டில் வைத்தவனின் கண்ணில் விழுந்தான் வருண்.

"ஹாய்டா" என்றபடி ரகுநந்தனிடம் வந்தவன் அவனை அணைத்துக் கொள்ள அவனுடன் வந்து நின்றாள் ஒரு வெளிநாட்டு நங்கை.

அவளைக் கண்டதும் ரகுநந்தன் அதிர அவன் கையில் அழுத்தி "பிறகு சொல்கிறேன்" என்று சைகை செய்த வருண் பின்னர் சாதாரணமாக "மீட் மை ஒய்ஃப் கேதரின்" என்று அவளை அறிமுகப்படுத்த ரகுநந்தனுக்கு இவளை இவன் திருமணமே செய்து விட்டானா என்ற ஆச்சரியம்.

அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகை பூத்த முகத்துடன் அவளுக்கு கை கொடுத்தவன் "ஹாய்? ஹவ் ஆர் யூ கேட்? டூ யூ ரிமெம்பர் மீ?" என்று கேட்க அவள் மகிழ்ச்சியுடன் தலையாட்டி ஆமென்றாள்.

இருவரின் திருமணமும் திடீரென்று நடந்ததால் யாரையும் அழைக்க இயலவில்லை என்று வருந்திய குரலில் அவள் கூற ரகுநந்தன் பரவாயில்லை என்றபடி அந்த தம்பதிகளுடன் அவர்கள் வீட்டுக்குச் செல்ல காரை நோக்கி பயணித்தான்.

*********

நீரஜாட்சி காலையில் எழுந்தவள் முதல் வேலையாக மோட்டரை போட்டு தண்ணீர்த்தொட்டியை நிரப்பிவிட்டு வீட்டை சுத்தம் செய்ய தொடங்கினாள். போனை சென்னையில் வைத்துவிட்ட விஷயத்தை வனஜாவிடம் கூறிவிட்டதால் அவரே கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து சொல்லிவிட நீரஜாட்சி வீட்டை ஒதுங்க வைத்து முடிக்கும் நேரம் அவரும் மராமத்து வேலை செய்யும் ஆட்களுடன் வந்துவிட்டார்.

வந்தவர் முதல் வேலையாக ஒரு புது போனை அவள் கையில் திணிக்க அவள் திகைப்புடன் வாங்காமல் நிற்கவும் "இந்த போனை வாங்கிக்கோடிம்மா. உன் மாமா போட்டுவிட்ட பணத்துல தான் வாங்கியிருக்கேன். உன் தாத்தா பட்டு இருக்கானோன்னோ உன்னண்ட பேசாம நேத்து நாளே நன்னா போகலைனு நாதன் கிட்ட ஒரே புலம்பலாம். அதான் அவன் இன்னைக்கு காத்தாலே நேக்கு போன் அடிச்சு மாமா முதல் வேலையா என் மருமாளுக்கு ஒரு போனை வாங்கிக் குடுத்துடுங்கோனு ஆர்டர் போட்டுட்டான்" என்று போன் வாங்கி வந்த வரலாறை பேசியபடியே ஆட்களை வேலை செய்ய அனுப்பி வைத்தார்.

பின்னர் நீரஜாட்சி இங்கே தங்குவதற்கு தேவையான பொருட்களை வாங்க காரில் கடைகளுக்கு அழைத்துச் செல்ல அவள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை மட்டும் வாங்கிக் கொண்டாள்.

வீட்டில் அம்மா புலங்கிய பாத்திரங்களை இன்று தான் பரணிலிருந்து இறக்கி சுத்தம் செய்து வைத்திருந்தாள்.

காரில் அமரும் போதே "தாத்தா கிணத்துல நல்லா தண்ணி ஊறிருக்கே, இந்த தடவை இங்கே நல்ல மழையா?" என்று பொது விஷயங்களை விசாரித்தபடி பெரியவரிடம் பேசிக்கொண்டே வந்தவளை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

வயதாகிவிட்டதால் பேரன் பேத்திகளின் அன்பை எதிர்பார்ப்பவர் அவர். ஆனால் அவரது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் அவரிடம் பேசுவதைவிட ஆயிரம் வேலைகள் இருக்கவே அந்த பெரியவரின் ஏக்கம் கனவாகவே போய்விட்டது. இப்போது நீரஜாட்சி வாய் ஓயாமல் பேசுவதைக் கேட்டுவிட்டு "பட்டு சொல்லுவான், எங்க நீரு இருக்கிற இடம் கலகலப்பா இருக்கும்னு" என்று சிலாகிக்க

நீரஜாட்சி "க்க்கும்..நீங்க வேற தாத்தா; பட்டு என் பேச்சுக்கு ஒரு எக்சாம்பிள் சொல்லுவார். என்ன தெரியுமா? நான் பேசுனா வெண்கலக்கடையில யானை புகுந்த மாதிரி இருக்காம்" என்று அவள் கூற கிருஷ்ணமூர்த்தி சத்தம் போட்டு சிரிக்க அவளுக்குமே பெரியவரிடம் பேசுவது மனவருத்தத்துக்கு மருந்து போடுவது போல் இருந்தது.

பேசிக் கொண்டே அவர்கள் வீட்டை அடைய நீரஜாட்சி வேலை செய்பவர்களிடம் "அண்ணா மதியம் சாப்பாட்டுக்கு வேற எங்கேயும் போக வேண்டாம். நானே சமைச்சிடுறேன். நீங்க டென்சன் இல்லாம வேலையை பாருங்க" என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

வெளியே தச்சு வேலைகள் பூச்சு வேலைகள் நடக்க இவ்வளவு நேரம் ஆட்கள் சூழ இருந்தவளின் மனம் இப்போது அவள் தனிமைக்கு சென்றதும் பழைய நினைவுகளை அசை போட தொடங்கியது.

ரகுநந்தன் இப்போது ஆஸ்திரேலியா சென்றிருப்பான் என்று நினைத்தவள் "நான் ஏன் அவனை நினைக்கணும்? அவன் எங்க போனா எனக்கென்ன? அங்கே இருந்து பத்து நாள்ல திரும்புனாலும் சரி, பத்து மாசம் கழிச்சு திரும்புனாலும் சரி; நான் அவன் கூட இனி பேச போறதே இல்ல. நான் என்ன சொல்ல வர்றேனு கூட கேக்காம என்னை வாய்க்கு வந்தபடி பேசிட்டு அவன் இஷ்டத்துக்கு போனான்ல! இனிமே அவன் எனக்கு வேண்டாம்" என்று பொம்மையை வேண்டாம் என்று தூர எறியும் குழந்தை போன்ற மனநிலையில் இருந்தாள் அவள்.

செய்யாத தப்புக்கு தான் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற நியாயமான ஆதங்கம் தான் அவளுடையது. இத்தனைக்கும் அவள் வேண்டுமென்று மறைக்கவில்லை. நேரம் காலம் வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று ஒத்திவைத்ததை அவன் வேண்டுமென்றெ திட்டமிட்டு நடித்தாள் என்று பொருள் கொண்டால் அவள் என்ன தான் செய்ய முடியும்?

இவள் இத்தகைய மனநிலையில் இருக்க அவளது கணவனோ ஆஸ்திரேலியாவில் நண்பனின் திருமணக்கதையை கேட்டுக் கொண்டிருந்தான்.

தொடரும்...

பூங்காற்று 47


Quote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 3 months ago
Posts: 87
12/02/2020 8:37 am  

அருமையான பதிவு சிஸ்


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 4 months ago
Posts: 333
12/02/2020 8:54 am  

@Vgl தேங்க்யூ சிஸ் 😍 😍 

 


ReplyQuote
Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 4 months ago
Posts: 68
12/02/2020 9:19 am  

நீரு அம்மா ஊருக்கு போய்டலா, அங்க யாரும் இல்லாம இருக்கிறதுக்கு, அம்மாவீட்ல பராமரிப்பு பணிபாத்தமாதிரி இருக்கும்  பழைய நினைவுகளுட வாழ்ந்தமாதிரியும் இருக்கும், 👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 4 months ago
Posts: 333
12/02/2020 9:55 am  

@jothiru ama akka 😊 😊 

 


ReplyQuote
Nithyamariyappan
 Nithyamariyappan
(@Nithyamariyappan)
Guest
Joined: 3 months ago
Posts: 30
12/02/2020 9:57 am  

hi Dr nice update but rendu perum remba sanda poda vidatheenga 🙂 


ReplyQuote
(@nithya-mariappan)
Member Moderator
Joined: 4 months ago
Posts: 333
12/02/2020 1:31 pm  

அடுத்த யூடியில சேர்ந்துடுவாங்க சிஸ் 😛 😛 


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: