Forum

Notifications
Clear all

சத்தியம் அத்தியாயம்-2  

  RSS

Thuvas
(@thuvas)
Member Moderator
Joined: 2 months ago
Posts: 17
25/02/2020 3:20 am  

அத்தியாயம்-2

பின்னால் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தார் தங்கம். அங்கே நின்றிருந்த அண்ணனைப் பார்த்து கண்கள் விரிய சந்தோஷப்பட்டார். உண்மையான சந்தோஷம்." சொல்லவே இல்லையே. நீங்கள் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏதாவது பிரமாதமாக சமைத்து வைத்து இருப்பேனே. ஆனால் இரண்டு மூன்று நாட்களாகவே நீங்கள் என் கனவில் வந்து கொண்டே இருக்கிறீர்கள். எனக்கு காரணம் தெரியவில்லை" என்று சொன்ன தங்கையின் தோளில் கையை வைத்து உள்ளே அழைத்து சென்றவர் மெதுவாக கேட்டார்." அண்ணன் வந்து கனவில் என்ன கேட்டேனாம்" என்று கேட்டார் .அதற்கு தங்கம் "ஏதோ என்னிடம் நீங்கள் கேட்க வருகிறீர்கள் அண்ணா. என்ன கேட்க வருகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்கள் கையை நீட்டி என்னிடம் இருக்கும் ஏதோ ஒரு அரிய பொருளை நீங்கள் கேட்கிறீர்கள். நான் கண்களில் நீர் உடனேயே அந்தப் பொருளை உங்கள் கையில் நான் தூக்கி கொடுக்கிறேன்" என்று சொன்னார். தங்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பை நினைத்து வியந்தார் ஜனார்த்தனன். உண்மையாகவே இரண்டு மூன்று நாட்களாகவே அவருக்கு இந்த முடிவு தோன்றிக் கொண்டேதான் இருந்தது. அதுவும் நேற்று மருத்துவர் முடிவாக முடித்து விட்ட பின்னர் மனது மிகவும் தேடிக்கொண்டிருந்தது. அப்பொழுது  "ஒரு இரண்டு நாள் நான் இங்கே தங்கிவிட்டு செல்லலாமா?" என்று கேட்டார். அதற்கு பதறிப்போனார் தங்கம். "அண்ணா நீங்கள் அப்படி கேட்கலாமா? இது உங்கள் வீடு. இங்கே நாங்கள் இருக்கிறோம் அவ்வளவு தான். ஆனால் இங்கே தங்க வேண்டும் என்றால் வீட்டில் ஏதாவது பிரச்சனையா அண்ணா? அண்ணியுடன் ஏதாவது பிரச்சனையா? இல்லை பிள்ளைகளுடன் ஏதாவது பிரச்சனையா? எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன். பொறுமையாக போங்கள் பொறுமையாக போங்களென்று. என்ன பிரச்சனை?" என்று பதறித் துடித்தார். அவரை அமைதிப்படுத்திய ஜனார்த்தனன்" இல்லை எனக்குத்தான் அந்த வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ஒய்வு தேவை தங்கம். என்னவோ உன்னை பார்த்துக்கொண்டே இரண்டு நாள் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. உனக்கு ஞாபகமிருக்கிறதா? சின்ன வயதில் நான் அப்படித்தான் ஏதாவது பயந்துவிட்டேன், இல்லை ஏதாவது பரிட்சை என்று நான் பதட்டமாக இருக்கிறேன் என்றால் கொஞ்ச நேரம் உன்னையே வந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். நீ சின்னப் பெண்ணாக இருப்பாய். ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பாய். என்னை பார்க்க கூட மாட்டாய். ஆனால் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே என் மனதில் இருக்கும் அத்தனை எதிர்மறையான எண்ணங்களும் பறந்துவிடும். அதனால் தான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.  

உள்ளே அழைத்து சென்று அவருக்கு உணவளித்தார்.முள்ளங்கி சாம்பார், பிரண்டைத் துவையலும், கத்தரிக்காய் கூட்டும் அவருக்கு இதமாக இருந்தது. வாய்க்குள் நுழையாத பெயருள்ள உணவுகளை செய்யச்சொல்லி கவிதா அதை பெருமையாக தானும் உண்டு அவரையும் கட்டாயப்படுத்தி உண்ண வைக்கும் கொடுமையிலிருந்து இரண்டு நாள் தப்பித்துக் கொண்டேன் என்று நினைத்துக்கொண்டார் ஜனார்த்தனன். தங்கையின் கைப்பக்குவம் சாதாரண உணவையும் நளபாகமாக்கியிருந்தது. பல நாட்களுக்குப் பிறகு நன்றாக உண்டு விட்டு உறங்கி விட்டார் ஜனார்த்தனன்."மாமா" என்ற குரல் அவரை எழுப்பியது. அவர் முன்னே நின்று கொண்டிருந்தான் அருள்மொழி. அவனை வீட்டிலிருந்து கவிதா அனுப்பும்போது ஒரு ஏழு வயது இருக்கும். அதன் பின்னர் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்து பார்க்க முடியவில்லை. ஒரு தடவையோ இரண்டு தடவை மட்டும் தான் வந்திருக்கிறார். அந்த நேரங்களில் இவனை ஊட்டி ஹாஸ்டலில் தங்கம் சேர்த்துவிட்டார். அதனால் வளர்ந்த பின் இவனை இப்பொழுதுதான் முதல் முறையாக பார்க்கிறார்.ராஜா போல இருந்தான்.கருகரு மீசையும் சுருள் முடியும் நீண்ட நாசியும் பார்ப்பதற்கு கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தான்.அவனை கட்டிக்கொண்டார் ஜனார்த்தனன். மனதிற்குள் " இவனை விட நன்றாக இருப்பான் சித்தார்த்தன். ஆனால் அவன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. இந்தப் பிள்ளையின் வாழ்க்கையாவது நன்றாக இருக்கவேண்டும் கடவுளே. தயவுசெய்து இவனுடன் என்றும் இரு" மனதிற்குள் நினைத்துக் கொண்டார். கண்களில் இருந்து இரண்டு சொட்டு நீர் விழுந்தது. அது அருள்மொழியின் கையில் பட்டு தெரித்தது. "என்ன மாமா அழுகிறீர்கள்?" என்று ஒரு வார்த்தை தான் சொன்னான். வீட்டில் எந்த மூலையில் இருந்தாரோ தெரியவில்லை. தங்கம் பறந்து கொண்டு ஓடி வந்தார்." அண்ணா அழுகிறீர்களா? என்ன நடந்தது?  நீங்கள் வரும் போதே நினைத்தேன். ஏதோ ஒன்று இருக்கிறது" என்று  சொன்ன தங்கையை அமைதிப்படுத்தி விட்டு" உன் மகள்களை நான் பார்க்க வேண்டுமே" என்று கேட்டார் ." சரி இப்பொழுது நான் உங்கள் மருமகள்களை வரச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் ஏன் அழுதீர்கள் என்பதை நிச்சயமாக எனக்கு சொல்ல வேண்டும்" என்ற நிபந்தனையுடன் வானதியையும் கடைசி மகள் குந்தவையும் அழைத்தார்.

தங்கத்திற்கு மூத்த மகள் வானதி இரண்டாவது மகன் அருள்மொழி கடைசி கடைக்குட்டி தான் குந்தவை. தங்கத்தின் கணவர் கல்கியின் விசிறி.அதனால் பிள்ளைகளுக்கு எல்லாம் பொன்னியின் செல்வர் கதாபாத்திரங்களின் பெயரையே வைத்திருந்தார் .  ஆனால் அவருக்கு நீண்ட காலம் வாழ கொடுத்து வைக்கவில்லை. வெளியில் இருந்து கோயிலுக்கு மாலை நேர பூஜைக்கு பூ பறித்துக் கொண்டு உள்ளே வந்தாள் வானதி. அவள் நடந்தால்கூட பூமிக்கு வலிக்கும்போல மெதுவாகவே நடந்தாள். ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான அழகு. ஒரு தங்கப் பதுமை தான். பின்பக்கத்திலிருந்து அம்மாவிற்கு தண்ணி அள்ளி கொடுத்து விட்டு முன்னால் வந்தாள் குந்தவை.அவளும் வானதியைப் போல் மிகவும் அழகாக இருந்தாள். அவளை விட அழகாகவே இருந்தாள். ஆனால் வானதியைவிட மிகவும் அமைதியாக இருந்தாள். அவள் முகத்தில் ஏதோ ஒரு அமைதியும் சாந்தமும் இருந்தது. யாராலும் அவளிடம் இருந்து பறிக்க முடியாத ஒரு சிரிப்பு எப்பொழுதும் அவளுடைய கடைவாயில் இருந்து கொண்டே இருந்தது. ஏதோ அவளைப் பார்த்ததும் மனம் லேசானது போல இருந்தது. ஜனார்த்தனன் சிரித்துக்கொண்டே கேட்டார். "எப்பொழுதும் கடைசி கடைக்குட்டி மிகவும் துடுக்காக இருக்குமே .ஆனால் இந்த வீட்டின் கடைக்குட்டி மற்ற இருவரையும் விட மிகவும் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கிறாளே' என்று கேட்டார். தங்கம் பெருமையுடன் சொன்னார் "இவர்கள் இருவரையும் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைத்தேன். ஆனால் என்னால் தனியாக இருக்க முடியாமல் இவளை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். பக்கத்தில் இருக்கும் ஒரு பாடசாலைக்கு அனுப்பினேன். பக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண கல்லூரிக்கு அனுப்பினேன்.என்னுடனே இருந்து வளர்ந்து விட்டதால் அவள் என்னை போலவே இருக்கிறாள் என்று நினைக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே மகளின் தலையை தடவி விட்டார். 

பிள்ளைகளை எல்லாம் அவர்கள் வேலையை பார்க்கச் சொல்லிவிட்டு தங்கத்தை தனியாக அழைத்துக் கொண்டு சென்றார் ஜனார்த்தனன். அங்கே அவர்கள் வீட்டில் முன்னால் ஒரு மல்லிகை பந்தலும் அதன் கீழே ஒரு பெஞ்சும் இருக்கும். இருவரும் சென்று அதில் அமர்ந்தனர். சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜனார்த்தனன் தானே அந்த அமைதியை கலைத்து பேச ஆரம்பித்தார் 'இப்பொழுது நான் உன்னிடம் ஒரு யாசகம் கேட்க போறேன். கொடுப்பாயா?". பதறிப்போனார் தங்கம் " அண்ணா என்ன வார்த்தை இது யாசகம் ?  உரிமையோடு கேளுங்கள் "என்று சொன்னார். கண்கள் நிலத்தைப் பார்க்க உள்ளம் குறுகுறுக்க   "வானதியை என் சித்தார்த்தனுக்கு தருகிறாயா?" என்று கேட்டார். அதிர்ந்து போனார் தங்கம். ஏற்கனவே திருமணமானவன்.
அவனுக்கு இரண்டாம் தாரமாக  புது பூவான என் மகளை கேட்கிறாரே என்று மனதில் ஒரு நொடி தோன்றியது. அடுத்த நொடியே அண்ணன் நிச்சயமாக காரணமில்லாமல் இதைக் கேட்க மாட்டார். பிள்ளைகளின் மேலும், அவர்களின் படிப்பில் மேலும் இங்கு வராவிட்டாலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட அண்ணன் நிச்சயமாக வானதியின் வாழ்வை அழித்து விட மாட்டார். என்பதில் உறுதி கொண்டவராக நிமிர்ந்து அண்ணனின் முகத்தை பார்த்து கேட்டார் "அண்ணா நீங்கள் கேட்டு நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் காரணம் கேட்க முடியும் அல்லவா?" என்று கேட்டார். அதற்கு நிமிர்ந்து பார்த்து" நிச்சயமாக கேட்க முடியும். அதற்கான அத்தனை உரிமைகளும் உனக்கு உண்டு தாயே,  நான் என்னுடைய குடும்பத்தை நேராக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். உன் அண்ணியை பற்றி உனக்கே தெரியும். அவளால் ஒரு  குடும்பத்தை நல்லபடியாக நடத்த முடியாது . அவள் என்ன அநியாயம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். நானும் வாராவாரம் உனக்கு தொலைபேசி மூலம் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறேன். இப்பொழுது ஒரு மிகவும் மோசமான நிலைமையில் நான் இருக்கிறேன். அவசரமாக என்னுடைய குடும்பத்தை சரிசெய்யவேண்டும். சித்தார்த்தன் கட்டுக்கடங்காமல் யாருக்கும் அடங்காமல் கார் ரேசில் சுத்திக் கொண்டு இருக்கிறான். இரண்டு தடவை விபத்து நடந்துவிட்டது. தப்பித்து விட்டான் .மூன்றாவது முறையும் அதுவே நடக்கும் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது அல்லவா? எனக்கு அவனுக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு இப்பொழுது என் தலை கவிழ்ந்த குடும்பத்தை நேர்ப்படுத்த ஒரு திறமையான புத்திசாலித்தனமான ஒரு நல்ல பெண் தேவைப்படுகிறாள். என் மகனுக்கு மனைவியாக சகல அதிகாரங்களுடன் அவள் அந்த வீட்டில் கோலோச்ச வேண்டும். அங்கிருப்பவர்களை எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதை உன் போன்ற குணம் உள்ள பெண்ணால் மட்டும் தான் முடியும் என்று நான் நம்புகிறேன் தங்கம்" என்று சொல்லி முடித்தார். 

தங்கம் சிறிது நேரம் யோசித்தார் " அண்ணா அவசரமாக குடும்பத்தையும் சீர்படுத்த வேண்டிய நிலைமை என்றால் என்ன நிலைமை?" என்று கேட்டார். யாரிடமும் சொல்லி விடாதே என்று சத்தியத்தை வாங்கிக் கொண்டு தன்னுடைய உடல்நிலையைப் பற்றி சொன்னார் ஜனார்த்தனன். உடைந்து போய் விட்டார் தங்கம். சின்ன குழந்தை போல அண்ணனின் கையை கட்டி அழ ஆரம்பித்துவிட்டார் . தலையை தடவி விட்டுக் கொண்டே ஜனார்த்தனன் சொன்னார் "என்ன செய்வது தங்கம், வாழ்க்கை முடியப் போகிறது என்றால் நீ அழுதாலோ நான் அழுதாலோ திரும்பி வரப் போவது அல்ல. ஆனால் வெளிநாட்டில் இதற்கு மருந்து  இருப்பதாகவும் அங்கே சென்றால் குணப்படுத்துவதற்கு 5 சதவீத வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ராகவன் விடமாட்டேன் என்கிறான்"என்று சொன்னார். தங்கை கைகளை பிடித்துக் கொண்டார். "அண்ணா தயவு செய்து வெளிநாட்டுக்கு செல்லுங்கள். 5% ஆக இருந்தாலும் அதை செய்து பாருங்கள். உங்கள் நல்ல மனதுக்கு நிச்சயமாக நீங்கள் நல்லபடியாக திரும்பி வருவீர்கள்" என்று சொன்னார்.அதற்கு ஜனார்த்தனன்" நான் வெளிநாட்டுக்கு செல்ல தான் போகிறேன் தங்கம். அதற்கு முதல் என் வீட்டை ஒரு உறுதியான கைகளில் கொடுத்துவிட்டு செல்ல விரும்புகிறேன். அதற்காகத்தான் வானதியை கொடுப்பாயா என்று கேட்கிறேன். கொடுப்பாயா தங்கம்?" என்று கேட்டார். அதற்கு உணர்ச்சி பொங்க தங்கம் சொன்னார் "அண்ணா எங்கள் உடலில் ஓடும் ரத்தம் உங்களுடையது. சாப்பிட்ட சாப்பாடு இருந்த வீடு அத்தனையும் உங்களுடையது. அவர்கள் படித்த படிப்பு உடுக்கும் உடை அத்தனையும் நீங்கள் கொடுத்தது‌. அப்படி இருக்கும்போது உங்களுக்கு நிச்சயமாக இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் .நான் இப்பொழுது உங்களுக்கு நம் குல தெய்வத்தின் மேல் ஆணையிட்டு சத்தியம் செய்துத் தருகிறேன். என் மகள் உங்கள் குடும்பத்தை சீர்படுத்தி காப்பாற்றுவாள். இது சத்தியம்" என்று உணர்ச்சி பெருக்கெடுக்க சொன்னார். நன்றி சொல்லி  அவர் கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டார் ஜனார்த்தனன். 

பெரியவர்கள் இப்படி ஒரு முடிவெடுக்க வானதி கையில் கூடையுடன் கோயிலுக்குச் சென்றாள். கோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில் திடீர் சலசலப்பு என்னவென்று எட்டிப் பார்த்தால் அங்கே ஒரு இளைஞன் இன்னொரு இளைஞனை போட்டு அடித்துக் கொண்டிருந்தான்.என்ன என்று கேட்டதற்கு அடி வாங்குபவன் அங்கிருக்கும் ஒரு பெண்ணின் ஜடையை பிடித்து சேட்டை செய்து கொண்டே இருந்ததாகவும் அந்த ரோட்டில் நடந்து போனவர்கள்  அத்தனை பேரும் பார்த்துவிட்டு பேசாமல் இருந்ததாகவும் அடி கொடுத்துக்கொண்டிருப்பவன் அப்பொழுதுதான் பைக்கில் வந்தவன் அதை கண்டு விட்டு அடிக்க ஆரம்பித்து விட்டான். என்றும் சொன்னார்கள். மெதுவாக வானதி கூப்பிட்டாள்."நிரஞ்சன் நேரமாகிறது போகலாமா?' என்றாள். அடி கொடுத்துக் கொண்டிருந்தவன் திரும்பி "இரு இன்னும் இரண்டு அடி கொடுத்து விட்டு வருகிறேன்' என்றான்." இல்லை வா போகலாம்" என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றாள். நிரஞ்சன் வேறு யாருமல்ல அவளுடைய தகப்பனின் அக்கா மகன். அவனும் அவளுக்கு முறைதான். அவர்கள் இரண்டு வருடமாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் காதல் கோயிலுக்குப் போகும் போதும் வரும்போதும் வளர்ந்து வருகிறது . அவளை பைக்கில் பின்னால் ஏறி நிரஞ்சன் வண்டியை ஸ்டார்ட் செய்து கோயிலுக்கு நேராக விட்டான்.

அப்பொழுது மெதுவாக அவன் காதின் பக்கத்தில் வானதி சொன்னாள் " மாமா வந்திருக்கிறார்" என்றாள். நிரஞ்சன் கேட்டான் "ஏதாவது பிரச்சனையா?"." அப்படித்தான் தெரிகிறது ஆனால் என்னவென்று சரியாக தெரியவில்லை" என்றாள் வானதி.நிரஞ்சன் பரபரப்பானான்." அப்படி என்றால் இன்று நான் வந்து நம்முடைய திருமணத்தைப் பற்றி அவரிடம் பேசி விடவா?" என்று கேட்டதற்கு அவள் "இல்லை அவர் ஏதோ பிரச்சனையுடன் வந்து இருக்கிறார். அவரிடம் நம் பிரச்சினையை கொண்டு போய் எதுக்கு அவரை குழப்ப வேண்டும். அப்படியே அடுத்த தடவை வரும்போது இதைப் பற்றி பேசிக் கொள்ளலாமே" என்று சொன்னாள்.ஒருவேளை அவள் சரி என்று சொல்லி நிரஞ்சன் அன்றே பேசியிருந்தால் பிற்காலத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் தடுக்கப்பட்டிருக்கலாம் . 

இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு மறுபடியும் அவளை கோயிலிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து வீட்டுக்கு கொஞ்சம் தூரத்திலேயே இறக்கிவிட்டு விட்டு அவளை விட்டு பிரிய மனசில்லாமல் வண்டியை திருப்பி கொண்டு சென்றான் நிரஞ்சன். இவர்கள் காதலிப்பது குந்தவையை தவிர வேறு யாருக்குமே தெரியாது. 

வீட்டில் இவள் காதல் விஷயம் தெரியாது, இவளுக்கு கல்யாண சேதி சொல்ல காத்திருந்தார் அவள் தாய் .உள்ளே சென்ற வானதியை ஆர்வமாக தாய் அழைத்து செல்வதை பார்த்த குந்தவையும் பின்னாலேயே சென்றாள். உள்ளே சென்று தாய் அவளிடம் "உனக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நிச்சயம் செய்திருக்கிறேன்" என்று சொன்னார். அதிர்ந்து போனாள் வானதி. வானதிக்கும் மேலே அதிர்ந்து போனாள் குந்தவை. வானதியின் அத்தனை ரகசியங்களும் தெரிந்த குந்தவை , இதற்கு வானதியின் பதில் என்னவாக இருக்கும் என்று அவள் முகத்தையே பார்த்தாள்.  வானதி சிலையாக நின்றாள். தங்கம் மேலும் பேசிக்கொண்டு சென்றார்." இத்தனை நாள் நமக்கு உணவளித்து நமக்கு வாழ்வளித்த மாமா இப்பொழுது நம்மிடம் வேண்டி நிற்கின்றார். அவர் மகனைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் . அவன் மனைவி இறந்துவிட்டாள். அவனுக்காக உன்னை கேட்கிறார்" என்று சொன்ன போது குந்தவை தான் முதல் குரல் எழுப்பினாள்."அம்மா இரண்டாம் தாரமாகவா அக்காவை..." என்றாள். உடனே "அப்படி சொல்லி விடாதே குந்தவை. நமக்கு வாழ்வளித்த மாமா இப்பொழுது தன் மகனின் வாழ்க்கையை மலர வைக்க நம்மிடம் வந்து யாசகம் கேட்கிறார். அவருக்கு நிச்சயமாக செய்வதாக நான் சத்தியம் செய்துவிட்டேன்' என்று சொன்னார். பின்னாலேயே வந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அருள் மொழியும் அதிர்ந்து போனான். தாய் அவ்வளவு இலகுவாக சத்தியம் செய்து விட மாட்டார். ஆனால்  செய்து விட்டால் நிச்சயமாக அதை காப்பாற்றியே தீர வேண்டும் என்று உயிரைக்கூட கொடுப்பார். தாயின் இயல்பை நன்றாக அறிந்த அந்த மூன்று கன்றுகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். வானதிக்கு "எல்லாம் முடிந்தது. என் தலையெழுத்து இதுதானோ?" என்று தோன்றியது.தாயார் அவ்விடம் விட்டு அகன்ற பிறகு குந்தவை மெதுவாக அவளிடம் கேட்டாள்." அக்கா உண்மையைச் சொல்லி விடுகிறாயா?" . அதற்கு வானதி அவளைத் திரும்பிப் பார்த்து "அம்மாவை இழந்து விடுவோம் குந்தவை.  அம்மா உயிருக்கும் மேலாக சத்தியத்தை மதிப்பவர்கள். சத்தியம் செய்து கொடுத்து விட்டு அது நடக்கவில்லை என்றால் நாம் அம்மாவை இழந்து விடுவோம்" என்று கண்ணீருடன் சொன்னாள் .இருவரும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள்.......காலமும் நேரமும் அவர்களுக்காக நிற்காமல் ஓடியது. தங்கத்திடம் சம்மதம் வாங்கிய ஜனார்த்தனன் இதை தன் குடும்பத்திடம் சொல்லி சித்தார்த்தனிடம் சம்மதம் வாங்க உடனடியாக புறப்பட்டு சென்றார்...

சந்திப்போம்.......


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: