Forum

அத்தியாயம் 2  

  RSS

Sivaranjani
(@sivaranjani)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 5
29/01/2020 10:58 am  

அவனது டைரிக் குறிப்பிலிருந்து ....

இறைவா! 

என் வாழ்வின் ஓவியமாக  அவளை எனக்குப் பரிசளித்துவிட்டு ,

என் கண்களைக் காவு  வாங்கிவிட்டாயே!

எப்போது  நீ இரக்கம் கொள்வாய் என் மீது?

***********************************

   அதன் பின் எனக்கு எங்கும் எப்பொழுதும் அவன் நினைவே. என்னால் சரியாக  உண்ண இயலவில்லை; உறங்க முடியவில்லை; ஒழுங்காக பாடம் நடத்தக் கூட  இயலவில்லை.

    சதா சர்வ காலமும், அந்த நிகழ்வும் அவன் நினைவும் மட்டுமே. எந்த ஒரு ஆண்மகனும் இந்த அளவு என் செயல்பாடுகளை பாதிக்கும் அளவு என் சிந்தையை நிறைத்ததில்லை.

   நான் பதின் பருவப் பேதை அல்ல. என் அகவை இருபத்தி ஐந்து. இது ஹார்மோன்களின் கூச்சல் அல்ல என்பது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.

    ஏனெனில் எனக்கு அவனை எண்ணினால், எந்தப் பட்டாம்பூச்சியோ, உடலெங்கும் பூப் பூத்தது போன்ற சிலிர்ப்போ, வைரமுத்துவின் வர்ணனை போன்ற உருவமில்லா உருண்டை என் வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் உருளவோ இல்லை.

மாறாக, இனம் புரியா ஏக்கமும், வலியும் என் மனதினை வதைக்கிறது. அவன் கண்கள் என் மனக்கண்ணில் வரும் பொழுதில் எல்லாம் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைகிறது.

இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக உள்ளது. அத்துடன்  யார் என்றே தெரியாத ஒருவனைப் பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருப்பது மிகுந்த குற்ற உணர்ச்சியைக் கூட்டியது.

நானும் என்னை எப்படி எல்லாமோ திசை திருப்ப முயன்றேன். தியானம் எல்லாமும் செய்தேன். அப்பொழுதும் அவன் முகமே நிற்கிறது. சொல்லப் போனால் ஏறத்தாழ முயலாத தவம் போல் அவனை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

  ஒருநாள் அவன் என்னைப் பார்த்து உடைந்து அழுவது போன்றும், கண்ணில் ஏக்கம் தெறிக்க, என்னைப் பார்ப்பது போலவும் கனவு வந்தது. அதன் பின் என்னால் சுத்தமாக நிம்மதியாக இருக்க இயலவில்லை.

   அவனைப் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று மனம் ஏங்கியது. இது என்ன முட்டாள்த்தனம் என்று ஆயிரம்தான் அறிவு இடித்துரைத்தாலும் மனம் ஏற்க மறுத்தது.

  கடவுள் முன் மண்டியிட்டு அழுதேவிட்டேன். மனதின் இந்த அர்த்தமற்ற அலைப்புறுதலை அடக்கி ஆசுவாசம் கொள்ள வேண்டி.

அது கடவுளின் காதில் விழுந்துவிட்டதோ என்னவோ, நான் பக்கத்து ஊரிற்கு ஒரு வேலையாக பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன்.

  அப்பொழுது அவனை அதே பேருந்தில் கண்டேன். ஆனால் ஏன்தான் கண்டேனோ என்று வெந்து வெதும்பும் அளவு என்னை சில்லு சில்லாய் உடைத்துவிட்டான்! இனி அவனைக் காணவே கூடாது என்று எண்ணுமளவிற்கு!

*********************************

  அவளின் மாமாவின் மீதிருந்த கோபத்தினால்,
“வணக்கம் மாமா! வாங்க!  எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க?”
என்று வணக்கம் வைத்து மிகுந்த சம்பிரதாயமாகப் பேசவே, அவருக்கு ‘சுருக்' என்று தைத்தது. அவள் நிலை புரிந்ததால் அவரும் எதுவும் பேசாமல்,
“நல்லா இருக்கேன்டா. இப்போதான் வந்தோம். கார்ல உட்காருடா! போகப் போகப் பேசிக்ககலாம் என்றார்.”

அவளுக்கு அவரிடம் நறுக்கென்று கேட்க நாற்பது கேள்விகள் இருந்தாலும், எப்படி ஒரு அயலாமவன் முன்பு பேசுவது என்று அமைதி காத்தாள்.

  ஆண்கள் இருவரும் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள,இவள் பின்னே அமர்ந்தாள்.

  அவளின் மாமா,  "கோவப்படாத சஷி. அவரை ஒரு முறை பார்த்துப் பேசிட்டு அப்பறமா பொறுமையா கோபப்படு” என்றார்.

“வீட்ல போய்ப் பேசிக்கலாம் மாமா"  என்று காட்டமாக வெட்டினாள். சிறிது நேரத்தில் ஏன் தன் வீட்டார் இவ்வாறு செய்கின்றனர் என்று எண்ணி கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. எப்படியோ அதனை வெளியிடாமல் அணை போட்டு வைத்திருந்தாள்.

இதனை ரியர் வ்யூவில் கண்டவன், திடீரென்று “ப்ரோ! ஆனாலும் உங்க மச்சினிச்சிக்கு ரொம்பத்தான் இளகின மனசு!!” என்றான் சிவா.

   அவர் அதிர்ந்து பார்த்தார் குழப்பத்துடன். அவளும் குழப்பத்துடனும், சற்றே எரிச்சலுடனும் பார்த்தாள்.

“ஒரு அப்பாவிப் பையனோட வாழ்க்கைய நெனச்சு கண்கலங்குறாங்க பாருங்க! இந்த மனசுதான் ப்ரோ கடவுள்!"  என்றான் சற்றும் சிரிக்காமல்.

அவனது முதல் வாக்கியத்தில் எரிச்சல் ஏறினாலும், அவன் முடித்த விதத்தில் அவளுக்கு லேசாகப் புன்னகை எட்டிப் பார்த்தாலும், அதனை அடக்கிக் கொண்டு விறைப்பாக,

  “மிஸ்டர்.ஷிவா! உங்க  நக்கலைத் தூக்கி நாய்க்கு போட்டுட்டு, அமைதியா உங்க அலுவல மட்டும் பார்த்தா நல்லா இருக்கும். இல்லனா உங்களுக்காக நீங்க அழ வேண்டி இருக்கும்"  என்று நொடித்தாள்.

  அவள் மாமாவோ இதனைக் கண்டு வந்த சிரிப்பினை அடக்கிக்கொண்டு, இவன் வேற எதுக்கு இப்போ ஏழரைய இழுத்து விருந்து வச்சானோ என்று எண்ணிக்கொண்டு,

“ஏன் ப்ரோ?” என்று மட்டும் கேட்டார். அவனோ ‘ஒன்  மினிட் ப்ரோ’ என்றுவிட்டு காரை ஓரமாக நிறுத்தினான். பின்னர் திரும்பி அவளிடம்,

“ஏங்க, இங்க படுத்திருக்கு பாருங்க இந்த நாய்க்கு என் நக்கலை போடலாமா? இல்ல வேற நாய் பார்க்கலாமா?” என்று மிக 'சீரியஸ்' பாவத்துடன் கேட்டான்.

அவள் மாமாவோ ‘ஏன்டா கிண்டல்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா?!' என்பது போல் பார்த்தவர், இவன் வேற ஏழரைக்கு ஏ.சி போட்டுப் படுக்க வைக்குறானே, என்ன ஆகுமோ தெரிலயே என்று நினைத்துக் கொண்டு,

“ப்ரோ ப்ளீஸ் ப்ரோ! டைம் ஆச்சு! போலாம்" என்றார். அவனும் கிளம்பிவிட்டான். ஆனால் அவள் விடாமல்,

“பேசம நீங்க உங்க நக்கலை அந்த நாய்க்கே போட்டுட்டு நீங்களும் அதுக்குக் காவலா அங்கயே உட்கார்ந்திருக்கலாம்”  என்றாள் ஒரு அடக்கப்பட்ட மென் முறுவலுடன்.

அவர் மாமா “சஷி!" என்று சற்றே அதட்டவே அமைதியாகிவிட்டாள். அவனும் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அதன் பின் எந்த வம்பும் வளர்க்காமல் அமைதியாகவே வந்தான். இவர்களை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பும்போது அவளை சற்றே கவலையுடன் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டான்.

*********************************

   பேருந்தில் அவனைக் கண்டதும் என்னையும் அறியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். வெறுமையான முகத்துடன் தெரிந்தான்.

   அவனும் என்னைப் பார்த்துவிட்டான். பார்த்த மறுகணம், அவன் கண்ணில் தெறித்த வலியும் பதட்டமும் என்னை ஏதோ பிசைந்தது.

   அவன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டான். என்னையும் அறியாமல் அவனைப் பின்பற்றி நானும் இறங்கிவிட்டேன்.

   அவனிடம் சென்று எக்ஸ்யூஸ்மி என்றதுதான் தாமதம், "என் ப்ரண்ட்ஸ் சொன்னது சரியாப் போச்சு! எல்லாம் ஏன்தான் இப்டி இருக்கீங்களோ? ஒரு பர்த் டே விஷ் செஞ்சாப் போதும். பொண்ணுங்க ஈஸியா விழுந்திருவாங்கனு சொன்னானுங்க. நான்தான்  நம்பல. நீங்க இப்போ ப்ரூவ் பண்ணிட்டீங்க. என்னைப் பத்தி உங்களுக்கு  என்ன தெரியும்? ஒரு விஷ் செஞ்சதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்கீங்க. நான் இறங்கின ஸ்டாப்ல இறங்கிட்டீங்க?!  ஒழுங்கா இப்போ வர பஸ்ல போங்க.உங்க வேலையப் பாருங்க!"  என்றுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல்  போய்விட்டான்.

  நியாயமாக அவனின் இந்த அர்த்தமற்ற முரணான செயல்களுக்கும், பேச்சிற்கும், கோபத்திற்கும், எனக்குக் கோபமும் ஆத்திரமும் பற்றிக்கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக எனக்கு மிகுந்த அவமானமாக, குற்ற உணர்ச்சியாக, மிகுந்த வருத்தமாக இருந்தது.

  அவன் செயலும் பேச்சும் சுத்த முட்டாள்தனம். நான் ஒன்றும் அவனிடம் காதல் மொழியுரைக்கவில்லை. அவ்வளவு ஏன் பேசக்கூட இல்லை. அறியாத ஒருவர் வாழ்த்துக் கூறினால், இயல்பாக அவர் யார் என்று அறிய ஆவல் தோன்றும். அத்துடன் அவனுக்காகத்தான் நான் அங்கு இறங்கினேன் என்று எவ்வாறு முடிவுக்கு வந்தான்.

   இப்படியாக இதில் இன்னும் எத்தனையோ பரிமாணங்கள் இருக்க, என்னைப் பேசக்கூட அனுமதிக்காமல் திட்டியது பெரிய அபத்தம்.

ஆனால் நான் அவன் செயலைவிட, என் செயலையே எண்ணி வருந்தினேன். அவன் கேட்டது போல்தானே நான் நடந்து கொண்டுள்ளேன்.

  யாரென்றே அறியாதவனை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கனவிற்காக அவனை எண்ணி வருந்தி, அவனைப் பார்த்ததும் பொது இடத்தில் அவனையே பார்த்திருந்துவிட்டு, அவன் இறங்கிய நிறுத்தத்தில் இறங்கி, எத்தகைய முட்டாள்த்தனம் இது.

  இதில் அவன் யார் என்று அறியும் எண்ணத்திலோ அவனைத் திட்டும் எண்ணத்திலோ நான் இறங்கவில்லை. அவனுக்கு ஏதேனும் பிரச்சனையா என்று அறிய வேண்டும் என்றும், என்னால் இயன்றால் அதனை சரி செய்ய வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே இருந்தது. அவன் திரும்பி என்ன? என்று கேட்டிருந்தால் நான் என்ன பேசியிருப்பேன் என்று கூடத் தெரியவில்லை.

  ஏன் நான் இவன் விஷயத்தில் மட்டும் இவ்வளவு இயல்பு பிறழ்ந்து நடந்து கொள்கிறேன் என்று எனக்கே என் மீது வெறுப்பாக வந்தது.

   ஆனாலும் அவன் பேசிய விதத்தில் இருந்து அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று ஒரு ஓரத்தில் நிம்மதியாக இருந்தது. என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. எது எப்படியோ இனி அவனை என் வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்று தோன்றியது.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் அது வாழ்க்கை இல்லையே. விதி என்ற வார்த்தையும் வந்திருக்காது. விதிக்கு என்னுடன் விளையாடுவது மிகவும் பிடித்துவிட்டது போலும்.......

(நெருங்குவேன்  ....)

 


Quote

Leave a reply


 
Preview 0 Revisions Saved
Share: