இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.
You need to log in to create posts and topics.

அன்பு 11

அன்பின் வழியது உயிர்நிலை

அன்பு 11

"அன்பு உன்னை எங்க கூட்டிட்டு போனா?" , மேஜரின் கேள்வியில் வியந்தவன்,

"உங்களுக்கு எப்படி தெரியும் சார்?"

"அவ உன்னை நேத்து வெளில கூட்டிட்டு போனேன்னு சொன்னா, ஆனா எங்கன்னு சொல்லல. அதான் கேட்டேன்."

"சின்னமன்நாயக்கம்பட்டில இருக்குற தோட்டக்கலை துறை ஆபிசுக்கு போனோம் சார். நான் செவ்வந்தி,சாமந்தி தோட்டம் போட்ருக்கேன். அது மட்டும் தான் இருக்கு.அவள் கூட்டிப்போனதில் எனக்கு நிறைய விவரம் கிடைச்சது சார், என் நிலத்தில் கொஞ்சம் ஒதுக்கி, ரோஜா போடலாம்ன்னு இருக்கேன். கூடவே கறவை மாடு வாங்கி இருக்கேன். இனி பால் வியாபாரம் பார்க்கணும். கடன் இருக்கு சார். அடைக்கணும். அருவிப்பிள்ளை தான் உதவி பண்ணறேன்னு சொல்லுச்சு. பண்ணியும் குடுத்துருச்சு."

அவனின் உண்மை அன்பை கண்ட மேஜர், வேலைபார்க்கும் பெண்ணிடன் இருந்து குழந்தையை வாங்கி தோளில் போட்டுகொண்டு,

"உன்னை பார்க்கவே இல்லயே லட்டு, என் செல்லக்குட்டி.. ",என்று கொஞ்சிவிட்டு, "இவளைப்பற்றி சொன்னாளா??"

"இல்ல சார்", என்றான்.

"அவ உங்களை பற்றி நிறைய சொல்லிருக்கா.. ஆனா தன்னை பற்றி சொன்னதே இல்லை சேகர். அவள் எனக்கு பொண்ணு மாதிரி. அவ பட்ட கஷ்டத்தை அவ வாயால கேட்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால நானும் அவளை கட்டாயப்படுத்தல."

"கண்டிப்பா அவ யாரு? அவ இங்க என்ன கஷ்டப்பட்டான்னு நான் கண்டிப்பா உங்களுக்கு சொல்றேன். ஆனா இன்னிக்கு இல்ல. இரண்டு நாள் கழிச்சு, அவ கிளம்பியதும் வந்து சொல்றேன் சார். அப்பறம் இந்த ரோஜாப்பூவை பத்தி எனக்கு எந்த கேள்வியும் இல்லை. எவனோ அதை பிச்சு போட்டிருப்பான். என் அருவிப்பிள்ளை அதை காப்பாத்தி தன்னோடவே வச்சிருக்கும்.", என்று குழந்தையின் கன்னத்தை கிள்ளி சொல்ல, அது கிளுக்கி சிரித்தது.

"உண்மையில் நீ சிறந்த நண்பன் தான் சேகர்.", என்று அவன் முதுகில் தட்ட, அவனோ பேய் முழி முழித்தபடி,

"சார், நீங்க என்னை என்ன வேணாலும் சொல்லுங்க, முதுகுல மட்டும் அடிக்காதீங்க சார். வலிக்கிது", என்று நெளிந்தபடி சொல்ல, ரவிக்குமார் சத்தமாக சிரித்தார். அவர் சிரிக்கும்போது குழந்தை மீசையை பிடித்து இழுக்க, அவர் " ஆ " வென்று கத்த,

சேகர் சிரிப்பு விரிந்தது.

"என் ரோஜாப்பூ..", என்று குழந்தையை கொஞ்ச,

"அடேய் கூட்டுக் களவாணிகளா.. ",என்று மேஜர் மறுபடி முதுகை நோக்கி கையை உயர்த்த," ஐயோ சாமி ஆளை விடுங்க", என்று சேகர் ஓடியே விட்டான்.

பெருமாள் சாமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்க, அடுத்த நாள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

அரை மயக்க நிலையில் இருந்த அவருடன் ஆடலரசு தங்கிக்கொண்டு, அம்மாவையும் தேனையும் வீட்டுக்கு அனுப்ப,

பெருமாள் சாமி கொஞ்சம் கொஞ்சமாக முனக ஆரம்பித்தார். தெளிவில்லாமல் அவர் முனங்க.அவர் அருகில் சென்று செவி மடுத்த அரசின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீ ஜவாலைகளை கக்க ஆரம்பித்தன.

அவனால் தந்தை பேசிய சொற்களை நம்பவே முடியவில்லை. அடுத்த இரு நாட்கள் இறுக்கமுடன் மருத்துவமனையில் தந்தையோடு கழித்தவன் கண்களில் ஆங்காங்கு அன்பருவி படவே செய்தாள். அதிலும் ஒரு பதினேழு வயது பெண்ணை பிரசவம் பார்க்க அனுமதிக்க, பிரசவம் முடிவதற்குள், அருவியின் அறிவுறுதலின் பேரில் மருத்துவமனைக்கு எதிரில் இருந்த மகளிர் காவல்துறை அதிகாரி அந்த பெண்ணின் பெற்றோரை விசாரணைக்கு அழைத்து செல்ல, அருவி அவர்களிடம்,

"புத்தகத்தை கொடுத்து உலகை கற்க வேண்டிய பெண்ணை, கல்யாணம் பண்ணி கொடுத்து, பிள்ளையை சுமக்க வைத்து இருக்கிங்களே.. நீங்க எல்லாம் உண்மையில் மனுஷங்க தானா? அவ பிரசவத்துல எவ்வளவு போராடினா தெரியுமா?? அந்த வலி தாங்கற வயசா அவளுக்கு?", என்று எரிச்சலாக பேச,

அரசின் கண்களுக்கு அவள் பேச்சு புலியின் உறுமல் போல இருந்தது.

இப்படியே இரண்டு நாட்கள் போனாலும், தந்தை இங்கே இருப்பது தெரிந்தும் அவள் வந்து பார்க்காத வைராக்கியம் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

அருவி சொக்கம்பட்டியில் தனது சேவை மருத்துவமனையையும் கையோடு துவங்கி விட்டாள்.

பக்கத்தில் இருந்த கற்பிணிப்பெண்கள் அனைவரும் அருவியை தேடி வரத்துவங்கினர்.

சேகர் அவன் தோட்டத்தில், மல்லியும், கனகாம்பரமும் தோட்டக்கலைதுறையின் அறிவுறுத்தல் படி நாற்றுகளை நட்டு பேணத்துவங்கினான். அவனால் மேஜரை சந்திக்க முடியாத அளவுக்கு, ஆடு,மாடு, பூக்கள், மார்க்கெட் என்று வாழ்க்கை சக்கரம் அதன் போக்கில் சுழல,

அரசு, மருது இன்னும் தேனை பார்க்க வராமல் இருக்க கண்டு கொதித்து போனான். எந்த நேரமும் அவன் வெடித்து சிதறும் நிலையில் வார்த்தைகளை மனதில் கோர்த்து இருந்தான்.

அன்று மாலைக்கு மேல் தான் மருத்துவமனையில் இருந்து வந்தாள் அன்பருவி. சோர்வாக தெரிந்த அவளை காண்கையில் மேஜருக்கு மனதில் என்னவோ செய்தது. அவள் பார்க்காத வலியோ கஷ்டமா இல்லை தான். ஆனாலும் ஏனோ அன்று மிகவும் அசந்து தெரிந்தாள்.

பிற்பகலில் அவளுக்கு ஏதோ சத்துக்கஞ்சியை எடுத்துக்கொண்டு முத்தம்மா வர, வாசலில் நிறுத்தி வாங்கி வைத்துவிட்டு, அருவி வந்த பின் வா என்று அனுப்பிவிட்டார்.

அன்று காலை வாக்கிங் போன போது, அவரை நிறைய பேர் பார்த்து கிசுகிசுபாக பேச, "அட சும்மா கிடங்களேன் டி சிறுக்கிகளா.. ",என்று அவர்களை கடிந்த முத்தம்மாவை முறைத்தவர், அவள் தான் தன்னை பற்றி ஏதோ சொல்லி இருக்க வேண்டும், அதனால் தான் கிசுகிசுகிறார்கள் என்று நினைத்தார்.

அதனால் இன்று உள்ளேயே விடாமல் அனுப்பி வைத்தார்.

இப்போது அவள் கொண்டுவந்த சத்துக்கஞ்சி நினைவுக்கு வர, அதை கொண்டுவந்து அருவியிடம் கொடுக்க,

அவளோ," ஐயோ அங்கிள் அவ்வா வந்துச்சா.. அது தான் இதை குடிக்க சொல்லி இம்சை பண்ணும் ",என்று சாதாரணமாக சொல்ல, அதையும் மேஜர் தவறாகவே புரிந்துகொண்டார்.

அன்று இரவு அருவி உறங்கச்செல்லும் நேரம் ஒரு பெண் பிரசவ வேதனையோடு வர, அதை கவனிக்க போய்விட்டாள்.

காலை எட்டு மணிக்கு தான் அந்த பெண்ணிற்கு பிரசவம் ஆனது, தாயையும் குழந்தையையும் நல்லபடியாக குடும்பத்திடம் ஒப்படைத்த பின் தான் அருவி வீட்டிற்கே வந்தாள்.

"மேஜர் அங்கிள், நைட் முழுசா முழிச்சிட்டேன். தூங்கவே இல்ல. யாராச்சும் வந்தா மட்டும் கூப்பிடுங்க. நான் ரெஸ்ட் எடுக்கிறேன். ",என்று உள்ளே போனாள் அவள்.

"சரி டா", என்று வாசல் ஈசி சேரில் அமர்ந்தார் .

"எங்க பாப்பாளை காணம்..", என்று உள்ளே வந்த முத்தம்மா கிழவியை பார்த்து முகத்தில் கடுமை வர,

"நீ எங்கே வந்த ?"

"என்னய்யா நீ வந்த நாள் தொட்டு என்னய உள்ளார விடவே மாட்டேங்கிற..", எரிச்சல் பட்டாள் கிழவி.

"நீ வம்பளக்கிற, அதான் சரி வராதுன்னு யோசிச்சேன்", என்றார். தான் அவளை தவிர்ப்பதை புரிந்து கொண்டதற்கு அவளை மனதினுள் மெச்சவும் செய்தார்.

"என்னய பார்த்தா அப்பிடி சொல்ற, இன்னிக்கு வரைக்கும் என் ராசாத்தி விசயம் ஒண்ண இந்த ஊருக்கு சொல்லியிருப்பேனா?? இந்த வீட்டு உப்பை தின்ன செருப்புய்யா நானு.. ",என்று சொல்லிவிட்டு மடமட வென்று வெளியேறினாள்.

'தப்பா நெனச்சிட்டோமோ', என்று வருந்தினார் மேஜர்.

யோசனையாய் அவர் அமர்ந்திருக்க, அவரை காண வந்தான் சேகர்.

"வாப்பா சேகர்.",என்று இன்முகமாக அவனை வரவேற்க,

"அருவிப்புள்ள இருக்கா சார் ",என்றான்.

"நைட் ஒரு கேஸ் பார்த்துட்டு இப்போ தான் தூங்க போறா.", என்றதும்..

"எங்க ரோஜாப்பூவை காணல.. ",என்று அவன் கண்கள் குழந்தையை தேட," நல்லா தவழ ஆரம்பிச்சுட்டா, அவளுக்குன்னு ஒரு ஆள் போட்டு பார்த்துக்க சொல்லிட்டா அன்பு. இப்போ சாப்பிட்டு விளையாடிட்டு இருப்பா. கூப்பிடவா? ",என்று கேட்க,

"வேணா சார். நான் அருவிப்புள்ள இருக்காது, செத்த உங்களோட பேசலாம்,வந்த நாளே கேட்டீகளேன்னு உங்களை பாக்க தான் வந்தேன்."

"இப்போ மட்டும் என்ன? வா வெளிய போயிடலாம், வண்டி வச்சிருக்கியா இல்ல நான் காரை எடுக்காவா?"

"நான் மாடு மேச்சு, அங்கிட்டு பத்திவிட்டு வந்தேன். நடக்கலாம்னா என்னோட அப்படியே பொடிநடையா வாங்க, என் தோட்டத்தை பார்த்தப்பல இருக்கும்."

"சரிப்பா.. இரு.", என்று வேலைக்கார பெண்ணிடம் சொல்லிவிட்டு அவனோடு இணைத்து நடந்தார்.

"அன்பருவி.. பேருக்கு ஏத்தாப்ல அன்பை கொட்டி தீக்குற அருவி தான் சார் அவ, அவளுக்கு இப்படி அன்பை காட்ட சொல்லிக்கொடுத்து எங்க ஜமீந்தாரிணி அம்மா.. செல்லமா ராணிமா..அவங்க பேரு பொற்கொடி. அவங்க அண்ணன் தான் ஆடலரசோட அப்பா பெருமாள் சாமி.|

"அப்போ அரசு அன்போடு மாமா பையனா??"

"இல்ல.. ",என்றான் சேகர்.

"என்னப்பா இப்படியும் சொல்ற அப்படியும் சொல்ற?", குழப்பத்தில் கேட்டார் ரவி.

"சார் உண்மையில் அருவி அவங்க பொண்ணு இல்ல. அவங்க தத்து எடுத்த பொண்ணு."

"ஓ அப்படியா. ",என்று அவர் யோசனையாக சொல்ல,

"ஆமா. அது தான் பிரச்சனையே. கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தோட இருந்த அருவியை ஊர் பேர் இல்லாம ஆக்கத் தான் அன்னைக்கு அரசோட அம்மா இங்க இருந்து அவளை கூட்டிட்டு போய்ட்டாங்க. எங்க? என்ன? ஏது? எப்படி போனா? எதுவுமே இங்க யாருக்கும் தெரியாது."

"அந்த பொம்பளை ரொம்ப மோசம் சேகர்,ஒரு தரம் தான் அவங்களை நேர்ல பார்த்தேன். ஜென்மத்துக்கும் அவங்க முகத்துல விழிக்கவே கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிட்டேன்."

"கடவுள் உங்க வேண்டுதலை கேட்கலை சார். தோ.. அந்தம்மா வராங்க.. அவங்க தான் பெரிய வீட்டு அம்மா. ஜமீன்தார் வீட்டுக்கு அப்பறம் இந்த ஊரில் அருமை பெருமையா இருக்குறது இவங்க குடும்பம் தான் . அதாவது பெருமாள் சாமி ஐயா குடும்பம், அவங்களுக்கு மூணு பிள்ளைக, மூத்தது முல்லை, அடுத்து ஆடலரசு இளயது செண்பகம். ஆனா இந்த அம்மா தான் அந்த வீட்ல எல்லாமே, இன்னிக்கு இல்ல, அந்த வீட்டுல மருமகளா அடியெடுத்து வச்ச நாளே, மாமியாரை மூலையில் போட்டிருச்சு. நெனச்சதை கொஞ்சமும் தயங்காம செய்யும்."

"நான் தான் நேர்லயே பார்த்தேனே", என்ற மேஜரின் குரலில் கசப்பு.

அதற்குள் மங்கையர்க்கரசி அவர்களை சமீபித்து இருந்தார்.

மேஜரையும் சேகரையும் ஒரு பார்வை பார்த்தவர், சேகரை இளக்காரமாக பார்த்து,"ஏலே.. நீ அந்த இசக்கி மவன் தானே.. இங்க என்ன பண்ணிட்டு திரியிற, பொழுதோட மாடு மேச்சு புழச்சுப்போ..", என்று ஏளனம் பேச,

கடுப்பான சேகர், "ஆத்தா.. நானெல்லாம் இப்போ பூ விவசாயியாகும். பாத்து பேசுறது.. ஏன்னா.. உங்க அளவுக்கு இல்லனாலும் நானும் தோட்டம் காடு வச்சிருக்குறவன் தான்.",என்று மறுமொழி கூற,

"ஏண்டா டேய்.. அப்பப்போ என் பிள்ளையோட சுத்தி ஓசி சோறு திங்கிற நாயி.. வாயை பாரு..", என்று அவள் வாய்க்கு வந்ததை பேச,

மேஜர் கடுப்போடு வாய் திறக்க வந்தார். அவரை அடக்கிய சேகர், தூரத்தில் புல்லட்டில் வரும் அரசை காட்ட, அவரும் அமைதியானர்.

ஆனால் பின்னால் கவனம் இல்லாமல் மங்கை வாய்க்கு வந்ததை சொல்லி சேகரை திட்ட,சேகர் பொறுமையாக நின்றான் என்றால், பின்னால் தாண்டவம் ஆட தயாராக நின்றான் ஆடலரசு.

பெருகும்..

★★★★★

ஜெயலட்சுமி கார்த்திக்
© All rights reserved

அன்புடன் ஜெயலட்சுமி கார்த்திக்

Waiting for next update

நன்றி சரண்யா சிஸ்

அன்புடன் ஜெயலட்சுமி கார்த்திக்