பூங்காற்று 51 (Prefinal)  

  RSS
(@nithya-mariappan)
Member Moderator

அன்று இரவுணவை முடித்துவிட்டு ரகுநந்தனிடம் காயம் வலிக்கிறதா என்று கேட்டாள் நீரஜாட்சி. அவனோ வலி குறைந்துவிட்டதாக கூற அவனுக்கு உள் அறையில் விரித்து தூங்கச் செல்லுமாறு சொல்லவும் அவனோ தான் வராண்டாவில் காற்றோட்டமாக உறங்க விரும்புவதாக கூறிவிட்டான்.

நீரஜாட்சி போர்வையை வானவெளியின் கீழே விரித்தவள் "நீ தூங்கு நந்து" என்று கூறிவிட்டு நகர முற்பட

அவள் கையை பற்றி நிறுத்தியவன் "ரெண்டு பேரும் இங்கேயே தூங்குவோமா? பிளீஸ்" என்று கூற நீரஜாட்சிக்கு அவனது குரலில் இருந்த ஏதோ ஒரு உணர்வு அவளை மறுக்காதே என்று உந்துவது போலத் தோன்ற சரியென்று ஒத்துக் கொண்டு கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

வானவெளியின் வழியே வந்த நிலவொளியில் தன் மார்பில் சாய்ந்திருக்கும் மனைவியின் முகத்தை பார்த்தவன் "நீரு இந்த தருணம் ரொம்ப அழகா இருக்குல்ல..அழகா குட்டி குட்டி நட்சத்திரத்தோட மின்னுற வானம், அதுக்கு நடுவுல அதோட கருப்பு நிறத்தை முடிஞ்சளவுக்கு விரட்ட நினைக்கிற நிலா வெளிச்சம், அந்த நிலா வெளிச்சத்துல தங்கம் மாதிரி மின்னுற என்னோட நீருகுட்டி...இதை நினைச்சாலே மனசு நிறைஞ்சு போயிடுச்சு" என்றபடி அவளது கரத்தை பற்றி முத்தமிட

நீரஜாட்சி "வாவ்! நந்து நீ கவிஞனா மாறிட்டு வர்ற போ" என்று சிலாகிக்க

"இதுலாம் உனக்கு கவிதையா தோணறதா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டவனிடம் நீரஜாட்சி "எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் நந்து...நாலு லைன் ரைமிங்கா வந்தாலே என்னை பொறுத்தவரைக்கும் கவிதை தான்" என்று கூற அதைக் கேட்டபடியே ரகுநந்தன் மனைவியின் மமுகத்தில் விளையாடிய குழல் கற்றையை ஒதுக்கி விட்டான்.

"பின்னே,  இப்பிடி ஒரு ரம்மியமான நேரத்துல மனசுக்கு பிடிச்சவளோட இருக்கிற ஒவ்வொருத்தனும் ஒரு மினி கவிஞனா மாறிடுவான்..இப்போ எனக்கு கூட ஒரு கவிதை சொல்லணும்னு தோணறது.." என்று கூறிவிட்டு மனைவியை காதலுடன் பார்க்க

அவளோ "போதும்டா! ஊருக்குள்ள எல்லாரும் நானும் கவிஞர் தான்னு சொல்லி பண்ணுற டார்ச்சரை தாங்க முடியலை..அதுல நீ மட்டும் தான் பாக்கி. பிளீஸ் தூங்குற நேரத்துல கவிதை அது இதுனு சொல்லி என்னை குழப்பி விட்டுடாதே நந்து" என்று தனது காதைப் பொத்தியவாறே கேலி செய்ய அவன் நகைக்க தொடங்கினான்.

"பயப்படாதே நீருகுட்டி! நமக்கு சொந்தமா கவிதை சொல்ல வராது. எல்லாம் படிச்சு தெரிஞ்சுகிட்ட கவிதைகள் தான். சோ நீ கவலைப்படாம கேக்கலாம்" என்று அவன் உறுதியளித்த பின் நீரஜாட்சியும் கேட்பதற்கு ஒத்துக்கொண்டாள்.

ரகுநந்தன் தனது மனதில் நிறைந்திருக்கும் மனவியை காதலுடன் பார்த்தபடியே நெற்றியில் முத்தமிட்டவன் மெதுவாக

"காதலடி நீ எனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ எனக்கு, வித்தையடி நானுனக்கு"

என்று ரசனையுடன் காதலை குழைத்து பாரதியின் வரிகளை அவள் காதில் முணுமுணுக்க நீரஜாட்சிக்கும் அந்த அழகிய பொழுதில் அவனது வரிகள் மனதில் இன்பஊற்றை பொங்க செய்ய அடுத்த வரிகளுக்காக அவனது கழுத்தை கட்டியபடி உம் கொட்டினாள்.

"போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!"

தன்னவனின் காதல் நிறைந்த குரலில் கண்மூடியவள் நீண்டநாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கத் தொடங்கினாள். அவள் தூங்கிவிட்டதை அறிந்தவன் ஒரு மென்நகையுடன் அவளது முன்நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அவளை அணைத்தபடி தானும் உறங்க முயன்றான்.

சிறிது நேரத்தில் நித்திரை அவனது விழிகளிலும் குடிகொள்ள மனைவியை அணைத்தபடி உறங்கும் ரகுநந்தனையும், அவனது கழுத்தை கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறங்கும் நீரஜாட்சியையும் வானவெளியைக் கடந்து வரும் நிலவொளி நனைக்க நட்சத்திரங்கள் அந்த ஜோடியைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டன.

**************

ரீஜெண்ட் பார்க், லிட்டில் வெனிஸ்...

ரீஜெண்ட் கால்வாயும், கிராண்ட் யூனியன் கால்வாயும் சந்திக்கும் இடம். படகுசவாரி, உணவகங்கள், பூங்காக்கள் என்று அங்கு சுற்றி பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்க கிருஷ்ணஜாட்சியும் ஹர்சவர்தனும் கைகோர்த்தபடி ரீஜெண்ட் கால்வாயின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தனர்.

போகும் வழியில் இருந்த அழகிய கட்டிடங்கள், கால்வாயின் நடுவே கட்டப்பட்ட சிறுபாலங்கள் என்று அதை ரசிப்பதற்காகவே அந்த நடைப்பயணத்தை விரும்புவர் சிலர். கால்நடையாக நடந்து இருவரும் ரீஜெண்ட் பார்க்கை அடைந்தனர்.

ரீஜெண்ட் பார்க் ஏராளமான மலர்த்தோட்டங்கள், குழந்தை விளையாடுவதற்கான பகுதி, படகுசவாரி மற்றும் லண்டன் மிருகக்காட்சி சாலை என்று பரந்து விரிந்த ஒரு பகுதி.

அதில் குயின் மேரிஸ் ரோஸ் கார்டன் என்ற தோட்டத்தில் நின்று கொண்டிருந்தனர் கிருஷ்ணஜாட்சியும் ஹர்சவர்தனும். சுற்றிலும் இருந்த ரோஜாமலர்களின் வாசம் நாசியை நிறைக்க கிட்டத்தட்ட மாலை நேரம் வேறு நெருங்கியிருக்க சிறு குழந்தைகளை ப்ராமில் வைத்து தள்ளியபடி ஆங்காங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்களுடன் அந்த இடம் பார்த்த உடனே மனதைக் கொள்ளை கொண்டது.

கிருஷ்ணஜாட்சி அங்கே ரோஸ் நிற கன்னங்கள், நீல நிற கண்களுடன் இருந்த ஒரு  குழந்தையை ஹர்சவர்தனிடம் சுட்டிக்காட்டி "ஹர்சா அந்த குழந்தை ரொம்ப அழகா இருக்குல்ல. இந்த குட்டி குட்டி ரோஜாப்பூவுக்கு  நடுவுல பெரிய ரோஸ் பொக்கே மாதிரி" என்று கூற

ஹர்சவர்தனும் "ம்ம்..ரொம்ப அழகா இருக்கு" என்று ரசனையுடன் அந்த குழந்தையை பார்த்தபடி சொன்னவன் சட்டென்று தன் தோளில் சாய்ந்தபடி நின்றவளிடம் "கிருஷ்ணா நம்மளோட பேபி கூட இப்பிடி தானே அழகா இருக்கும்?" என்று கண்ணில் ஆவல் மின்ன கேட்க

கிருஷ்ணஜாட்சி யோசிப்பவளை போல பாவனை செய்தவள் பின்னர் "அதுக்கு கொஞ்சம் சான்ஸ் கம்மி தான்! என்னை மாதிரி பிறந்தா பார்க்க அழகா இருக்கும். சப்போஸ் உங்களாட்டம் பிறந்துட்டா என்ன பண்ணுறது?" என்று கேலி செய்ய

ஹர்சவர்தன் "அஹான்! என்னாட்டம் பிறந்துச்சுனா பேரழகா இருக்கும். உனக்கு என்னோட அருமை புரியலை" என்று அமர்த்தலாக மொழியும் போதே இரண்டு சிறுமிகள் ஓடி பிடித்து விளையாடியவர்கள் கிருஷ்ணஜாட்சியின் மீது பூங்கொத்து மோதியது போல இடித்துவிட்டு நின்றனர்.

அவர்கள் விழுந்து விடாமல் பிடித்தவள் முழந்தாளிட்டு "ஏன் இவ்ளோ வேகமா ஓடுறிங்க? விழுந்தா அடி பட்டுடும்ல" என்று கொஞ்சலுடன் அழகாக கேட்க அந்த சிறுமிகள் கிளுக்கி சிரித்தனர்.

அவர்களின் ஒருத்தி "யூ ஆர் சோ கார்ஜியஸ்...ம்ம்ம்..." என்று கூறிவிட்டு நாடியில் ஆட்காட்டிவிரலால் தட்டியபடி யோசிக்க மற்றொருத்தி "லைக் அ ஃபேரி டேல் பிரின்சஸ்" என்று கூற யோசித்தவளும் அதை ஒத்துக் கொண்டாள்.

கிருஷ்ணஜாட்சி அந்த சிறுமியரின் பாராட்டில் முகம் சிவந்தவள் இருவரின் கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு "தேங்க்ஸ் அ லாட் கியூட்டிஸ்" என்று கூற அதற்குள் அந்த சிறுமிகளின் தாய் அவர்களை அழைக்கவே அவர்கள் அவளுக்கு டாட்டா காண்பித்துவிட்டு ஓடினர்.

அவர்கள் சென்றதும் முழந்தாளில் இருந்து எழுந்தவள் ஹர்சவர்தனிடம் "இப்போ சொல்லுங்க! யாரு அழகு?" என்று புருவம் உயர்த்தி கேட்க

அவன் "சரிம்மா தாயே! நீ தான் அழகி, இல்ல இல்ல , பேரழகி! போதுமா?" என்று கேட்க அவள் சந்தோசமாக தலையாட்டியபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஹர்சவர்தன் காதலுடன் அவள் கரங்களை பற்றிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க கிருஷ்ணஜாட்சி "என்ன பண்ணுறிங்க ஹர்சா? பப்ளிக் பிளேஸ்ல..." என்று விலகிச் செல்ல முயல அவனோ "ஹலோ மேடம்..இது லண்டன், இந்தியா இல்ல" என்றபடி அவளை இழுத்துக் கொண்டு நடக்க தொடங்க அவன் மனைவியும் அவனுடன் கரங்களை கோர்த்தபடி நடந்தாள்.

**************

வானவெளியின் வழியே வந்த வெளிச்சம் மூடியிருக்கும் கண்ணை உறுத்த மெதுவாக கண்களை திறந்தாள் நீரஜாட்சி. கண் திறந்த உடனே காட்சி தந்தது என்னவோ அவளது கணவனின் அழகிய கம்பீரமான வதனம் தான். சிறிது நேரம் இமைக்காமல் அவனையே பார்த்தவள் அவன் கன்னத்தில் கை வைத்து கோலம் போட்டபடி "முதல்ல இந்த தாடியை ஷேவ் பண்ண சொல்லணும். இன்னும் கொஞ்சம் வளர்ந்துச்சுனா பார்க்க பூச்சாண்டியாட்டம் இருப்பான் இவன்" என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் கன்னத்தை கிள்ளினாள் அவள்.

ரகுநந்தன் நல்ல தூக்கத்தில் இருந்ததாலும் அவள் மெதுவாக கிள்ளியதாலும் அவனது உறக்கம் கலையாமல் இருக்கவே அவன் கன்னத்தை பிடித்தபடி "என் செல்லகுட்டி! உன்னை ரொம்ப திட்டிட்டேன்ல..ஐ அம் ரியலி சாரி. நீ எவ்ளோ நல்லவன்! உன் அளவுக்கு எனக்கு பெரியமனசு இல்லை தான். ஆனா நானும் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன். இதை நீ முழிச்சிட்டிருக்கச்ச சொல்லணும்னு தான் ஆசை. ஆனா நீ எதாச்சும் பேசுனா எனக்கு உன்னை கலாய்க்க தான் தோணுதே தவிர காதலை சொல்ல தோணலை" என்று குழந்தை போல் மனதில் பட்டதை உறக்கத்தில் இருப்பவனிடம் சொல்லிவிட்டு அவனது நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு எழுந்தவள் போர்வையை அவனுக்கு நன்றாக மூடிவிட்டு சென்றாள்.

அவள் முகம் கழுவி பல் துளக்கிவிட்டு இருவருக்கும் காபியை போடத் துவங்க ரகுநந்தன் அவள் உருட்டிய பாத்திரங்களின் சத்தத்தில் விழித்துக் கொண்டான்.  விழித்தவன் அவளைத் தேட சமையலறையிலிருந்து வந்த காபியின் வாசம் அவள் அங்கே தான் இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்ல பூனை போல் மெதுவாக சென்றவன் அவளை பின்னே நின்று இடையோடு அணைத்துக் கொள்ள நீரஜாட்சி அதிர்ச்சியில் "அம்மா...." என்று கத்தவும்

"நான் தான் நீருகுட்டி" என்றவனின் முணுமுணுப்பு காதில் விழ கொஞ்சம் அமைதியானாள்.

தன்னை அணைத்தபடி நின்றவனின் கன்னத்து ரோமங்கள் அவளது கன்னத்தை இரக்கமின்றி இம்சிக்கவே  "நந்து நீ என்ன பண்ணுவியோ தெரியாது,  இன்னைக்கு நீ கிளீன் ஷேவ் பண்ணுற" என்று கட்டளையிட்டுவிட்டு இடையை வளைத்திருந்த அவனது கரங்களை விலக்கிவிட்டாள்.

ரகுநந்தன் "முடியாது நீருகுட்டி! இந்த சண்டை சீக்கிரமா ஒரு முடிவுக்கு வந்தா நான் திருப்பதிக்கு முடி காணிக்கை குடுக்கறதா வேண்டுதல் வச்சிருந்தேன். அது வரைக்கும் நோ மோர் ஷேவிங்" என்று தீவிரமான குரலில் கூற நீரஜாட்சி அவன் மொட்டை தலையுடன் இருந்தால் எப்படி இருப்பான் என்பதை கற்பனையில் எண்ணி பார்த்தவள் அதில் வந்த உருவத்தைக் கண்டதும் பக்கென்று சிரித்துவிட்டாள்.

ரகுநந்தனுக்கு அவள் எதை நினைத்து சிரிப்பாள் என்று புரிந்துவிட்டதால் "ரொம்ப சிரிக்காதடி! பல்லு சுளுக்கிக்க போறது. பகவான் விஷயத்துல இப்பிடியெல்லாம் கிண்டல், கேலி பண்ணக்கூடாது" என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டு பற்பசையை எடுத்துவிட்டு கிணற்றடிக்கு சென்றுவிட்டான்.

பல் துளக்கிவிட்டு வந்தவனின் கையில் காபி தம்ளரை திணித்தவள் "மொட்டை மண்டையா இருந்தாலும் நீ கொஞ்சம் ஸ்மார்ட்டா தான் இருக்கே நந்து.. சீக்கிரமா ரெண்டு பேருமா சேர்ந்து திருப்பதிக்கு போயிட்டு வந்துடுவோம்" என்று கேலியுடன் ஆரம்பித்து வேண்டுதலை முடிக்கும் தீவிரத்துடன் கூறினாள்.

அவன் சரியென்று தலையசைக்க அவள் நெற்றியில் இருந்த கட்டினை பார்வையிட்டவாறே "எதுக்கும் இன்னும் ரெண்டு நாளுக்கு நீ தலைக்கு தண்ணி ஊத்தாதே நந்து" என்று அக்கறையுடன் கூற ரகுநந்தனும் சரியென்றான்.

கணவனும் மனைவியும் கேலி கிண்டலுடன் சமையல் வேலையை ஆரம்பித்த நேரம் ரகுநந்தனுக்கு அவனது தந்தையிடம் இருந்து போன் வந்தது.

போனை எடுத்தவனிடம் "டேய் நந்து! ஷேத்ராடானம் வந்த இடத்துல உன் தாத்தாவுக்கு கொஞ்சம் முடியாம போயிடுத்துடா..நாங்க நேத்து நைட்டே சென்னை திரும்பிட்டோம்" என்று வேங்கடநாதன் சோர்ந்து போனவராய் பேச

ரகுநந்தன் "என் கிட்ட நேத்தைக்கே சொல்லிருக்கலாமேப்பா? தாத்தாவுக்கு என்னாச்சு?" என்று பதறியவனாய் விசாரிக்க நீரஜாட்சியோ அவனது 'தாத்தாவுக்கு என்னாச்சு' என்ற வார்த்தையில் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டாள்.

அவன் பேசி முடிப்பதற்குள் அவளது கவலை கொண்ட மனம் தாறுமாறாக கற்பனை செய்ய அதன் விளைவாக கண் கலங்க நின்றவளிடம் "நீரு எல்லாத்தையும் எடுத்து வை., நம்ம சென்னை கிளம்புறோம்" என்று மட்டும் அவன் உரைக்க

நீரஜாட்சி கம்மிய குரலில் "பட்டுக்கு என்னாச்சு நந்து?" என்று கேட்க

ரகுநந்தன் அவளது கன்னத்தை பற்றியவன் "நீ கண் கலங்கி நிக்கிற அளவுக்கு அவருக்கு ஒன்னும் இல்லை. எப்போவும் போல மூச்சு விட சிரமமா ஆயிடுத்தாம். அப்புறம் அங்கேயே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி டாக்டர் அப்சர்வேசன்ல வச்சு அவங்க ஒன்னும் இல்லைனு சொன்னதுக்கு அப்புறமா நேத்தைக்கு தான் சென்னை வந்திருக்காங்க எல்லாரும். சோ நீ பயப்படாதே. இதெல்லாம் நான் கிளீன் பண்ணி வைக்கிறேன். நீ போய் நம்ம டிரஸ் எல்லாம் பேக்ல எடுத்து வை" என்று கூறி மனைவியை அனுப்பி விட்டு சமையலறையில் கிடந்த பாத்திரங்களை அலம்பி அடுக்கிவைத்துவிட்டு சமையலறை கதவை பூட்டினான்.

ஹாலுக்கு வந்தவன் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து தானும் நீரஜாட்சியும் இன்னும் சிறிது நேரத்தில் சென்னை கிளம்ப போகும் விஷயத்தை கூறிவிட்டு போனை வைத்தான்.

அதற்குள் நீரஜாட்சி இருவரின் உடைமையையும் எடுத்து வைத்துவிட்டு அவளும் ஒரு சுடிதாரில் தயாராக வந்துவிட ரகுநந்தன் தனது உடையை மாற்றிவிட்டு அறையை பூட்டிவிட்டு வந்தான்.

"கிளம்பலாமா?" என்றவனுடன் சேர்ந்து நடைபோட்டவள் வெளிப்புற கதவை சாத்தும் போது கண் கலங்கிவிட்டாள். இந்த வீட்டில் தங்கிய நாட்களின் நினைவிலும் தாய் தந்தையின் நினைவிலும் கலங்கிப் போனவளை கரம் பற்றி அழைத்துச் சென்றவன் வெளிப்புற கேட்டை சாத்திவிட்டு வனஜாவின் வீட்டுக்கு நீரஜாட்சியுடன் சென்றான்.

அவரிடம் தாத்தாவின் உடல்நிலை பற்றிய விவரத்தை கூறிவிட்டு அவரிடமும் விக்கியிடமும் சொல்லிக் கொண்டு விடைபெற்றனர் கணவனும் மனைவியும்.

நீரஜாட்சி செல்லும் முன் வனஜாவிடம் "அக்கா எங்க வீட்டை அப்பப்போ பார்த்துக்கோங்கக்கா!" என்று வேண்டுகோள் விடுத்தவள் விக்கியிடம் "பப்ளிக் எக்சாம் நல்லா எழுதுடா. ரிசல்ட் வந்ததும் எனக்கு தான் ஃபர்ஸ்ட் சொல்லணும்" என்று கூறிவிட்டு விடை பெற்றாள்.

**************

நீரஜாட்சியும் ரகுநந்தனும் சென்னை வந்தடைய மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. நீரஜாட்சி கணவனுடன் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தவள் இத்தனை நாட்கள் ஸ்ரீனிவாசவிலாசத்தை பிரிந்திருந்த வருத்தமும், தாத்தாவின் உடல் நிலை குறித்த பயமும் சேர்ந்து வாட்ட விறுவிறுவென்று வீட்டை நோக்கி செல்லும் பாதையில் நடந்தாள் அவள்.

அவள் வெளிப்புற வராண்டாவில் காலடி எடுத்து வைக்கும் போதே பட்டாபிராமனின் சிரிப்பொலி கேட்கவே வேகமாக உள்ளே சென்றவள் ஹாலின் நடுநாயகமாக சோஃபாவில் சீதாலெட்சுமி மற்றும் மகன், மருமகள்கள் சூழ அமர்ந்திருந்தவரிடம் ஓடிச் சென்று அவரது மார்பில் சாய்ந்து கொண்டபடி "உனக்கு என்னாச்சு பட்டு?" என்று விசும்பத் தொடங்க

அவரோ "என் ராஜாத்தி.. நேக்கு ஒன்னும் இல்லடிம்மா. யாரு உன்னை பயம் காட்டுனது? அழக் கூடாது" என்று பேத்தியை சமாதானம் செய்ய முயன்றவாறே மகன்களிடம் திரும்பியவர் பார்வையாலேயே "இதெல்லாம் உங்க வேலையாடா?" என்று கேட்க வேங்கடநாதன் அமைதியாக தலையாட்டினார்.

அதற்குள் ரகுநந்தன் ஹாலுக்குள் வந்தவன் அவரிடம் சென்று "என்னாச்சு தாத்தா? உங்களுக்கு உடம்புக்கு முடியலைனதும் நாங்க பதறி போயிட்டோம்" என்று வருத்தமான குரலில் வினவ அவர் பேரனையும் சேர்த்து சமாதானப்படுத்த தொடங்கினார். சீதாலெட்சுமி நீரஜாட்சியின் தலையை கோதி தாத்தாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூறி அன்று நடந்ததை விளக்க அவர்கள் இருவருக்கும் இன்னும் நம்பிக்கை வரவில்லை.

அதைக் கண்ட பட்டாபிராமன் "ரெண்டு பேரும் நன்னா பாருங்கோ! நேக்கு என்ன? நன்னா கல்லு மாதிரி தானே இருக்கேன்..டேய் நந்தா! உன் தோப்பனார் சொன்னார்னதும் அடிச்சு பிடிச்சு ஓடி வந்தியாடா கண்ணா?" என்று வாஞ்சையுடன் பேரனை பார்த்தவர் அவன் நெற்றியில் காயம் இருப்பதை கண்டதும் பதறிவிட்டார்.

"என்னடா இது? எப்பிடி காயம் பட்டுச்சு?" என்று அவர் வினவிய பின்னர் தான் சீதாலெட்சுமி, மைதிலியோடு பத்மாவதியும் மகனின் நெற்றியை கவனித்தார்.

பதறிப் போனவராய் "நந்து என்னடா கண்ணா ஆச்சு?" என்று அவரும் அவர் பங்குக்கு கண்ணை கசக்க தொடங்க

ரகுநந்தன் விட்டால் இவர்கள் அனைவரும்  இன்று முழுக்க ஒரு சிறு காயத்துக்காக தானும் கண்ணீர் சிந்தி நீரஜாட்சியையும் சிந்த வைப்பார்கள் என்று எண்ணிக் கொண்டபடி "ஒன்னும் இல்ல! சாதாரண அடி தான். இவங்காத்து கதவு நிலையில இடிச்சுட்டேன். அவ்ளோ தான்" என்று கூற

வேங்கடநாதன் "நிலை உயரத்துக்கு வளர்ந்திருக்கியோன்னோ பார்த்து போகப்படாதா?" என்று அவனை கண்டிக்க

பத்மாவதி "சித்த சும்மா இருங்கோண்ணா! அவனே அடிபட்டு நிக்கறான். நீங்களும் ஏன் என் பிள்ளையை திட்டறேள்?" என்றபடி கணவரை நொடித்து கொண்டார்.

ஆனால் இதற்கு காரணமானவளோ தாத்தாவின் மார்பில் சலுகையுடன் சாய்ந்து கொண்டபடி அவனிடம் "பிளீஸ் சொல்லிடாதே" என்று கண்ணாலேயே கெஞ்ச அவன் நமட்டுச்சிரிப்புடன் சரியென்று தலையசைத்தான்.

பட்டாபிராமன் மூத்தமகனிடம் திரும்பியவர் "அவன் குழந்தைடா நாதா! நோக்கே இன்னும் எந்த விஷயத்தை எப்போ சொல்லணும்னு அறிவு வளரலையே" என்று மகனின் காலை வாரிவிட சீதாலெட்சுமி "சும்மா இருங்கோண்ணா..அவன் உங்க மேல இருந்த அக்கறையில தானே சொன்னான்" என்று மகனுக்கு வக்காலத்து வாங்கினார்.

இவ்வாறு நீண்டநாட்களுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட முழுக்குடும்பமும் இத்தனை நாட்கள் தாங்கள் கடந்து வந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதில் நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்க

மைதிலி "சரி சரி! விட்டா எல்லாரும் விடிய விடிய பேசிண்டே இருப்பேள்..நந்துவும் நீருவும் பிரயாணத்துல களைச்சு போய் வந்திருப்பா. பாவம் குழந்தேள் என்னாச்சோ ஏதாச்சோனு பதறியடிச்சு வந்திருக்கா..நீங்க போய் ரெஸ்ட் எடுங்கோ..டின்னர் ரெடியானதும் நான் கூப்பிடறேன்.. ஏண்ணா நீங்களும் தான்" என்று கூற

பட்டாபிராமனும் "ஆமாடா! ரெண்டு பேரும் போய் முதல்ல ரெஃப்ரெஷ் ஆகுங்கோ. தாத்தாவுகு ஒன்னும் இல்லை..என் கொள்ளுப்பேரன், பேத்திகள் எல்லாரோடவும் விளையாட நான் ரெடியாயிட்டு இருக்கேன்டா..எனக்கு போய் உடம்பு சரியில்லனு சொல்லுறா இவாள்ளாம்" என்று கேலி போல பேசி இருவரையும் அனுப்பி வைத்தார்.

நீரஜாட்சி சரியென்று தலையசைத்துவிட்டு கணவனுடன் மாடிப்படி ஏறினாள். மாடிவராண்டாவில் நடைபோடும் போதே தான் வீட்டை விட்டு கிளம்பிய தருணம் மனதில் தோன்ற அதை ஒதுக்கிவிட்டு அறையினுள் நுழைந்தாள்.

பேக்கை ஒரு ஓரமாக வைத்த ரகுநந்தனிடம் "நந்து ரொம்ப நேரமாயிடுச்சு. நீ ஹாட்வாட்டர்ல குளி. தலையை நனைச்சுடாதே" என்று சொல்லி அவனை முதலில் குளித்துவிட்டு வருமாறு அனுப்பியவள் தங்களின் உடைமைகளை எடுத்து மீண்டும் வார்ட்ரோபில் வைக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் அவன் குளித்துவிட்டு திரும்பிவிட டவல் மாற்றுடை சகிதம் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள் அவள்.

ரகுநந்தன் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் முகம் பார்த்தவன் தனது கழுத்தில் மின்னிய நீரஜாட்சி பெயர் பொறித்த செயினை கண்டதும் திடீரென்று நினைவு வர வார்ட்ரோபில் தனது உடையை ஆராய்ந்தவன் ஒரு சட்டையை எடுத்து அதன் பாக்கெட்டில் கைவிட அவனது பெயர் பொறித்த செயின் அவன் கைக்கு கிடைத்தது.

அதை கையில் வைத்து பார்க்கும் போதே குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பியவன் அங்கே இளஞ்சிவப்பு நிற எளிய காட்டன் புடவையில் புதிதாய் பூத்த மலர் போல நின்ற மனைவியைக் கண்டதும் மெய் மறந்தான். நீரஜாட்சியோ இவனுக்கு என்னாவாயிற்று என்ற ரீதியில் பார்த்துவைத்தவள் ஒரு பொருள் விளங்கா புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டிரஸ்ஸிங் டேபிள் அருகே ஒரு மோடாவை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

தன்னை கணவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு இன்னும் அவளுக்கு உறைக்காததால் அவள் பாட்டுக்கு கூந்தலை உதறிவிட்டபடி எப்போதும் போல நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்துக் கொண்டாள். 

அவன் நின்று கொண்டே இருக்க "நந்து போய் உக்காரு! ஏன் நின்னுட்டிருக்க? கால் வலிக்க போகுது" என்று மனையாளாக ஆணையிட அவனும் சென்று அமர்ந்தான். அவள் தலையை உலர்த்திவிட்டு பின்னலிடும் போதே மைதிலி இருவரையும் சாப்பிட அழைக்க கணவனை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள் அவள்.

சாப்பிடும் போது பட்டாபிராமன் வேங்கடநாதனிடம் "நீ நந்து கிட்ட உளறுன மாதிரி உன் மூத்த பிள்ளையாண்டான் கிட்டவும் உளறி வைக்கலையே?" என்று கேட்க

அவரோ "இல்லப்பா..நான் அவன் கிட்டவும் சொல்லிட்டேன்" என்று கூறி தப்பு செய்த குழந்தை போல் தலையை குனிந்து கொள்ள

பட்டாபிராமன் "டேய் நேக்குனு வந்து பிறந்துருக்கேளே..அம்மாடி பத்மா உன் ஆம்படையானை எப்பிடி தான் நீ சமாளிக்கறயோ?" என்று மீண்டும் மகனை நொடித்து கொண்டார்.

அதை கேட்டு மற்றவர்கள் சிரிக்க வழக்கம் போல சீதாலெட்சுமி மகனுக்கு ஆதரவாகப் பேச அன்றைக்கு இரவுணவு முடித்தவர் அனைவரின் மனமும் நிறைந்திருந்தது.

நீரஜாட்சி தாத்தா பாட்டியிடம் எப்போதும் போல சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு மாமா மாமிகளிடம் ஷேத்ராடானம் அனுபவத்தை எல்லாம் கேட்டுவிட்டு  தனது அறைக்கு திரும்ப அங்கே அவளுக்கு முன்னர் காத்திருந்தான் ரகுநந்தன்.

உள்ளே வரும் போதே "நந்து இன்னும் முழிச்சிட்டிருக்க? உனக்கு தூக்கம் வரலையா?" என்றபடி கதவை தாழிட்டவள் அவன் தனக்கு பதில் அளிக்காமல் இருக்கவே அவனிடம் அமர்ந்தாள்.

"என்னாச்சு நந்து?" என்றவளிடம் தன் கையில் வைத்திருக்கும் செயினை காட்டியவன் "இதை போட்டுக்க உனக்கு ஆட்சேபனை எதுவும் இருக்கா?" என்று ஆழ்ந்த குரலில் கேட்க

நீரஜாட்சி அந்த குரலுக்கு கட்டுப்பட்டவளாக "இல்ல நந்து" என்று சொன்ன அடுத்த கணமே அவனது கரங்கள் அந்த செயினை அவள் கழுத்தில் மாட்டிவிட்டன. நீரஜாட்சி அதை தன் கரங்களால் தடவிக் கொடுத்தபடி எழ அவளோடு சேர்ந்து எழுந்தவன் "எங்கே போற நீரு? இன்னைக்கு நீ என்னை விட்டு எங்கேயும் போக நான் அலோ பண்ண மாட்டேன்" என்று கூற

நீரஜாட்சி "நந்து நான் டிரஸ் சேஞ்ச்...." என்று தடுமாறியபடி வார்த்தையை முடிக்காமல் விட  அவன் அவளது முகவடிவை அளந்தபடி "ம்ஹூம்! எதுக்குமே போக விடமாட்டேன்" என்று ஹஸ்கி குரலில் பேசியபடி மனைவியை தனது கரங்களில் அள்ளிக் கொண்டான்.

நீரஜாட்சி தனது கரங்களை அவனது கழுத்தை சுற்றி மாலையாய் வளைத்தவள் கணவனின் கண்ணை நோக்கியவாறே "ஐ லவ் யூ நந்து" என்று கூற அவளை படுக்கையில் கிடத்தியவன் "ஐ லவ் யூ நீரு" என்று அவள் காதுக்குள் முணுமுணுத்தான் அளவற்ற காதலுடன்.. அன்றைய இரவு நீரு நந்துவின் வீணையாக மாற அவளை மேவும் விரலாக மாறி போனான் ரகுநந்தன். அன்றைய இரவு அவர்கள் வாழ்வின் அழகிய அத்தியாயம் இனிய இசையாக ஆரம்பித்தது.

*********

மறுநாள் காலை ரகுநந்தனுக்கு முன்னர் விழித்துக் கொண்டாள் நீரஜாட்சி. தன்னை அணைத்தபடி உறங்குபவனின் நெற்றியில் முத்தமிட்டவள் "ஐ லவ் யூ" என்று கூறிவிட்டு அவன் விழிப்பதற்குள் குளியலறைக்குள் நுழைந்தாள். அவள் குளித்து உடை மாற்றி திரும்பி வந்த பிறகும் அவன் உறக்கம் கலையாமல் இருக்கவே அவனை தொந்தரவு செய்யாமல் கீழே சென்றாள்.

ஹாலில் பத்மாவதி பூஜைக்கு பூக்களை தொடுத்துக் கொண்டிருக்க அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள் "மாமி சின்ன மாமா எங்கே?" என்று கேட்டு வைக்க

பத்மாவதி "உன் பெரிய மாமா பண்ணி வச்ச கூத்தாலே இன்னைக்கு கிருஷ்ணாவும் ஹர்சாவும் லண்டன்ல இருந்து திரும்பறோம்னு சொல்லிட்டா. அவாளை அழைச்சிண்டு வர தான் உன் ரெண்டு மாமாவும் காத்தாலே ஏர்ப்போர்ட்டுக்கு காரை எடுத்திண்டு போனா" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே கார் வரும் சத்தம் கேட்க நீரஜாட்சி தமக்கையை நீண்டநாள் கழித்து பார்க்கப் போகும் ஆவலில் வாயிலுக்கு ஓடினாள்.

கிருஷ்ணஜாட்சி காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி வரவே ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள் நீரஜாட்சி. தங்கையின் நெற்றியில் முத்தமிட்டவள் அவளது முகத்தில் முன்பு இருந்த குழப்பம் அகன்று அவள் தெளிவாக இருப்பதை அறிந்து சந்தோசத்துடன் அவள் கரம் பற்றி வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவளைத் தொடர்ந்து ஹர்சவர்தன் அப்பா மற்றும் சித்தப்பாவுடன் நுழைய பத்மாவதி மகனிடமும் மருமகளிடமும் பிரயாணம் பற்றியும் லண்டன் நகரம் பற்றியும் விசாரிக்க ஆரம்பிக்க பட்டாபிராமனும் சீதாலெட்சுமியும் ஹாலுக்கு வர பேரனும் பேத்தியும் அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

பட்டாபிராமனும் ஹர்சவர்தன் கிருஷ்ணஜாட்சியிடம் தான் நலமாக உள்ளதாக கூறிக் கொண்டிருக்கும் போதே ரகுநந்தன் "டேய் அண்ணா" என்ற கூவலுடன் வந்து அண்ணனை அணைத்துக் கொண்டான்.

கிருஷ்ணஜாட்சியிடம் "மன்னி லண்டன் ஜர்னி எப்பிடி இருந்துச்சு?" என்று விசாரித்தவன் நீரஜாட்சி தன் பின்னே நிற்பது தெரியாமல் "நீங்க குடுத்த பிளான் சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுத்து. இப்போ நானும் நீருவும் பெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி ஒன்னா ஆயிட்டோம்" என்று வாய்விட்டு உளறிவிட

கிருஷ்ணஜாட்சியும் ஹர்சவர்தனும் அவனுக்கு ஜாடையில் காட்ட எவ்வளவோ முயன்றும் அவனால் புரிந்து கொள்ள இயலாமல் பேட்டில் தான் வேண்டுமென்றே இடித்துக் கொண்டது முதற்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு மீண்டும் ஒரு முறை கிருஷ்ணஜாட்சிக்கு நன்றி கூறினான்.

ஹர்சவர்தன் "நீ ஏன்டா தேங்க்ஸ் சொல்லுற? கூடிய சீக்கிரம் நீ இன்னொரு தடவை ஐடியா கேட்டு வருவ. அப்போ மொத்தமா சொல்லிக்கலாம்" என்றான் ரகுநந்தனின் பின்னே முறைத்தபடி நின்ற நீரஜாட்சியை பார்த்தபடி.

"மன்னி என்ன இவன் உளறுறான்?"

"அவர் உளறலை அம்மாஞ்சி. கொஞ்சம் திரும்பி பாருங்க" என்று கிருஷ்ணஜாட்சி கூற ரகுநந்தன் திரும்பி பார்க்க அங்கே அவனது நீருகுட்டி கோபத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

"நீருகுட்டி..அது வந்து...நான்" என்று அவன் தடுமாற அவள் "இம்பாஸிபிள்" என்று தலையை இடம் வலமாக ஆட்டிவிட்டு அவுட் ஹவுஸை நோக்கி நடைபோட்டாள்.

ரகுநந்தன் "ஹே பகவான்! இவளை மலை இறங்க வைக்க நான் என்ன பண்ணுவேன்?" என்று கிருஷ்ணஜாட்சியை  பார்க்க

அவளோ "ஸ்ட்ரெயிட்டா போய் அவ கால்ல விழுந்துடுங்க" என்று கூற ரகுநந்தனும் சரியென்று சொல்லிவிட்டு "நீரு நில்லுடி" என்றவாறு அவளை தொடர்ந்து ஓட

கிருஷ்ணஜாட்சி "ஹர்சா நான் சும்மா சொன்னேன். அம்மாஞ்சியை நிக்க சொல்லுங்க" என்று அவனை தடுக்கச் செல்ல ஹர்சவர்தன் "அதுல்லாம் அவன் பார்த்துப்பான். நீ என்னை பத்தி கொஞ்சம் யோசி" என்று அவளின் மூக்கோடு மூக்கை உரச செல்ல

கிருஷ்ணஜாட்சி அவனை விலக்கியவாறே "இது ஒன்னும் லண்டன் இல்ல, இந்தியா; அதுவும் ஸ்ரீனிவாசவிலாசம்" என்று சொல்லிவிட்டு சிரிக்க அவனும் மனைவியின் சிரிப்பொலியில் இணைந்தான்.

அதே நேரம் அவுட் ஹவுஸில் நீரஜாட்சியிடம் மன்றாடிக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

"நீரு சாரிடி! நான் வேணும்னு அப்பிடி பண்ணலை. எனக்கு வேற வழி தெரியலைடி" என்று அவன் பேசிக் கொண்டே செல்ல நீரஜாட்சி எழுந்து அவன் அருகில் வந்தவள் அவன் உதட்டில் கை வைத்து பேசாதே என்று குறிப்பால் உணர்த்த அவனும் அமைதியானான்.

அவள் "நந்து உனக்கு எதாச்சும் ஆயிடுச்சுனா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சுமா இப்பிடி இடிச்சுகிட்ட? சப்போஸ் கண்ணுல பட்டிருந்தா என்ன ஆயிருக்கும்? அன்னைக்கு எவ்ளோ ரத்தம் வந்துச்சு? அதை பார்த்து நான் எப்பிடி பயந்து போயிட்டேன் தெரியுமா?" என்று கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள் அவள்.

அவளது முகத்தை நிமிர்த்தியவன் "இனிமே இப்பிடி பண்ண மாட்டேன், போதுமா?" என்று கூறியவாறு அவளின் கண்ணீரை துடைத்துவிட்டபடி நெற்றியில் முத்தமிட்டான்.

நீரஜாட்சி இயல்புக்கு வந்தவள் கேலியாக "எப்பிடியோ என் ஆசைப்படி உன் மண்டையை ஒரு தடவை உடைச்சு விட்டுட்டேன். சின்ன காயம் தான். இருந்தாலும் என் சின்ன வயசு கனவு அது" என்று நமட்டுச்சிரிப்புடன் கூற ரகுநந்தனும் அதை கேட்டுச் சிரிக்க ஆரம்பித்தான்.

எந்த ஸ்ரீனிவாசவிலாசத்தில் இரு சகோதரிகளுக்கும் காலடி எடுத்து வைக்க கூட அனுமதி மறுக்கப்பட்டதோ அதே ஸ்ரீனிவாசவிலாசத்தில் இன்று அந்த சகோதரிகளின் சிரிப்புச்சத்தம் அந்த வீட்டுக்கே புதுக்களையை உண்டாக்கியது..

 

தொடரும்....

Quote
Posted : 15 Feb 2020 8:03 am
Jothiru
(@jothiru)
Eminent Member

அருமையான மகிழ்வான பதிவு, நீரு அவள் ஆசை நிறைவேறி விட்டதாம் அதான் ரகு மண்டைய உடைத்தது 😀😀😀👌👌👌💕💕💕♥️♥️♥️🌹🌹🌹🌹

ReplyQuote
Posted : 15 Feb 2020 9:18 am
Nithyamariyappan
 Nithyamariyappan
(@Nithyamariyappan)
Guest

Nice ya 😀 

ReplyQuote
Posted : 15 Feb 2020 11:06 am
 Vgl
(@Vgl)
Guest

ஒரு வழியா ரகு நீரு சண்டை ஒரு முடிவுக்கு வந்தது.

ReplyQuote
Posted : 15 Feb 2020 11:59 am

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: