Forum

பூங்காற்று 49  

  RSS

(@nithya-mariappan)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 321
14/02/2020 8:02 am  

ரகுநந்தன் சாப்பாடு எடுத்து வைக்குமாறு சாதாரணமாக கூறிவிட நீரஜாட்சி எரிச்சலுடன் "நான் உன்னும் உன்னோட சர்வெண்ட் இல்ல. வேணும்னா நீயே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கோ" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ரகுநந்தன் தானே சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு "நீ சாப்பிடலையா நீருகுட்டி?" என்று கேட்க

அவள் "ம்ம்..அதான் எனக்கும் சேர்த்து நீயே சாப்பிட்டுட்டியே" என்று நொடித்துக் கொண்டவாறு பாத்திரங்களை உள்ளே எடுத்துச் சென்றாள். அவன் திடீரென்று வந்து நிற்பான் என்று அறியாததால் அவள் எப்போதும் போல தனக்கு மட்டுமே சமைத்திருக்க எவ்வளவு தான் அவன் மீது கோபம் என்றாலும் தனக்காக இவ்வளவு தூரம் வந்திருப்பவனை பசியோடு விட அவளுக்கு மனமில்லை. எனவே தனக்கு வைத்திருந்ததை அவனுக்கு கொடுத்துவிட்டு பாலை காய்ச்சிக் குடித்தவள்  மொபைலும் கையுமாக வராண்டாவில் அமர்ந்துவிட  அவள் சாப்பிடவில்லை என்பதை அறியாத ரகுநந்தன் அவளைப் பார்த்தபடியே ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான்.

அலுவலகத்தில் வேலை பாக்கியிருப்பதால்  தனது புதிய செகரட்டரிக்கு போன் செய்து  தான் வருவதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகளை கட்டளையிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

நீரஜாட்சி அதை ஓரக்கண்ணால் கவனித்தபடியே பட்டாபிராமனுக்கு போன் செய்தவள் "ஹலோ பட்டு உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே" என்று இழுக்க ஆரம்பிக்க ரகுநந்தனுக்கு உள்ளுக்குள் அபாயசங்கு ஊத ஆரம்பித்தது. அவர் மறுமுனையில் என்ன சொன்னாரோ அவள் இவனை பார்வையால் துளைத்தபடியே "எல்லாம் உங்க இளைய பேரனை பத்தி தான்" என்று மீண்டும் ராகத்துடன் கூற அவள் தன்னை பற்றி குறை தான் சொல்ல போகிறாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

"நந்து இவ இப்போ தாத்தா கிட்ட உன்னை பத்தி போட்டுக் குடுக்கப் போறாடா. அவரை பழையபடி ஹிட்லர் ஆக்காம ஓய மாட்டா போல" என்று பதறியபடியே அவளிடமிருந்து போனை பிடுங்க முயல

அவளோ அதற்கு முன்னரே போனில் சத்தமாக "பட்டு அவன் என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்கான். நான் அவன் கூட ஆஸ்திரேலியா வர்றேனு சொன்னப்போ வரக் கூடாதுனு சொல்லி என்னை சென்னையிலயே விட்டுட்டு போனான்ல, அதுக்கு அவனை  என்னன்னு கேக்க மாட்டிங்களா? இப்போ தஞ்சாவூருக்கு வந்ததுல இருந்து என்னை வம்பு இழுத்துட்டே இருக்கான்" என்று கத்திவிட ரகுநந்தன் பட்டாபிராமன் திட்டுகளுக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.

மறுமுனையில் பட்டாபிராமன் பேத்தியிடம் "அந்த படவா ராஸ்கல் கிட்ட போனை குடு. நான் அவன் கிட்ட பேசறேன்" என்று கூற நீரஜாட்சி மனதிற்குள் "மாட்டினியாடா மகனே" என்று எண்ணியபடி போனை அவனிடம் நீட்ட அவனோ பரிதாபமாக பார்த்தபடி போனை காதில் வைத்தான்.

"ஹலோ தாத்தா" என்று தடுமாறியபடியே பேச ஆரம்பிக்க அவனது தாத்தா அவன் எதிர்பார்த்தபடியே பொறிந்து தள்ள

அவனோ "தாத்தா மன்னிச்சுக்கோங்கோ..இனி இப்பிடி நடக்காது...பிளீஸ் தாத்தா அப்பிடியெல்லாம் சொல்லாதேள்...பிராமிஸ்  தாத்தா" என்று கெஞ்ச நீரஜாட்சி சுவரில் சாய்ந்து நின்றபடி அதை ரசிக்க ஆரம்பித்தாள்.

பட்டாபிராமன் "நீ இப்பிடி எதாச்சும் பண்ணி வைப்பேனு தான் நோக்கு என் பேத்தியை கல்யாணம் செஞ்சு வைக்க நான் தயங்குனேன். அப்போ என்ன பேச்சுலாம் பேசுன நீ?" என்று அவனை விலாச ஆரம்பிக்க அவன் எப்படியோ அவரை சமாதானம் செய்துவிட்டு போனை வைத்தான்.

தான் திட்டு வாங்குவதை ரசித்துக் கொண்டிருந்த மனைவியின் கையில் போனை திணித்தவன் "இப்போ உனக்கு குளுகுளுனு இருக்குமே" என்று முறைக்க

அவளோ "என்னமோ சொன்னியே இது ஒன்னும் ஸ்ரீனிவாசவிலாசம் இல்ல, உன்னோட மாமியார் வீடுனு! உன் மாமியார் வீடோ என் மாமியார் வீடோ எங்கேயும் என் பேச்சுக்கு தனி பவர் தான். இனிமே நீ என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்குவ?" என்று அமர்த்தலாக கூறிவிட்டு கிளம்பினாள்.

ரகுநந்தன் இவளை சமாதானம் செய்யும் வழி அறியாதவனாய் திகைத்து நின்றான்.

*********

ஹர்சவர்தன் கிருஷ்ணஜாட்சியுடன்  ஷாப்பிங் வந்திருந்தான். அவள் இண்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து எது மலிவான கடை என்று தேடியதில்  ஹாமர்ஸ்மித்தில் உள்ள ப்ரிமார்க் கடைக்கு செல்வோம் என்று முடிவெடுத்ததால் அவளை அங்கே அழைத்து வந்திருந்தான்.

அவள் ஆடைகளை பார்வையிடுவதில் மும்முரமாகி விட அவன் வீட்டினருக்கு அழைத்து பேச ஆரம்பித்திருந்தான். அனைவரின் நலனையும் விசாரித்துவிட்டு மனைவியை தேட அவளோ அவனுக்கு ஷேர்ட் ஒன்றை எடுத்துவிட்டு இந்த நிறம் அவனுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருக்க அவளிடம் வந்தவன் "ஷேர்ட்டை கையில வச்சுட்டு உனக்கு என்ன யோசனை?" என்று கேட்க

"இந்த ஷேர்ட் உங்களுக்கு பிடிச்சிருக்கா ஹர்சா? எனக்கு இது உங்களுக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு" என்று புருவமுடிச்சுடன் கேட்க

அவன் "உனக்கே நல்லா இருக்கும்னு தோணுனதுக்கு அப்புறம் எதாச்சும் அப்பீல் இருக்கா என்ன? எனக்கு இது டபுள் ஓகே" என்று கூறிவிட அவள் மகிழ்ச்சியுடன் அதையே தேர்ந்தெடுத்தாள்.

மொத்தக் குடும்பத்துக்கும் வாங்கியவள் மறக்காமல் கரோலினுக்கு அவளுக்கு பிடித்த ஃப்ளாரல் டிசைனில் அவள் எப்போதும் அணியும் கவுன்களை வாங்கிவிட்டு கர்மசிரத்தையாக அதை புகைப்படம் எடுத்து வாட்சப்பில் அவளுக்கு அனுப்பியும் வைத்தாள்.

ஷாப்பிங்கை முடித்தவர்கள் ஊரை சுற்றி பார்த்துவிட்டு வீடு திரும்ப நீண்ட நேரமாகிவிட்டது.  வீடு திரும்பி சில மணி நேரங்களில் கிருஷ்ணஜாட்சிக்கு ரகுநந்தனிடம் இருந்து போன் வரவே ஹர்சவர்தன் தான் போனை எடுத்தான்.

போனை எடுத்தவன் "என்னடா கிருஷ்ணாக்கு கால் பண்ணிருக்க? நீரு கூட எதும் பிரச்சனையா?" என்று கேட்க

ரகுநந்தன் "ஏன்டா நான் கால் பண்ணுனாலே இதுக்கு தானு எப்பிடி கண்டுபிடிக்கற நீ?" என்று ஆச்சரியத்துடன் கேட்க

ஹர்சவர்தன் "கழுதை கெட்டா குட்டிசுவர் தானே! உன்னோட லவ்குரு அவ தான்னு அவ என்னண்ட எப்போவோ சொல்லிட்டா" என்று கேலி செய்ய அதற்குள் கிருஷ்ணஜாட்சியும் உடை மாற்றிவிட்டு வந்துவிட போனை அவள் வசம் ஒப்படைத்தவன் "நந்துக்கும் நீருக்கும் பிரச்சனையானு யோசிச்சல்ல,. கவலைப்படாதே! பிரச்சனையே தான். அவன் தான் லைன்ல இருக்கான். எதாச்சும் ஐடியா குடு என் தம்பிக்கு. அவன் குரலை கேக்கவே ரொம்ப பாவமா இருக்குடி " என்று சொல்ல அவளும் சரியென்று தலையாட்டிவிட்டு போனை காதில் வைத்தாள்.

அவள் வைத்தது தான் தாமதம், ரகுநந்தன் அவர்கள் சண்டையை ஆரம்பத்திலிருந்து இப்போது வரை விளக்கிவிட்டு "இதுக்கு நீங்க தான் ஒரு சொல்யூசன் குடுக்கணும் மன்னி" என்று முடித்துவிட்டு மூச்சு வாங்கினான்.

கிருஷ்ணஜாட்சி அவன் கூறிய விஷயத்தில் அயர்ந்து போயிருந்தவள் "ஒரு சின்ன விஷயத்துக்கு ரெண்டு பேரும் பேசி பேசி சண்டையை பெருசா ஆக்கிட்டிங்களே" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்த

ரகுநந்தன் "ஆமா மன்னி! நான் பண்ணுனது தப்பு தான்" என்று கூற அவனை இடைமறித்தவள் "நீரு மேலேயும் தப்பு இருக்கு அம்மாஞ்சி. ஆனா ஒரு விஷயம் மட்டும் என்னால சொல்ல முடியும். அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதுல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்" என்று கூறி அவன் வயிற்றில் பாலை வார்த்தாள்.

அவளே அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் கூற ரகுநந்தன் "இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? ஏன்னா பாருங்க, உங்க தங்கை ஒரு வினோத பிறவி. நான் உன்னை பார்த்து பரிதாபப்பட்டேனே தவிர எனக்கு உன் மேல எந்த அபிப்பிராயமும் இல்லைனு சொல்லிட்டா நான் என்ன பண்ணுறது?" என்று  கேட்க

கிருஷ்ணஜாட்சி "ம்ஹூம்! இதனால உங்க மேல அவளுக்கு இருக்கிற கோவம் சுத்தமா காணாம போயிடும். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? என்னோட நீரு பார்க்க தான் ரொம்ப பிடிவாதக்காரியா தெரிவா. ஆனா அவளால யாராவது கண்ணீர் விட்டா தாங்க முடியாது.  மாமி மேல அவளுக்கு இருந்த கோவம் போனதே அவங்க ஃபீல் பண்ணுனதை அவ கண்ணால பார்த்ததாலே தான். சோ உங்க மேல இருக்க கோவம் போக இதை விட பெஸ்ட் ஐடியா இருக்க முடியாது" என்று உறுதியாக கூற ரகுநந்தனுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்து போனை வைத்தான்.

அவன் போனை வைத்ததும் கிருஷ்ணஜாட்சி ஹர்சவர்தனை தேட அவனோ சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருக்க தீய்ந்து போன வாடை நாசியை துளைக்க "ஹர்சா! எதை தீய வச்சிங்க இப்போ?" என்ற கூவலுடன் சமையலறையை நோக்கி ஓடினாள் அவனது மனைவி.

****************

நீரஜாட்சி தனக்கு எதிரில் அமர்ந்து ஏதோ ஜோக் அடித்து சிரித்து கொண்டிருந்த விக்கியையும் ரகுநந்தனையும் முறைத்தபடி அமர்ந்திருந்தாள்.

விக்கி அவளிடம் திரும்பியவன் "நீருக்கா நந்து மாமா நல்லா காமெடியா பேசுறாரு. உனக்கு வீட்டுல போர் அடிக்கவே செய்யாது" என்று பெருமிதமாக கூற

நீரஜாட்சி கேலி கலந்த குத்தல் குரலில் "அஹான்! உண்மை தான்., உங்க மாமாவை மாதிரி பேசறதுக்கு ஒருத்தன் பிறந்து தான் வரணும்" என்று கூறிவிட்டு இரவுணவு தயாரிக்க சமையலறைக்குள் சென்று தஞ்சமடைந்துக் கொள்ள ரகுநந்தன் பேச்சை மாற்றியபடி விக்கியிடம் நாளை கிரிக்கெட் மேட்ச் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.

அந்த சிறுவனும் இவனது திட்டத்தை அறியாமல் எப்போதும் போல நீரஜாட்சி தான் பேட்டிங் என்று கூறிவிட ரகுநந்தன் மனதிற்குள் மகிழ்ந்தவன் விக்கி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்ப அவனை வழியனுப்பிவிட்டு வந்தான்.

வராண்டாவுக்கு வந்தவனின் பார்வையில் பட்டது நீரஜாட்சி கோபத்தில் தூக்கியெறிந்த கிரிக்கெட் மட்டை. அதை கையில் எடுத்து பார்த்தவன் அதன் கீழ்ப்பாகம் அவள் வீசிய வேகத்தில் கீறியிருப்பதைப் பார்த்து விட்டு யோசனையுடன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாமல் இரவுணவை முடித்துவிட நீரஜாட்சி வழக்கம் போல வெளிப்புற கேட்டை பூட்டிவிட்டு வரண்டாவின் கதவையும் அடைத்துவிட்டு வீட்டினுள் வந்தாள். ரகுநந்தன் அவர்கள் இருந்த அறையில் ஒரே ஒரு மரக்கட்டில் மட்டும் கிடக்க போர்வையோ தலையணையோ இல்லாதிருப்பதைக் கண்டு எப்படி தூங்குவது என்று விழித்தபடி நிற்க அவளோ சாதாரணமாக அறைக்குள் வந்தவள் அலமாரியில் இருந்த இரண்டு போர்வைகளையும் எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தாள்.

அவள் வெளியே செல்லும் முன் கரம் பற்றி நிறுத்திய ரகுநந்தன் "எங்கே போற நீரு? " என்று கேட்க

நீரஜாட்சி "வெளியே போய் தூங்க போறேன்" என்றாள் சட்டென்று.

"ஏன் வெளியே போற? இங்கேயே தூங்க வேண்டியது தானே" என்றவனை முறைத்தவள் "எனக்கு இங்கே தூங்க பிடிக்கல. உன்னோட ஒரே ரூம்ல இருக்கிறது எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. நான் போய் காத்தாட தூங்க போறேன்" என்றாள் பிடிவாதமாக.

இதற்கு மேல் அவள் கேட்க மாட்டாள் என்றவன் அவளை வற்புறுத்த விரும்பாமல் "சரி இதுக்கு அப்புறம் உன் இஷ்டம். ஆனா எனக்கும் ஒரு போர்வையை குடுத்துட்டு போ" என்று போர்வைக்கு கையை நீட்ட

அவளோ "ரெண்டும் எனக்கு வேணும். நான் தான் வெளியே குளிர்ல படுக்க போறேன். நீ வுட் காட்ல தான படுக்க போற. உனக்கு பெட்ஷீட் ஒன்னும் தேவைப்படாது" என்று சொல்லிவிட்டு வானவெளிக்கு பக்கவாட்டு வராண்டாவில் ஒரு போர்வையை விரித்தாள். மற்றொரு போர்வையை தலையிலிருந்து கால் வரை மூடிக் கொண்டவளை அறை வாயிலில் நின்று பார்த்தவன் "இந்த எகிப்து மம்மி கெட்டப்புல தூங்க தான் இன்னொரு போர்வயா?" என்று கேலி செய்துவிட்டு வெறும் கட்டிலில் படுத்தான்.

அவனுக்கு வெறும் கட்டிலில் தூங்கி பழக்கம் இல்லாததால் உருண்டு புரண்டு படுத்து பார்த்தும் உறக்கம் வராமல் போகவே எழுந்து அமர்ந்தான்.

"என்னடா இது? தூக்கமே வர மாட்டேங்குது?" என்று அந்த அறையிலிருந்து வெளியேறியவன்  வராண்டாவில் படுத்திருந்த நீரஜாட்சியின் வரிவடிவம் வானவெளி வழியே கசிந்த நிலவொளியில் தெரிய அவளிடம் சென்றான்.

"இங்க மனுஷனுக்கு போர்வை இல்லாம தூக்கம் வர மாட்டேங்குது..இதுல இவளுக்கு மட்டும் ரெண்டு போர்வையா?" என்று கூறியபடி அவளது போர்வையை வேகமாக இழுக்க நீரஜாட்சி அடித்து போட்டது போல தூங்கிக் கொண்டிருந்ததால் அவளுக்கு விழிப்பு வரவில்லை.

போர்வையை எடுத்துவிட்டு  அறைக்குள் செல்ல அடியெடுத்து வைத்தவன் திடீரென்று ஏதோ எண்ணம் உதிக்க "ச்சே ச்சே! இப்பிடி பண்ணுறது பாவம் நந்து. தூங்கிட்டிருந்தவ கிட்ட இருந்து போர்வையை எடுக்கிறது தப்பு"  என்றபடி அவளிடம் மீண்டும் சென்றான்.

அவள் அருகில் அமர்ந்து நிலவொளியில் மற்றொரு பால்நிலவாக ஒளிர்ந்த முகத்தை வருடிக் கொடுத்தவன் "தூங்கறச்ச பார்க்க குழந்தையாட்டம் இருக்க இந்த முகத்துலயா கோவம் தாண்டவம் ஆடறது? என் செல்லம்" என்று கன்னத்தை கிள்ளி கொஞ்சியவன் "ஏன் நந்து இங்கே இவ்ளோ விசாலமா இடம் இருக்கறச்ச ஏன் போய் அந்த ரூம்ல அடைஞ்சிக்கணும்? விரிச்சிருக்கிற பெட்ஷீட் கூட நீளமா தான் இருக்கு. பேசாம இங்கேயே நீருகுட்டி பக்கத்துல தூங்கிட வேண்டியது தான்" என்றபடி போர்வையில் படுத்தவன் கையில் வைத்திருந்த போர்வையால் இருவரையும் மூடிக் கொண்டான்.

கண்ணை மூடி தூங்க முயல நீரஜாட்சி தூக்கத்தில் திரும்ப முயல அவன் "இவ இப்போ முழிச்சானா இன்னைக்கு விடிய விடிய சண்டை தான் நடக்கும்" என்று பதறியவனாய் அவள் தலையை தனது புஜங்களில் வைத்துக் கொண்டான். அவளும் தலையணை போல அதில் முகம் பதித்து தூங்க ஆரம்பித்து விட அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

தன் அருகில் உறங்கும் மனைவியை பார்த்து குறுஞ்சிரிப்புடன் அவள் தலையில் முத்தமிட்டவன் வானவெளி வழியே தெரியும் நிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்தபடி கண்ணயர ஆரம்பிக்க சிறிது நேரத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றான்.

 

தொடரும்....

 

பூங்காற்று 50


Jothiru
(@jothiru)
Trusted Member
Joined: 2 months ago
Posts: 56
14/02/2020 9:31 am  

நிறைவான பதிவு, ரகு நீருவ சமாதானம் செய்ய கிருஷ்ணா கிட்ட idea கேட்கிறான், கிருஷ்ணா சொன்ன ideala நீருவ சமாதான படுத்திடுவானா 👌👌👌👍👍👍💕💕💕💕🌹🌹🌹🌹


ReplyQuote
Nithyamariyappan
 Nithyamariyappan
(@Nithyamariyappan)
Guest
Joined: 1 month ago
Posts: 30
14/02/2020 11:09 am  

😍 happy update


ReplyQuote
 Vgl
(@Vgl)
Guest
Joined: 2 months ago
Posts: 81
14/02/2020 6:39 pm  

அருமையான பதிவு


ReplyQuote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: