Notifications

விதியின் தீர்ப்பு  

  RSS

(@1)
Writer
Joined: 9 months ago
Posts: 4
29 May 2019 5:44 am  

விதியின் தீர்ப்பு

……………………

தமயந்தி பம்பரமாய் சுழன்று வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.... அவள் உடலும் உள்ளமும் பரபரப்பாய் சுழன்று கொண்டிருந்தது... இருக்காதா பின்னே? ஒரு சுற்றுலாக் குழுவுடன் வட நாட்டிற்கு சுற்றுலா சென்ற அவளுடைய கணவன் இரண்டு வாரங்கள் கழித்து இன்று திரும்பி வருகிறான்..

அன்பும் காதலுமாய் அழகான வாழ்க்கை...  இவர்களின் காதலுக்கு எடுத்துக்காட்டாய் இரண்டு சின்னஞ்சிறு சிட்டுக்கள்... இளமதி, எழில்மதி இரட்டைபிள்ளைகள்...

அழகழகான இரண்டு பெண் பிள்ளைகளையும் அழகாக அலங்கரித்து கிளப்பி விட்டு, அவளும் கிளம்பி ரெடியாக இருந்தாள்...

அதிகாலையிலேயே எழுந்து கணவனுக்கு பிடித்தமான பதார்த்தங்களை எல்லாம் செய்து அழகழகான பாத்திரங்களில் அடுக்கி வைத்திருந்தாள்..  அவளுடைய கணவன் அரிச்சந்திரனுக்கு எல்லாம் அழகாக இருக்க வேண்டும்..!!

உண்ணும் உணவு கூட அழகாக பரிமாறப்பட்டு இருக்க வேண்டும்.. 'மானிடப் பிறவியே அழகை ஆராதிக்க தான்' என்று அடிக்கடி சொல்வான்..

மனைவியும் குழந்தைகளும் எண்ணை வைக்காமல், தலை வாராமல், நைட்டியும், சாதாரண உடைகளையும்  போட்டுக்கொண்டு இருந்தால்.. அவனுக்கு பிடிக்காது ..!!

எப்போதும் அழகழகாய், விதவிதமாய் அவன் வாங்கி வரும் சேலைகளையும், நவீன  உடைகளையும் அணிந்து அவன் உள் நுழையும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாய் அவனை கட்டி இழுக்க வேண்டும் தன் மனைவி...  என அடிக்கடி கூறுவான்..

அவன் வார்த்தைகளிலேயே அப்படியே மயங்கி விடுபவள் அதை மீறுவாளா  என்ன? அவனும் அப்படி ஒன்றும் வீட்டிலேயே இருக்கும் ஆளும் கிடையாது.. அவர்கள் தஞ்சையில் ஒரு டிராவல் ஏஜென்சி வைத்திருந்தார்கள்..

தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தஞ்சை, அதை சுற்றியுள்ள இடங்களை காண்பிப்பது போல, அங்கிருந்து வரும் மக்களுடன் வியாபார தொடர்புகளையும் பெருக்கிக் கொண்டு தமிழ்நாட்டில் இருந்து மக்களை வட இந்திய சுற்றுலாவிற்கும் அழைத்துச் செல்லும் நிறுவனமாக அதை வளர்த்து இருந்தான் அரிச்சந்திரன்..

இளவயதிலேயே ஒரு தொழிலை ஆரம்பித்து அதை இவ்வளவு சிறப்பாக செய்யும் ஒரு மாப்பிள்ளை கிடைத்ததே என்று தமயந்தியின் தந்தைக்கு மிகப் பெருமை..  "இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்..!!" என அடிக்கடி கூறுவார்.

அவளும் ஒன்றும் சாதாரண பெண் இல்லையே... தைரியமானவள்.. இரக்க சுபாவம் உள்ளவள்... விதவிதமாய் உடைகள் தைக்கும் கலை அறிந்தவள்... BA, B.Ed  படித்துவிட்டு அவர்கள் ஊரிலுள்ள ப்ரபலமான தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தாள்..

நல்ல வரன் அமையவும் அவளது தந்தை தசரதன் மகளுக்கு மணமுடித்து அனுப்பி வைத்தார்...

மணமான நாள் முதலாய் அன்பும் காதலும் நேசமுமான வாழ்க்கை தான்... ஒரு நாளும் சந்திரன் அவளை ஒரு வார்த்தை கடுமையாக பேசியது இல்லை தான்... மானே தேனே என்று கொஞ்சாத குறையாக தலைமேலேயே தாங்கினான்...

அவளது அழகும், திறமையும் அப்படி..!!

எவரையும் ஒரு நொடி திரும்பிப் பார்க்க வைக்கும் மாம்பழ நிறம்.. அழகான வட்ட முகம்..  சாமுத்ரிகா லட்சணம் 100% பொருந்திப்போகும் போல் ஒரு அழகு!! அப்படிப்பட்ட மனைவியை திட்டவும் தான் யாருக்கு மனம் வரும்?

எனவே அவளது வாழ்வு மகிழ்வாகவே சென்றது..  அதுவும் சூழ் கொண்டு அவள் தங்கப்பையில் ஒன்றிற்கு இரண்டு செல்வங்கள் வளர்வது தெரியவும்.. அவனது அன்பும் அதிகம் ஆகிக்கொண்டே சென்றது... இரண்டும் முத்துக்கு முத்தாக ஒன்றுபோல தமயந்தியை உரித்து வைத்தார் போல், அழகாய் குட்டி பார்பி பொம்மைகள் போல மொழுமொழுவென்று இருக்கவும்.., அவர்களது மகிழ்விற்க்கும் அளவில்லாது போனது..

இப்படி அவள் அன்பான கணவனும், அழகான குழந்தைகளுமாக வாழ்வது பிடிக்காமல் தான், அவளது சொந்தங்கள் குடும்பத்தில் ஒன்றிரண்டாய் மூட்டி விடுகிறார்கள்!! என, அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நேரத்தில் அவளுக்கு கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது...

பின்னே அவளது சொந்த சித்தப்பா முதல் தாய்மாமன் மகள் வரை அனைவரும் ஒன்று போல அவளது கணவனை தவறாக பேசினால் கடுப்பாக இருக்கும் இல்லையா?

எல்லாம் பொறாமை பிடித்த ஜென்மங்கள்!!  தன்னுடைய மகிழ்வான வாழ்வை கெடுப்பதற்கு என்றே இப்படி அலைகிறார்கள்..!! ஒருவர்  என்னடாவென்றால், கேரளாவில் ஒரு குட்டியுடன் பார்த்தேன் என்கிறார்..

ஒருத்தி என்னடாவென்றால் குஜராத்தில் ஒரு குமரியுடன் குத்தாட்டம் போட்டான் என்கிறார்..  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசவும், அனைவரையும் திட்டி, அவமானப்படுத்தி, அவர்களுடைய தொடர்பை துண்டித்து விட்டாள்..

எங்கு சென்றாலும் "இது உனக்கு நல்லா இருக்கும்! இது உனக்கு பிடிக்கும்! இந்த நிறம் உனக்கு எடுப்பாக இருக்கும்!" என்று பார்த்துப் பார்த்து வாங்கி வரும் கணவன்.. பிள்ளைகளையும் விட்டு வைப்பதில்லை!!

அப்படி எந்த நேரமும் தன் குடும்பத்தையே யோசித்துக் கொண்டிருக்கும் ஒருவன்..  எப்படி தவறானவனாக இருப்பான் என்று எண்ணி அவள் அவளுடைய சொந்தங்கள் கூறிய எதையும் காதில் வாங்கவில்லை...  எல்லோரையும் எடுத்தெறிந்து அவர்களது உறவையே துண்டித்தாள் ..

அவர்கள் இப்படி உன்னை பற்றி பேசினார்கள் என்று கூட கணவனிடம் கூறவில்லை..அவனது பூப்போன்ற மனது புண்பட்டு விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தவள் பிறர் கூறும் அவதூறுகளை எல்லாம் தனக்குள்ளே புதைத்து கொண்டு கணவருடன் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தாள்..

இதோ அவனும் வந்து விட்டான்!!

அவனைக் கண்டதும் தன்னுடைய சிந்தனைகளை ஓரமாக ஒதுக்கி,  அவனைப் பார்த்து ஓர் மோகனப் புன்னகை சிந்தினாள்!! கண்களாலேயே மயக்கிய அவளை அவன் கண்களாலேயே கபளீகரம் செய்தவாறு உள்ளே வந்தான்..

கோமகன் வரவில்

குலமகள் முகமும்

மலர்ந்து குலுங்காதோ?

மன்னவன் அவனுடன்

கூடிக்குலவிட மனமும்

ஏங்காதோ?

வஞ்சியவள் வதனம் தான்

காதலில் தகிக்காதோ?

கண்ணனவன் தீண்டியதும்

பனியாய் உறையாதோ??

வந்ததும் தன் இரு பெண் செல்வங்களையும் தூக்கி முத்தாடி, அவர்களுக்கு வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அவர்களிடம் கொடுத்து, கவனத்தை திசை திருப்பி விட்டு, தன் மனைவியை நோக்கி முன்னேறினான்... அப்படியே தனி அறைக்கு அழைத்துச் சென்றவன்.. அவளைப் பிரிந்த தன் தாபத்தை, மோகத்தை, காதலை மொத்தமாய் வெளிப்படுத்தவும் அதில் உச்சி குளிர்ந்து போனவள்.. அதுவரை சிந்தித்துக் கொண்டிருந்த எண்ணங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கணவனின் காதலில் கட்டுண்டு போனாள்..!!

'நம்முடைய வாழ்வை கெடுப்பதே இதுபோன்ற அரைகுறையான சொந்தங்கள் தான்...!! எவனையோ பார்த்துவிட்டு வந்து உன்னவனை தான் பார்த்தேன் என்பது.. இல்லை, இவள் வாழும் அழகான வாழ்வை கெடுக்க வேண்டி தேன்கூட்டில் கல்லெறிவது போல் ஏதேனும் குண்டை தூக்கிப் போடுவது..!!  இதுவே அனைவருக்கும் பிழைப்பாக இருக்கிறது..' என எண்ணியவள் மொத்த சொந்தங்களையும் ஒரேயடியாய் ஒதுக்கினாள்..!!

திருமணமான முதல் நாள்.. "வேலைக்கு செல்ல வேண்டும்" என்றவளை "உன் பொன்மேனி கசங்க, வெயிலில் திரிந்து.. தேன்குரல் கசிய.. கத்தி கத்தி பாடம் எடுத்து உன்னை நீயே வருத்திக் கொள்ள வேண்டுமா? செல்லம்... நீ மகாராணியாய் வீட்டிலேயே இருந்தால் போதும்.. மாமன் இருக்கிறேன்.. உனக்கு உழைத்து சேவகம் செய்ய!!" என்று வார்த்தைகளிலேயே மயக்கி வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து விட்டான்...

அவன் எப்போதும் அப்படித்தான், வார்த்தைகளில் தேன் சொட்டும், கண்களில் காதல் கொட்டும், இப்படி ஒரு ரொமான்டிக்கான அழகான கணவன் யாருக்கு வாய்ப்பான்...!!

உன் அகிலமனைத்தும் ஆனதனால்...

என் உள்ளச் செருக்கும் கூடிடுதே!!

உன் வாழ்வின் அச்சாய் சுழல்வதனால்

என் காந்தத்தன்மை கூடிடுதே!!

ஏதுமற்ற தனியொருத்தி

எல்லாமாகி நின்றேனே...

வானமதுவுமில்லாமல் முழுமதியும்

முழுமை ஆகிடுமோ..??

உன் ஒற்றை முத்தம் இல்லாமல்

என் நாளும் இனிதாய் கழிந்திடுமோ??

அவனுக்காக உருகி அவனுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது என அதே சிந்தனையில் சுழன்று.. அவள் வாழ்வே அரிச்சந்திரன் மாயமாகிப் போனது..!! பெரும்பாலான இந்திய குடும்பப் பெண்களைப் போல அவளது வாழ்வும் அவளுக்கானதாக இல்லாமல் கணவன், குழந்தை என பிறருக்கானதாக மாறிவிட்டது...!!

அவளுடைய சின்னஞ்சிறு குடும்பமே.. அவளது மொத்த உலகமுமாக சுருங்கிவிட்டது.. சில நெருங்கிய தோழிகள் இருந்தாலும், அவர்களுடனான தொடர்பு என்பது எப்போதாவது ஒருநாள் அலைபேசியில் அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ பேசுவது என்ற அளவுக்கு சுருங்கி போய்விட்டது..!!

தமயந்தியின் தாய் மாமன் மகள் சந்திரிகாவும் இவளுடன் படித்தவள்தான்.. அவர்கள் இருவருக்கும் பொதுவான நெருங்கிய நண்பர்கள் நிறைய பேர் இருந்தார்கள்..!!

ஆனால் சின்னஞ்சிறு வயதில் இருந்து ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து, உடனிருந்த உற்ற தோழியான தாய் மாமன் மகளின் பேச்சையே மதிக்காதவள் மற்றவர்கள் பேச்சை கேட்பாளா என்ன??

சந்திரிக்காவை போலவே அரிச்சந்திரனின் லீலைகளை அவளுடைய இன்னொரு உற்ற தோழி நிவேதாவும் பார்க்க நேர்ந்தது!! அவளுடைய திருமணத்தின் போது தான் பார்த்து இருந்தாலும், அதன் பிறகும் அவர்களது whatsapp குழுவில் அவ்வப்போது அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள், படங்கள் வாயிலாக ஒருவர் மற்றவர் வாழ்வையும், குடும்பத்தையும் மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர்..

அப்படி புனே நகரத்தில் வாழ்ந்து வந்த தமயந்தியின் தோழி நிவேதா அரிச்சந்திரன் ஒரு பெண்ணுடன் அங்கே சுற்றுவதை காண நேர்ந்தது... ஆனால் தமயந்திக்கு அரிச்சந்திரன் உடனான காதல் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்தவள் என்பதால், நேரடியாக அவளிடம் இதைப் பற்றி பேசாமல்.. சந்திரிகாவுடன் அவள் பார்த்ததை பற்றி விவாதித்தாள்..!!

சந்திரிகாவும், அவள் அரிச்சந்திரனை வேறு ஒரு பெண்ணுடன் கண்டதையும் அதைப்பற்றி தமயந்தியிடம் கூறப் போக அவள் தன்னையே அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டதையும் கூறி வருந்தினாள்..

'என்ன தான் அவள் வெறுத்தாலும், அவள் நம்முடைய உற்ற தோழி அல்லவா? அவளுடைய வாழ்வை காக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு.. எப்படியாவது அவளுக்கு அரிச்சந்திரனின் நரித்தனத்தை தெரியப்படுத்த வேண்டும்..' என்று உறுதி கொண்டனர் இரு தோழிகளும்!!

ஏற்றார்போல், அவர்களது இன்னொரு  தோழி சாந்தினியின் கணவர் டிடக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்திக் கொண்டிருந்தவரின் உதவியை நாடி, அவர்கள் அரிச்சந்திரனின் நடமாட்டங்களை கண்காணிக்க கேட்டுக்கொண்டனர்...

தோழிகளின் தவிப்பை கண்டவர்...  உடனே ஒத்துக் கொண்டார்.. அதற்கு ஒரு ஆளை நியமித்து அரிச்சந்திரனின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும் சேகரித்து கொடுத்தார்...  ஆனால் என்னதான் ஆதாரங்கள் கொடுத்தாலும் அவற்றை நம்பும் நிலையில் அந்த முட்டாள் பெண் இல்லையே!!

அவள் தான் அவனது காதல் வசனங்களில் கிறங்கி , அவன் மோகனப் புன்னகையில் மயங்கிப் போய் கிடந்தாளே..  அவளுக்கு நேரடியாக ஓர் அதிர்ச்சி வைத்தியம் தரவேண்டும் என உணர்ந்த தோழிமார் அவளுடைய கணவனின் லீலைகளை அவளையே நேரடியாக காணும்படி செய்ய வேண்டும் என்று எண்ணினர்..!!

அதற்கேற்றார் போல வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளில் ஒரு பெண்ணை மடக்கி, அவளுடன் டேட்டிங் என சுற்றிக் கொண்டிருந்தான் அரிச்சந்திரன்...

தன் மனைவியின் களங்கமில்லா உள்ளத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சொந்த ஊரிலேயே வெள்ளைக்காரியுடன் ஆட்டம் போட்டான்..

அந்த வெள்ளைக்காரியுடன் அன்று தஞ்சையின் பெரிய ரிசார்ட் ஒன்றில் டேட்டிங் ஏற்பாடு செய்து இருப்பதை அறிந்த தமயந்தியின் தோழிகள் தமயந்தியை அந்த ரிசார்ட்டில் சந்திக்கலாம் வா என அழைத்தனர்..

நிவேதாவும் சாந்தினியும் தஞ்சைக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்த தமயந்தி மிக்க மகிழ்ச்சியுடன் தன் இரு பெண் பிள்ளைகளையும் எடுத்துக் கொண்டு ரிசார்ட்டிற்கு கிளம்பினாள்... கணவனிடம் சொல்லி விட்டு செல்லலாம் தான்.. ஆனால் அவன் தான் ஏதோ சுற்றுலா என்று 3 நாட்கள் பயணமாக கேரளா சென்று விட்டானே..!! எனவே அவன் வந்ததும் தன் தோழிகளை சந்தித்ததையும், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் காட்டி மகிழலாம் என எண்ணியவள் , அவனிடம் தெரிவிக்காமலே கிளம்பி சென்றாள்..

அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி தர வேண்டும் என எண்ணி அவனிடம் சொல்லாமல் சென்ற.., அவளுக்கு இதயமே நொறுங்கி விடும் அதிர்ச்சி அங்கு காத்திருந்தது.

இவள் அங்கு சென்றதும் "நீச்சல்குளத்துகிட்ட வ்யூ பார்த்துக் கொண்டே சாப்பிட நல்லா இருக்கும் இந்த ரிசார்ட்டில்... "என்றபடி நீச்சல் குளத்திற்கு அருகே போடப்பட்டிருந்த டேபிளுக்கு அழைத்துச் சென்றனர் தோழிகள்..

அங்கு சென்று அவள் கண்ட காட்சி..

'கேரளா செல்கிறேன்' என்று சொல்லி விட்டு சென்றவன்.. சொந்த ஊரிலேயே அவ்வளவு பெரிய ரிசார்ட்டில்..  ஓர் வெள்ளைக்காரியுடன் நீச்சலுடையில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தான்..!! பார்த்ததும் அதிர்ச்சியில் நெஞ்சு வெடிக்க, குழந்தைகள் தங்கள் தந்தையை அடையாளம் கண்டு கொண்டு அப்பா என அழைக்க வாய்திறக்க.., அவர்கள் வாயை தன் இருகைகளாலேயும் பொத்திக் கொண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓட்டமாய் ஓடினாள்..!!

அவன் அழகை ஆராதிக்க வேண்டும் என்றதும், அழகழகாய் உடுத்த வேண்டும் என்றதும், அவன் வாங்கி வந்த உடைகளும்.., இப்போது வேறு அர்த்தத்தை கற்பித்தன..!!

தன் மீது அன்பாய், காதலாய் வாங்கி வந்தான் என்று எண்ணி இருக்க அவனோ  அவனுடைய பெண் தோழிகளுக்கு வாங்கியவற்றில் மிச்சம் மீதி கழிந்ததை இவளுக்கு கொண்டு வந்து கொடுத்து இருக்கிறான்!!

அவன் எடுத்துக் கொடுத்த சேலையை கட்டி இருந்தவளுக்கு.., உடலெல்லாம் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் அருவருப்பாய், அசிங்கமாய், கேவலமாக இருந்தது..

தன்னுடைய முட்டாள்தனத்தையும், அவனைப் பற்றி கூறிய உறவுகளை எல்லாம் பழித்த மடத்தனத்தையும், அவன் மீது கொண்ட காதல் பொய்த்துப் போனதையும் எண்ணி எண்ணி நொறுங்கிப் போனாள் பேதை அவள்..!!

பிள்ளைகள் வேறு நடப்பது ஏதும் புரியாமல் "அப்பா நீச்சல் குளத்துல இருக்காங்க..நாங்களும் அப்பாகிட்ட போகணும்.. குளத்தில் இறங்கி விளையாடனும்" என்று அழுகவும் தன்னைத் தேற்றுவதா இல்லை பூ போன்ற பிள்ளைகளைத் தேற்றுவதா என்பது புரியாமல் மேலும் கலங்கிப் போனாள்... உற்ற தோழிகள் அப்போதும் உடனிருந்து அவளைத் தேற்றினர்… சாந்தினி பிள்ளைகளை கையோடு அழைத்துச் செல்ல, நிவேதாவும் அப்போது வரை அறையில் தங்கியிருந்த சந்திரிகாவும் ஒருவழியாய் தமயந்தியை தேற்றி அவளுக்கு பதிவு செய்து இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர்…  மெல்ல மெல்ல அவளைத் தேற்றி நிதர்சனத்தை புரிய வைத்தனர்.

தான் எவ்வளவு பழித்தும் தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு அனைத்தையும் அவள் அறியும்படி செய்த சந்திரிக்காவை எண்ணி அவளுக்கு பெருமையாகவும் அவமானமாகவும் இருந்தது…  அவளிடம் மன்னிப்பு வேண்டினாள்.. சந்திரிகா, " அதெல்லாம் பரவாயில்ல டா... நீ இது எதுவுமே தெரியாமல் காலம்பூரா அந்த ஆளுக்கு சேவை செஞ்சி வாழ்ந்து உன்னுடைய சுயத்தையே தொலைச்சுடுவயோனு நினைச்சு தான் உன் கிட்ட சொன்னேன்…  நீ புரிஞ்சுக்கிற நிலமைல இல்ல… ஆனா இப்போ நீ எல்லாம் தெரிஞ்சுகிட்டே.. தீர்க்கமா ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்க.. நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்கு சப்போர்ட் பண்ண நாங்க தயாரா இருக்கோம் " என்றாள்

இப்படிப்பட்ட உற்ற தோழிகள் கிடைத்ததை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து அவள் நான் கொஞ்சம் யோசிக்கணும் அதுக்கு முன்னாடி எனக்கு மாத்திக்க ஒரு டிரெஸ் வேணும் குழந்தைகளுக்கும் வேற டிரஸ் வாங்கி கொடுங்க இந்த துணிகள் வேண்டாம் என்றாள்... அதன்படியே உடைகளை மாற்றிவிட்டு, அவளுக்கு தனிமை கொடுத்து குழந்தைகளை தோழிகள் கவனித்துக் கொண்டனர்..

ஒரு நாள் முழுக்க அமைதியாக இருந்தவள் மறுநாள் தீர்க்கமாய் ஒரு முடிவிற்கு வந்தாள்..

நேரே நிவேதாவிடம் சென்றவள் நான் உன் கூட பூனே வரலாமா? என்று கேட்டாள்…  கணவனால் சொந்த உறவுகளை வெறுத்து ஒதுக்கிவிட்டு இப்போது எப்படி அவர்கள் முன்னே சென்று மீண்டும் நிற்கமுடியும்? இப்படி கேடு கெட்ட குணம் உடைய ஒருவனுடன் வாழவும் அவளுக்கு விருப்பமில்லை…  நினைத்தாலே அருவருப்பும் அசூயையும் அவளைப் பிடித்து ஆட்டியது !!

அவனது காதல் பார்வைகளும், தேன் மொழிகளும் தனக்கே தனக்கு என எண்ணி கர்வம் கொண்டிருந்தவள்…  அந்தபுரத்து நாயகிகளில் பத்தோடு பதினொன்றாக தானும் அவன் வலையில் விழுந்து இருக்கிறோம் என எண்ணவே உடல் கூசிப்போனாள்…

இப்படிப்பட்ட கேவலமான தந்தையிடம் தன் இரு பெண் பிள்ளைகளையும் வளர விடுவதற்கு அவளுக்கு விருப்பமில்லை... அவனுடைய சுயம் தெரிந்தால் நாளை பெண் பிள்ளைகளின் வாழ்வு என்னவாகும் என்று அஞ்சி நடுங்கினாள்…

எப்போதும் தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவள்..வ்இப்போதும் தனக்காக முடிவெடுக்காமல் தன் இரு பெண் பிள்ளைகளுக்காகவே தீர்க்கமாய் ஒரு முடிவிற்கு வந்தாள்… அவர்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்றால் அவர்களை யார் என்றே தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டும்.. குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டும் … அவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும் … தன்னிடம் படிப்பு இருக்கிறது , கையில் ஒரு கலை இருக்கிறது..,  அதை வைத்து எப்படியேனும் முன்னேறி குழந்தைகளை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என எண்ணினாள்..

எனவே புனே செல்லும் முடிவை எடுத்தாள்.. அவளது முடிவிற்கு முழு ஒத்துழைப்பு தந்த தோழிகள் அவளுக்கு உறுதுணையாக நின்றனர்…  முதலில் பிஏ ஆங்கிலம் படிப்பிற்கு வேலை அமையும் வரை சும்மா இருக்க வேண்டாம் என்று தானறிந்த தையல் கலையின் மூலமாக சிறிது சிறிதாக வருமானம் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்தாள்.. வீட்டில் அவன் வாங்கி கொடுத்த எந்த உடமைகளையும் தொட பிடிக்காமல், வீட்டின் பக்கமே செல்லாமல் தான் அணிந்திருந்த நகைகளில் சிலவற்றை அடகு வைத்து அந்த பணத்தை கையில் எடுத்துக்கொண்டு தன் இரு பெண் பிள்ளைகளையும் கையில் பிடித்துக்கொண்டு தோழியுடன் பயணப்பட்டாள் புது வாழ்க்கையைத் தேடி..!!

மூன்று நாட்கள் வெள்ளைக்காரியுடன் கொட்டம் இட்டவன்..  கடைசியாய் கை நிறைய பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்தான்...  ஆனால் அவனை வரவேற்றது வெறிச்சோடிய வீடும், ஆழ்ந்த நிசப்தமும் தான்...

தன் மனைவியை காணாது பதறித்தான் போனான்... ஒரு நொடி. என்ன தான் தேவதை போல் மனைவி இருக்க, குரங்கு போல் வேறொன்று கேட்டாலும்..  வீட்டில் இருக்கும் மனைவி மீதும் சிறிது அன்பு இருக்கத்தான் செய்கிறது வக்கிரம் பிடித்த ஆண் ஜென்மத்திற்கு...!!

ஊரில் உள்ளவன் மனைவியை எல்லாம் அடைய ஆசைபட்ட இராவணன் தன் சொந்த மனைவி மண்டோதரியை உயிரினும் மேலாக நேசித்தானாம்..!! சீதையைக் கூட.., 'என்னவள் ஆகிவிடு அந்தப்புரத்தில் மண்டோதரிக்கு அடுத்ததாய் வைக்கிறேன்..' என்று கூறினானே தவிர மண்டோதரியின் இடத்தை தருவேன் என்று கூறவில்லையாம்...

என்றும் தன்னுடைய வாழ்விற்கும் நாட்டிற்கும் மண்டோதரியே மகாராணி என்று கர்வம் கொண்டிருந்தானாம்...

அவனைப் போல அரிச்சந்திரனுக்கும் ஊர் எல்லாம் மேய்ந்தாலும் வீட்டில் அழகாய் அம்சமாய் இருந்த மனைவி தான் மனதில் உறுதியாய் இருந்தாள்..!!

அவள் வீட்டை விட்டு சென்றதும் அவளை தேடி தவித்தவன் காணாது சோர்ந்து போனான்..

அவளோ, முட்டாள்தனமாக மரணத்தை யாசிக்காமல், வீம்பாக அவனிடம் இருந்து வரும் பொருளாதார பாதுகாப்பை மறுக்காமல்,

"இந்திய அரசியலமைப்பு சட்டமும், இந்து திருமணச் சட்டமும் கொடுத்த பாதுகாப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தாள்..!!

ஆதாரத்துடன் அனைத்து குற்றங்களையும், தகவல்களையும் நீதிமன்றத்தில் நிரூபித்தவள் தன் குழந்தைகளுக்கான படிப்பு, வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார பாதுகாப்பை கணவனிடமிருந்து பெற்றாள்...

மேலும் அவனின் துர் நடத்தைகளை சுட்டிக்காட்டி பிள்ளைகளின் முழு பொறுப்பையும் அவளிடமே வைத்துக் கொண்டாள்..

அவளுடைய தேவைக்கு அவளுடைய உழைப்பு இருந்தாலும்.. இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு கணவனிடமிருந்து எதுவும் வேண்டாம் என்று மறுப்பதற்கு சூழ்நிலையும், நிதர்சனமும் ஒத்துழைக்கவில்லை..!! பெற்ற தாய் தகப்பனும், கட்டிய கணவனும் கைவிட்டாலும் அரசியலமைப்புச் சட்டம் பெண்களை கைவிடுவதில்லை...!!

துணிந்து முடிவு எடுத்து தன் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு அவனிடம் இருந்து விலக்கும் பெற்றாள்..!!

மனக்காயங்கள் ஆற ஆண்டுகள் பல செல்லலாம்... அவள் ரணத்தை ஆற்றி அவளை மீட்டெடுக்க ஒரு தேவன் வரலாம்.., வராமலும் போகலாம்..!! அப்படி வந்தால், அவனை அவள் ஏற்கலாம்..இல்லை நிராகரிக்கலாம்.. எந்த முடிவு எடுத்தாலும் அது அவளின் முழு சுதந்திரத்திற்கு உட்பட்டது.. அவளை விமர்சிக்கவும், கேலி செய்யவும் எவருக்கும் உரிமை இல்லை.

அரிச்சந்திரனுக்கு மனைவியும் பிள்ளைகளும் மட்டும் போக வில்லை... அவனது மரியாதை, கௌரவம், அந்தஸ்து எல்லாம் போய்விட்டது.. சொந்தம் பந்தம் அனைத்தும் காரித் துப்ப, ஊரே தூற்ற, இருந்த செல்வாக்கு எல்லாம் ஒரே அடியாய் சரிய, முத்து முத்தான குழந்தைகளும், கட்டிய மனைவியும் வீட்டில் இல்லாது அவன் வாழ்வே வெறிச்சோடிப் போனது...

இனி அவன் யாரிடமும் பொய்யுரைக்க தேவை இல்லை..  அவனது வாழ்வும் அவனது இஷ்டமே.. நாளைக்கு ஒன்றாய், ஊருக்கு ஒன்றாய் சேர்த்துக் கொண்டும் திரியலாம். .. அனைத்தையும் விட்டுவிட்டு நல்லவனாய் மாறி வாழவும் செய்யலாம்.. !!

ஒவ்வொருவரின் மனநிலையும், ஒவ்வொரு மாதிரியானது... யாரையும் நிர்ணயிக்கவும், எடை போடவும் யாருக்கும் உரிமை இல்லை..!!

நன்றி


Quote
Ezhilanbu
(@admin)
Member Admin
Joined: 10 months ago
Posts: 275
29 May 2019 4:49 pm  

அருமை ராஜி...

மனைவியின் அன்பை தன் தப்புக்கு சாதகமா பயன் படுத்தி கொள்ளும் கணவனுக்கு தேவையான பதிலடி அவள் கொடுத்து விட்டாள்.

நல்லா சொல்லிருக்கீங்க❤️❤️❤️

 


Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: