இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் nandhavanamforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

Register with us by filling out the form below.
You need to log in to create posts and topics.

அன்பு 2

அன்பின் வழியது உயிர்நிலை

அன்பு 2

நேராக வண்டியை கிழக்கில் மலைப்பக்கம் விட்டான் ஆடலரசு. ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, மேட்டில் இருந்த பாறை மீது ஏற, அங்கே பக்கத்தில் மழை வந்தால் மலையில் இருந்து வரும் நீரை தேக்க, இருந்த தடுப்பணையில், மூன்று நாளைக்கு முன் பெய்த மழையால் தண்ணீர்  நன்றாகவே தேங்கி இருந்தது.

நாலு கல்லை பெறக்கி கையில் வைத்தான்.  முகத்தில் ஏக குழப்பம்.. 'இதென்ன சின்ன பிள்ளையை வச்சிட்டு நிக்கிறா இந்த  சோத்துப்பானை..', அப்போது தான் முத்தம்மா கிழவி ஏதோ சொன்னது மண்டையில் உறைத்தது.

'அந்த கிழவி ஏதோ சொல்லிச்சே.. என்ன.. பிள்ளை பிள்ளையோட வந்திருக்குன்னு தானே சொல்லுச்சு.. நான் சிநேகிதகாரவுகன்னு நெனச்சா.. இதென்ன நெசமவே சின்ன குட்டி ஒன்னை தூக்கிட்டு வந்து நிக்கிறா.. இவளை என்னத்த சொல்றது.. நாமளும் அவளை பார்த்தே பல வருச மாச்சு.. படிக்க போனா ஊருக்கு வரக்கூடாதுன்னு எந்த பொறம்போக்கு பய அவகிட்ட சொன்னதுன்னு தெரியல..', என்று மனதில் நினைத்ததெல்லாம் புலம்பியபடி கையில் இருந்த கல்லை தூக்கி தண்ணீரில் எரிய,

"ஏய்... யாரு டா அது.. ?",என்று குரல் கொடுத்தபடி வந்தான் அவன் சேக்காளி
சேகர்.

"ஓய்.. கொழுப்பு கூடிபோச்சோ.. என் வண்டியை பாத்துபுட்டு இந்த கேள்வி கேக்குற..ஏத்தமா டா உனக்கு."

"ஏ அரசு.. நான் வண்டியை பாக்கவே இல்ல டா.. என்ன மொட்ட வெய்யில்ல மொட்ட பாறைல.. உனக்கென்ன டா இங்க வேலை.."

"நீ இங்க எந்த கலெக்டர் உத்யோகம் பாக்க வந்த?"

"டேய்.. அந்த இத்துப்போன வெள்ளாடு ரெண்டும் பிச்சுக்கிட்டு ஓடி வந்துருச்சு டா.. நானே அரைமணி நேரமா தேடிக்கிட்டு திரியிறேன்."

"இங்க தான் தண்ணிய குடிச்சுப்புட்டு நினல்ல படுத்து கடக்கும் பாரு.. நீ தான் அதுக்கு கீரையா வாங்கி அடைக்கிறியே.. மேய வந்திருக்காது. உன்ன அலய விடத்தான் ஓடிருக்கும்."

"திமிரெடுத்தது டா அது. காலைல கட்டில்ல கடக்கயில வேட்டிய பிடிச்சு இழுத்துபுட்டு டா. எதிர்வீட்டு செல்வி அப்பதான் பாத்திரம் விளக்க வந்திருப்பா போல, பாத்து சிரிச்சுப்புட்டா டா.", சங்கடமாக சொன்னான்.

"அதுக்கு வெள்ளாடை போட்டு அடிச்சியாக்கும்..", அரசின் குரலில் அவ்வளவு நக்கல்.

"இல்ல டா. அது சண்டை போடற கறுப்பாடோட கட்டிவிட்டிட்டேன். அதான் பிச்சுக்கிட்டு ஓடி வந்துடுச்சு."

"ரெண்டுன்ன..", சந்தேகமாக கேட்க,

"கூடவே அது ஆளும் ஓடியாந்துட்டு டா.."

ஆடலரசு சத்தமாக சிரித்தான். சேகரும் சிரிக்க..

"சும்மாவே இருக்க மாட்டியா சேகரு.. ஆமா நேத்து செவ்வந்தி பறிக்க ஆள் வரலன்னு சொன்னியே என்னாச்சு.."

'கூலி நெறய கேக்குறாங்க டா. அம்புட்டு பூவையும் வித்தாலும் தேறாது. அதான் நானும் ஆத்தாவுமே பறிச்சிட்டோம்."

"பாத்து டா.. ஆத்தாக்கு சேராம போயிறப் போவுது."

"அடப்போடா.. அதை பார்த்தா வெவசாயம் பாக்க முடியுமா?''

"சர்தான். நான் எங்க வீட்ல வேலை செய்ற கோவிந்தம்மாவை வர சொல்லவா?"

"ஏன் உன் வீட்ல வேலைக்கு ஏதும் பஞ்சமா?"

"இல்ல டா.. அது பிள்ளைக்கு அடிக்கடி முடியாம போவுது, எங்கம்மாவ பத்தித்தான் உனக்கே தெரியுமே.. நேரஞ்சாரமா வீட்டுக்கு விடறது இல்ல. பணமும் அதுக்கு பத்த மாட்டிது.. அதான் உங்காத்தான்னா கொஞ்சம் பதுவிசா வேலை வாங்கும்."

"எங்கத்தாவை நீ ஏப்பசாப்பன்ற..", என்றான் ஏற இறங்க அரசை பார்த்தபடி.

"நான் எப்படா அப்பிடி சொன்னேன்.. குத்திப்புடுவேன். ஒழுங்கா சொல்லு. கோவிந்தம்மாவை வர சொல்லட்டா.."

"ம்ம் அனுப்பு டா.. ரெண்டு பேரா பறிஞ்சு நேத்து கை பூரா வலி டா. கொஞ்சம் போல துணைக்கு இருந்தா கூட சர்தான்."

"சரி கிளம்புறேன்.. நீயும் ஆட்டை பத்திட்டு கிளம்பு.. பாரு உச்சி தாண்டிருச்சு. எதயாச்சும் தின்னு.. அப்ப தான் சாயந்தரம் ஏதாச்சும் வேலையை பாக்கலாம்."

"நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லாம கெளம்பிட்ட.."

"என்ன டா.."

"அதான்.. சம்மந்தமே இல்லாம இந்த மொட்ட வெயில்ல மொட்ட பாறைல என்ன பண்ற??", கேட்ட அவன் சாதாரணமாக நோக்க,

வெட்டவெளியை வெறித்தபடி, "சோத்துப்பானை வந்திருக்கா டா", என்றான்.

"என்ன டா சொல்ற.. எங்க ஆத்தா கூட சொல்லிச்சு. நான் தான் நம்பவே இல்லை. அந்த பிள்ளை இந்த ஊரையே மறைந்திருக்குமுன்னு நெனச்சேன்."

அவனை வினோதமான பார்வை பார்த்தவன் அரசு, "ஏண்டா, நாங்க எல்லாரும் இங்க இருக்கும் போது அவ ஏண்டா இந்த ஊரை மறக்க போறா?" என்று கேட்க,

'இவன்கிட்ட என்னத்த சொல்றது ',என்று குழம்பியவன், சட்டென்று எழுந்து, "சரிடா நான் அந்த பிள்ளையை போய் ஒரெட்டு பார்த்துட்டு வர்றேன். ",என்று கிளம்ப,

"அடே நில்லு, நான் பாட்டு கேட்டு இருக்கேன். நீ பெரிய இதாட்டம் போய்ட்டே இருக்க, தாய்மாமன் வீடு இங்க இருக்க, அந்த பிள்ளை ஏன் இந்த ஊரை மறக்கப் போகுது. முதல்ல எனக்கு பதில் சொல்லு."

"விடமாட்ட, சரி தாய்மாமன் இங்க இருக்க, இத்தனை வருஷம் அந்த பிள்ளை வெளியூர்ல இருந்துச்சே எப்படி.. போடா. "

சொல்லிவிட்டு நிற்காமல் நடக்க ஆரம்பித்தான் சேகர்.

"எங்க கிளம்பிட்ட, ஆட்டை பிடிக்கல?"

"உன்னோட சும்மா பேசிட்டு கிடந்தேனா? தோ பாரு அந்த முள்ளு மர நினல்ல படுத்து கிடக்கு ரெண்டும். கண்ணை நாலாபக்கமும் ஓடிக்கிட்டு தான் பேசிட்டு இருந்தேன். உன்னை மாதிரி, குதிரை கடிவாளத்தொட நான் சுத்த மாட்டேன்.",கடுப்புடன் அவன் சொல்ல,

"என்ன டா??', புரியாமல் அரசு கேட்க,

"அதை விடு. அந்த பிள்ளை வந்ததுக்கு நீ ஏன் மொட்ட பாறைல உக்காந்த?"

"அவ மட்டும் வரல."

"பின்ன?? கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாளோ?", மகிழ்ச்சியாக கேட்க,

"உன் மூஞ்சி.. பிள்ளையோட வந்திருக்கா..", என்று சொல்லிவிட்டு நீரின் மேல் பார்வையை பதித்தான்.

சேகர் வேகமாக கிளம்ப, "டேய் என்ன டா சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு கிளம்புற..'

"பின்ன, வீட்ல மாமரத்துல காலைல காய் இருந்துச்சு, போய் எடுத்துட்டு இதுகளை அங்கே கட்டிட்டு என் சேக்காளி சோத்துப்பானையை பார்க்க போவேணாமா? திங்க கொண்டு போனாலே பிள்ளை மூஞ்சில பல்ப் எரியும். பார்த்து எம்புட்டு வருசம் ஆச்சு. போய்ட்டு வரேன் டா.", கரிசனையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

'என்னை பத்தி கேட்டுட்டு பதில் கூட வாங்காம போறான் பாரு. அந்த சோத்துப்பானைக்கு ஏத்த ஈயச்சட்டி.. போடா', என்று மனதில் அவனை அர்ச்சனை செய்து விட்டு ஒரு மரத்தின் நிழலில் சாய்ந்து அமர்ந்தான்.

'இந்த மாமனை மறந்துட்டாளோ.. குச்சு கட்டின கொஞ்ச நாளில் இங்கிருந்து போனவ.. பாக்கவே இல்ல. இப்போ பாத்தும் பேச முடியல. என்னவோ தடுக்குது.'

அவன் அவனின் நினைவுகளோடு உழன்றுகொண்டிருக்க,அந்த ஜமீன் வீடு வாசலில் ஒரு லாரி வந்து நிற்க, பின்னாலே கார் ஒன்றும் வந்தது.

அதிலிருந்து ஐம்பது வயது மதிக்க தக்க, ஒருவர் இறங்கி வர, அவரோடு இருபதுகளின் பின் பாதியில் இருந்த ஒருவனும் வந்தான்.

வாசல் திண்ணை தூணில் சாய்ந்து அன்பருவி அமர்ந்திருக்க, அவளுக்கு எதிர் தூணில் சாய்ந்து முத்தம்மா அவ்வா கையில் குழந்தையை வைத்திருந்தார்.

"அன்பு மா.. என்ன டா இங்க வர்றதுக்கு முன்னாடி சொல்ல சொன்னேன்ல.. இப்படி வாசல்ல வந்து இருக்கியே.. ",என்று பரிதவிப்புடன் பேசிய அவர், ஜமீன் குடும்பத்தின் ஆஸ்தான வக்கீல் வைத்தியலிங்கம்.

"வைத்தி அங்கிள். நல்லா இருக்கீங்களா?", என்று அன்பாய் அவள் விசாரிக்க, கொத்து  சாவியை அவள் கையில் கொடுத்து வீட்டை திறந்து உள்ளே வரச்சொன்னார்.

வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்த போது,அன்பருவியின் கண்கள் அருவியை பொழியத் துவங்கின. அவள் உணர்வுகள் புரிந்த முத்தம்மா அவ்வாவும், வைத்தியலிங்கமும் அமைதி காக்க, கூட வந்த அந்த வாலிபன், "மேடம் திங்ஸ் எல்லாம் இறக்கி எங்க வைக்க சொல்லட்டும்?", என்று நேரடியாக அவளிடம் கேட்டுவிட்டு, தன் சீனியர் முறைத்த பின் தான் ,'தான் ஏதோ தவறு செய்து விட்டோம்', என்று அவனுக்கு புரிந்தது. அமைதியாக வெளியேறினான்.

வாயிலை கடந்து இருந்த பெரிய கூடத்தில் இன்றும் அவள் ஆசையாக ஆடும் ஊஞ்சல் அவளை பார்த்து சிரிக்க, அவள் தான் இன்னும் அழுத வண்ணம் இருந்தாள். அந்த ஊஞ்சல் சங்கிலியை தொட்டதும் அதன் க்ரீச் சத்தத்தில், மெல்ல நிமிர்ந்து பார்க்க, உத்திரம் முழுவதும் அவளுக்காக அவள் தந்தை வரைய வைத்த ஓவியங்கள் இருக்க, அதை செய்ய சொன்ன தந்தை இல்லயே என்ற ஏக்கம் ஏனோ இன்று அவளை ரணமாக வலிக்க செய்தது.

முத்தம்மா அதற்குள், வேலைக்கு இரு பெண்களை அமர்த்தி, வீட்டை சுத்தம் செய்ய சொல்லி, வந்த பொருட்களை அடுக்கும் வேலைக்கு பிள்ளையுடன் மேற்பார்வை பார்க்க போய்விட்டாள்.

அவள் நகர்ந்ததும், "குட்டிப்பொண்ணையும் கூட்டிட்டு வருவன்னு நினைகலை அன்பு மா. ",அன்பின் மனதை திசை திருப்ப பேச்சுக்கொடுத்தார் வைத்தி.

"அவள் என்னோடவே இருக்கட்டும் என்று கூட்டிட்டு வந்துட்டேன் அங்கிள். ",அவருக்கு பதில் சொல்லியபடி தன்னை சமன் செய்து கொண்டாள் அன்பருவி.

"மேஜர் சார் எப்போ வராரு.?"

மேஜர் என்றதும் முகம் பிரகாசமடைய, "மும்பைல ஒரு பத்திரப்பதிவு விஷயமா போயிருக்காரு. அடுத்த வாரம் வந்துடுவார்ன்னு நினைக்கிறேன் அங்கிள்."

"அவரும் உன்னோட வந்துடுவாருன்னு நினைச்சேன் அன்பு மா."

"அவரு என்னை சென்னைல தான் இருக்க சொன்னாரு. நான் தான் இங்க கொஞ்சம் வேலை இருக்கே, அவர் வர்றதுக்கு முன்னாடி பார்த்து வைக்கலாமேன்னு வந்தேன்.", என்று கண்களை சுழல விட்டபடி சொன்னாள்.

"சரி டா. நான் நாளைக்கு சொத்துப் பத்திரம், குத்தகை பத்திரம் அப்பறம் கணக்குகள் எல்லாம் கொண்டு வரேன். நீ வந்துட்டன்னு
சொன்னதும், வாங்கி  வச்ச பொருள் எல்லாத்தயும் எடுத்து லாரில போட்டு கொண்டு வந்துட்டேன்."

"இருக்கட்டும் அங்கிள், நான் திண்டுக்கல் வரைக்கும் ட்ரெயின்ல வந்துட்டு, உங்க ஆஃபீஸ்ல வந்து பார்க்க தான் நினைச்சேன்." என்று நிறுத்த,

"அப்படியே அங்க வர பிடிக்காட்டியும் ஒரு வாடகை கார்ல வந்திருக்கலாமே அன்பு மா. மூணு கிலோமீட்டர் பச்சை பிள்ளையை தூக்கிட்டு நடந்து வந்திருக்க, அதுவும் திண்டுக்கல்ல இருந்து டவுன் பஸ்ல வந்திருக்கியே.. உன்னை நான் என்ன சொல்ல.."

"என்ன சொல்லணும் அங்கிள், ஏன் டவுன் பஸ்னா கேவலமா?? இல்ல நடந்து வரக்கூடாதா??"

"வரலாம், கேவலம் எல்லாம் இல்ல அன்பு மா. ஆனா நீ யாரு.. உன் வேலை, உன் படிப்பு, உன் குடும்பம், உன் சொத்து இதெல்லாம் இருக்கு இல்லயா??"

"நான் இத்தனை நாள் எங்க இருந்தேன்னு மறந்துட்டு பேசுறீங்க அங்கிள்.",என்றாள் குரல் இறுக,

அவள் வலக்கரத்தை பிடித்தவர், "அன்பு மா.. மனசுல எதையும் வச்சிக்காதே டா. எனக்கு உன் உணர்வுகள் புரியுது. ஆனா.. "

"ஒரு ஆனாவும் வேண்டாம். நீங்களும் மேஜரும் சேர்ந்து என்னை இங்க வரும்படி பண்ணிட்டிங்க. இல்லன்னா இந்த மண்ணை மிதிச்சிருக்கவே மாட்டேன்.", சொன்னவளின் குரலில் கோபத்தையும் தாண்டிய வெறுப்பு. ஆனால் அடுத்தநொடி சாந்தமாகி, "யாரோ செஞ்சதுக்கு ஊர் மேல கோவப்பட்டு என்ன ஆக போகுது.?? விடுங்க. உங்களுக்காகவும், மேஜருக்காகவும் தான் இனி இந்த ஊர் வாசம்."

முத்தம்மா அவ்வா, தூங்கிவிட்ட குழந்தையோடு வந்து நிற்க,

"குழந்தை தொட்டில் கொண்டு வந்திருக்காங்களா பாருங்க அவ்வா.. இல்லனா என் பையில காட்டன் சேலை ஒன்னு இருக்கும், எடுத்து உத்தரத்தில் அவளுக்கு தூளி போடு அவ்வா.."

"உன்னை இப்படி இந்த வீட்ல தூளி போடல, உன் பிள்ளையை போடனும்முன்னு  நெனைச்சேன் ராசாத்தி."

"இவ என் பொண்ணு தான் அவ்வா.. கொண்டு போய் சந்தோசமா தூளில போடு.", என்று சிரித்தபடி சொல்ல, இதை அண்டையில் இருந்து கேட்ட ஆடலரசு உள்ளம் துவண்டு, வந்த சுவடு தெரியாமல் திரும்பிப்போனான்( இவன் எப்போ இங்க வந்தான்🤔🤔) .

அவ்வா இந்த பக்கம் நகர, "ஏம்மா இந்த அம்மாவை எவ்வளவு நம்பலாம். ஏன்னா எனக்கு உன்னை இங்க தனியா விட பயம்மா இருக்கு. யாரையும் நம்ப முடியல."

"பழசை நினைச்சுட்டே இருந்தா அப்படி தான் அங்கிள். விடுங்க. நீங்க எப்படி மாசா மாசம் என்னை பார்க்க நேர்ல வருவீங்களோ அப்படி மாசம் ஒரு தடவை அவ்வா போன் போட்டு என்னோட பேசிடும். இருந்தும் வாரத்துக்கு ஒரு லெட்டர் போடும். இங்க இருந்து லெட்டர் போட்டா தெரிஞ்சு போய்டும்னு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் போஸ்ட் ஆஃபீஸ்ல வந்து போடும். இந்த ஊருக்கு வந்தே தீரணும்னு சொன்னப்போ நான் ஒத்துகிட்ட சில காரணங்கள்ல அவ்வாவும் ஒன்னு. அது எனக்கு நிஜத்துலயே பாட்டி மாதிரி தான். என் வீட்ல வேலை செஞ்ச ஒரு ஆளா நான் அவ்வாவை பார்த்ததே இல்ல அங்கிள்.", அவருக்கு நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு திரும்ப, அவ்வா கண்ணீரோடு," கண்ணு, என் ராசாத்தி", என்று அணைத்து கண்ணீர் விட்டார்.

இதை மகிழ்வோடு பார்த்துவிட்டு, சொல்லிக்கொண்டு வைத்தியலிங்கம் தன் ஜூனியரோடு கிளம்ப, சைக்கிளை மிதித்தபடி உள்ளே வந்தான் சேகர்.

"ஏ சோத்துப்பானை... ",என்று கத்தியபடி வந்தவனை, முகம் கொள்ளாத சிரிப்புடன் பார்த்த அருவி, "டேய் சேத்துக்குட்ட.." என்று அவனை நோக்கி நடக்க, அவன் துண்டில் வைத்திருந்த மாங்காயை எடுத்து காட்டி, ஒளித்துக்கொள்வது போல செய்கை செய்ய,

"கொடுடா கொடுக்காபுளி.. தா டா", என்று சண்டை போட்டு மாங்காயை பிடுங்கிய மங்கை இன்னும் அவன் பார்வைக்கு பத்து வயதில், கொடுக்காபுளி அடிக்க கல்லை வீசி, அது பக்கத்தில் வேலை செய்தவர் மீது பட, பயந்து ஓடிய குட்டி அருவியை நினைவு படுத்த, சிரித்தபடி இன்னொரு துண்டில் இருந்து கொடுக்காபுளி எடுத்து தர, "டேய் சேகரு.. சேக்காளின்னா அது சேகர் தான் டா", என்று அவளின் அக்மார்க் வசனத்தை கொடுத்துவிட்டு , திண்ணையில் அமர்ந்து அவன் தந்தவைகளை உள்ளே தள்ள,

"ஆமா எங்க உன் பாப்பா..??"

"உள்ள தொட்டில்ல தூங்குறா டா சேகரு.. உனக்கெப்படி தெரியும்??"

"ஆடலரசு தான் சொன்னான்..", பொறுமையாக சேகர் சொல்ல, அருவிக்கு புரை ஏறியது,

தண்ணீரை கொண்டு வந்து கொடுத்த அவ்வா, அவள் மாங்காய் தின்பதை பார்த்து திட்ட, பதில் சொல்லாமல் எல்லாவற்றையும் வைத்து விட்டு, உள்ளே சென்றாள் அன்பருவி, அவளிடம் அந்த நிமிடம் பாறையின் கடினம்.

-பெருகும்

சேக்காளி- நண்பன்(சேர்+ஆள்)

நேரஞ்சாரம்- குறிப்பிட்ட நேரத்தோடு

வேறு வார்த்தை புரியவில்லை என்றால் கமெண்ட்டில் கேளுங்க சொல்றேன். இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க நண்பர்களே.

ஜெயலட்சுமி கார்த்திக்

அன்புடன் ஜெயலட்சுமி கார்த்திக்

Nice. Aruvi has a flashback it seems 

Very interesting

Thank you

அன்புடன் ஜெயலட்சுமி கார்த்திக்